தொட்டதற்கெல்லாம் நாம் ஆச்சரியத்துடன் வியந்து பார்க்கும் அமெரிக்காவில், கல்வியின் தரம் எப்படி இருக்கிறது? மாணவர்களின் தகுதி எப்படி மதிப்பிடப்படுகிறது? எந்த முறையில் கற்பிக்கிறார்கள்?
இவற்றுக்கான விடையை அறிந்துகொள்ள நாம் அமெரிக்கா செல்வதென்பது இயலாத காரியம். அமெரிக்கா சென்றுவந்த ஆசிரியர்களின் அனுபவத்தைக் கேட்டால், அந்த நாட்டுக் கல்வித் தரத்தைப் பற்றி ஓரளவுக்கு அறிந்துகொள்ளலாம்.சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் இயங்கி வரும் யுனெடெட் ஸ்டேட்ஸ் இந்தியா எஜுக்கேஷனல் ஃபவுண்டேஷன் (USIEF) ஏற்பாடு செய்திருந்த டீச்சிங் எக்ஸலென்ஸ் அண்ட் அச்சீவ்மெண்ட் (TEA) நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்று, அங்கேயே சில வாரங்கள் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளிகளில் பயிற்சி பெற்றுத் திரும்பியிருந்த சென்னையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மஞ்சுளா, சிபி செபாஸ்டியன் ஆகியோரைச் சந்தித்தோம்.
மஞ்சுளா, இயற்பியல் ஆசிரியை, அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, சென்னை
“TEA நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டவுடன் அதற்கு விண்ணப்பிக்க ஆர்வமானேன். எங்கள் பள்ளியிலிருந்து நானும், மற்றொரு ஆசிரியையும் விண்ணப்பித்தோம். இதில் நான் தேர்வு செய்யப்பட்டேன். இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஒரே பள்ளியில் முழு நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்; 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பாடம் நடத்துபவர்களாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனை. பட்டப் படிப்புடன், ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, எழுதத் தெரிந்திருக்கவேண்டும்.
அத்துடன், TOEFL போன்ற ஆங்கிலத் திறனறித் தேர்வில் சிறப்பிடம் பெற்றிருக்கவேண்டும். தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்வானோர் மட்டுமே அமெரிக்கா செல்ல முடியும்.
TEA திட்டத்துக்காக அமெரிக்காவில் நான் 50 நாட்கள் தங்கியிருந்தேன். என்னுடன் 40 நாடுகளைச் சேர்ந்த 96 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஒஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பயிற்சி பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அமெரிக்கப் பள்ளிகளுக்கும், இந்தியப் பள்ளிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள் உண்டு. சிறந்த ஆசிரியராக விளங்க என்ன செய்யவேண்டும் என்பதிலிருந்து, கற்றலில் புதுமையைப் புகுத்துவது எப்படி என்பது வரை பல விஷயங்கள் குறித்தும் எங்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டன. பல்வேறு பள்ளிகளுக்கும் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். இந்தியா போன்ற நாடுகளில் இருப்பதுபோல், நிறைய மாணவர்கள் நிறைந்த வகுப்பறையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனிப்பைக் கொடுக்கும் வகையில் எப்படிப் பாடம் நடத்துவது? சுவாரஸ்யமாக மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது எப்படி? என்பது பற்றியெல்லாம் விரிவாக விளக்கமளித்தனர்.
மாணவர்களுக்கு போரடிக்காமல் வகுப்பை நடத்துவதற்காக பல்வேறு வகையான தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
நம் நாட்டின் கலாசாரம், பள்ளிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள், கல்வி முறை, பெற்றோரின் விருப்பங்கள் போன்றவற்றை அமெரிக்க மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டதுடன், அந்த நாட்டுக் கலாசாரங்களையும், கல்வி முறைகளையும் அறிந்து கொண்டேன்.
வகுப்பறைகளில் நடைபெற்ற கருத்தரங்கங்கள், விவாதங்களைத் தவிர, களப்பணிக்காக நாங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்து பழகவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தனர்.
அமெரிக்காவின் முக்கியப் பிரமுகர்கள் எங்களுக்கு விருந்து அளித்தனர். வார இறுதி நாட்களில் அங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களைச் சென்று பார்க்கவும் ஏற்பாடு செய்திருந்தனர். இது ஒரு மறக்க முடியாத அனுபவம்!"
சிபி செபாஸ்டியன், கணித ஆசிரியர், கேந்திரிய வித்யாலயா, கில் நகர், சென்னை.
கேந்திரிய வித்யாலயாவின் இணையதளத்தில் TEA பயிற்சித் திட்டம் பற்றி வெளியாகியிருந்த செய்தியைப் பார்த்து விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. என்னுடன் சேர்த்து இந்தியாவிலிருந்து மொத்தம் 6 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாங்கள் அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி இறுதியில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டோம்.
கற்றல் முறையில் புதுமைகளைப் புகுத்த வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை மையமாக வைத்து நாங்கள் பயிற்சியைத் தொடங்கினோம். பயிற்சியின் முதல் மூன்று நாட்களுக்கு, அமெரிக்க கலாசாரம், கல்வி மற்றும் வரலாறு குறித்து நிபுணர்கள் எடுத்துரைத்தனர். பயிற்சிக்கென வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.
என்னுடன் சேர்த்து 17 பேர் விண்ட்ராப் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்தோம். 125 ஆண்டு காலப் பழம்பெருமை வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறைப் பேராசிரியர் ஆங்குலோ, ஒருங்கிணைப்பாளராக இருந்து எங்களை வழிநடத்தினார். அமெரிக்காவில் நாங்கள் தங்கப்போகும் ஆறு வாரங்களுக்கான நடவடிக்கைகள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு எங்களுக்கு முன்கூட்டியே அளிக்கப்பட்டன. எங்களுக்கென ஒரு லேப்டாப் தரப்பட்டது. அதிலிருந்து ஸ்கைப் மூலமாக இந்தியாவில் இருக்கும் எங்கள் குடும்பத்தை தொடர்புகொள்ளவும் ஏற்பாடு செய்துதரப்பட்டது.
முதல் நாள் பயிற்சியில், ராக் ஹில்லில் உள்ள நார்த் வெஸ்டர்ன் உயர்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அப்பள்ளியின் வகுப்பறைகளைப் பார்த்தபோது அசந்து போனேன். புரோமீதியான் பலகை, லேப்டாப், புரஜக்ட்டர் என்ற அனைத்து நவீனக் கருவிகளும் அங்கிருந்தன. மாணவர்கள் தங்களுடன் ஐ-பாட் மற்றும் சயின்டிபிக் கால்குலேட்டரை வைத்திருந்தனர். ஒவ்வொரு பள்ளியிலும் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமும், பயிற்சியாளர்களும் இருந்தனர். காலை 8.30 மணி முதல் மாலை 3.30 வரை நாங்கள் இந்தப் பள்ளியில் ஏழு தினங்களைக் கழித்தோம். அப்பள்ளி மாணவர்களுடன் கலந்து பழகி, அவர்களுக்கு பாடம் நடத்தினோம்.
அமெரிக்கப் பள்ளிகள் முழுக்க முழுக்க மாணவர்களைச் சார்ந்திருக்கின்றன. மாணவர்களுக்கு அங்கு முழு சுதந்திரம் உள்ளது. கணிதத்தைப் பொருத்தவரை, எல்லா ஃபார்முலாக்களையும் மாணவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் கணக்குகளுக்குத் தீர்வு காண்கிறார்கள். எதுவுமே அங்கு மாணவர்களுக்கு கட்டாயம் இல்லை. அவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே பாடம். லேப்டாப் போன்ற நவீனக் கருவிகளை வகுப்பில் பயன்படுத்தவும் சுதந்திரம் உள்ளது.
இணையதளங்கள், அனிமோட்டோ, ஐபாட், லேப்டாப் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கும் முறைகள் பற்றியும் எங்களுக்கு நிபுணர்கள் பயிற்சியளித்தனர். பாடங்களைத் திட்டமிடுதல், செயல்பாடுகள் மூலம் கற்பித்தல், ஒவ்வொரு பாடத்துக்கும் புராஜக்ட்டுகள் செய்து கற்பித்தல், ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்த்துக் கற்பித்தல் போன்ற நடைமுறைகளையும் விளக்கினர்.
விண்ட்ராப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், என்னுடைய சக பயிற்சியாளர்கள், கல்வியாளர்களுடன் கல்வி சார்ந்த விஷயங்கள் குறித்த விவாதங்கள், கருத்தரங்குகள் அடிக்கடி நடத்தப்பட்டன. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அவ்வப்போது எங்களை அழைத்து விருந்து கொடுத்து பரவசப்படுத்தினர். நாங்கள் தங்கியிருந்த இடத்தின் இயற்கைக் காட்சிகளை ரசிக்கவும், சுற்றுலா செல்லவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
இந்த அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைக்க உறுதுணையாக இருந்த எங்கள் பள்ளி முதல்வருக்குத்தான் நன்றி கூறவேண்டும்." PUTHIYATHALAIMURAI.COM
No comments:
Post a Comment