Wednesday, 2 October 2013

உதவிக் கல்வி அலுவலர் தங்கவேல் !

மது இல்லாத கிராமம்,மாற்றத்துக்குக் காரணம் -உதவிக் கல்வி அலுவலர் தங்கவேல் !
(by thehindu
எஸ். ராஜா செல்லம்)
தங்கவேல்
குடியை எதிர்த்து கேள்வி கேட்கும்படி குழந்தைகளைக் கொம்பு சீவினார். மது குடித்துவிட்டு வீட்டில் மல்லாந்து கிடக்கும் அப்பனையும் சித்தப்பனையும் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டார்கள் குழந்தைகள்.

அரசு அதிகாரிகளை மக்களின் சேவகர்கள் என்பார்கள். அப்படி எத்தனை பேர் அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறார்கள்? இதற்கு சொக்கத் தங்கமான உதாரணம் தங்கவேல்.

பேபினமருதஅள்ளி - தர்மபுரி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம். 45 வீடுகள், சுமார் 160 பேர். இதுதான் இந்த கிராமத்தின் மொத்த கையிருப்பு. அண்மைக்காலம் வரை இங்கே குடிப்பழக்கம் இல்லாதவர்களை எண்ணுவதற்கு ஒற்றைக் கை போதும். ஆனால் இப்போது, இவர் குடிப்பார் என்று ஒருவரைக்கூட விரல் நீட்டிச் சொல்லமுடியாது. இந்த மாற்றத்துக்குக் காரணம் உதவிக் கல்வி அலுவலர் தங்கவேல் !

தங்கவேலின் சாதனையை சொல்வதற்கு முன்பாக, இந்த கிராமத்தைப் பற்றி ஒரு சிறு ஃபிளாஷ் பேக். இங்கு நடுத்தர வயதில் உள்ள 54 பேருக்கு இப்போது தந்தை இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் பரலோகம் செல்ல பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்துவிட்டது குடி! அதற்காக அவர்களின் வாரிசுகள் மதுக்கடைப் பக்கம் போகாமல் இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. இதனால் அடுத்த தலைமுறையும் இங்கு நாசமாகிக் கொண்டிருந்தது.

இந்தச் சூழலில்தான் 2008-ல் இங்கே எதார்த்தமாக வருகிறார் உதவிக் கல்வி அலுவலர் தங்கவேல். அந்த மக்களின் வாழ்க்கை முறையை பார்த்து வேதனைப்பட்ட தங்கவேல், ‘குடி குடியை கெடுக்குமப்பா’ என்று எடுத்துச் சொன்னார். போதையை நேசித்துப் பழகியவர்களுக்கு போதனைகள் உரைக்குமா? ‘வந்துட்டாருப்பா காந்தி..’ என்று அவர் காதுபடவே கிண்டலடித்தது ஒரு கூட்டம். அதற்காக ஒதுங்கிவிடவில்லை தங்கவேல். தக்க நேரத்துக்காக காத்திருந்தார்.

பேபினமருதஅள்ளியில் அப்போது பள்ளிக்கூடம் கிடையாது. ‘பக்கத்து ஊருக்கு பிள்ளைகளை படிக்க அனுப்புவதாவது’ என்று தயங்கிய மக்கள், படிப்புக்கே முழுக்குப் போட்டு வைத்திருந்தார்கள். இதைப் புரிந்துகொண்ட தங்கவேல் தன் சொந்த முயற்சியில் 2010-ல் ஆரம்பப் பள்ளி ஒன்றை பேபினமருதஅள்ளிக்குக் கொண்டுவந்தார்.

குழந்தைகளுக்காக அல்ல.. குடிப்பழக்கத்திலிருந்து தங்களை மீட்பதற்கான திட்டக் களமாகத்தான் தங்கவேல் அந்தப் பள்ளிக்கூடத்தை கொண்டு வருகிறார் என்பது அப்போது ஊருக்குள் யாருக்கும் தெரியாது. பாடத்துடன் சேர்த்து குடியின் தீமைகளையும் கிராமத்துக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவைத்த தங்கவேல், தங்கள் வீட்டில் குடிப்பவர்களிடம் குடியை எதிர்த்து கேள்வி கேட்கும்படி குழந்தைகளைக் கொம்பு சீவினார். பள்ளிக்கூட ஆசிரியர் சொல்வதைக் குழந்தைகள் சும்மா விட்டுவிடுமா? மது குடித்துவிட்டு வீட்டில் மல்லாந்து கிடக்கும் அப்பனையும் சித்தப்பனையும் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டார்கள். குழந்தைகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் வெட்கித் தலைகுனிந்த பலரும் குடிக்கு முழுக்குப் போட்டார்கள். விடமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு சிலரும், ‘இனிமேல் யாரும் குடிப்பதில்லை; குடிப்பவர்களுக்கு இந்த கிராமத்தில் இடமுமில்லை’ என்று அண்மையில் சபதம் போட்டிருக்கிறார்கள்.

“எங்க ஊரு விவசாயம் செழிக்குற பூமி. காசு பணத்துக்கு பஞ்சம் இருக்காது. எங்காளுங்க கோவணத்துல காசை முடிஞ்சு வச்சிக்கிட்டு அது காலியாகுற வரைக்கும் சாராயத்தை குடிச்சு அழிச்சவங்க. இதனால பல வீடுகள்ல எந்த நேரமும் சண்டையும் சச்சரவுமாத்தான் இருக்கும். மூச்சு முட்டக் குடிச்சதால பல பேரு அல்ப ஆயுசுல போய்ச் சேர்ந்துட்டாங்க. அப்படியும் ஆளுங்க திருந்தல. எல்லாரும் குடிச்சுக் குடிச்சு நடுத்தர வயசுலயே செத்துப்போய்ட்டதால எங்க ஊர்ல தாத்தாக்களுக்கு பஞ்சம்’’ என்கிறார் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாது.

காசி என்ற இளைஞர் கூறும்போது, “உழைச்சு சம்பாதிச்ச பணத்தை எல்லாம் சாராயப் பானையிலேயே போட்டுட்டோம். இப்ப புள்ளைங்க கேள்வி கேக்குறப்ப பதில் சொல்லத் தெரியாம நிக்குறோம். எதுக்கு இந்தச் சனியன்னு விட்டுத் தொலைச்சிட்டோம். இப்ப நிம்மதியா இருக்கோம். ஒரு மாசமா நாங்க யாருமே குடிக்கிறதில்லை.எங்களுக்கு தங்கவேல் சார் சாமி மாதிரி. மறுபடியும் யாரும் தப்புப் பண்ணிடக் கூடாதுன்னு அப்பாக்களை கவனிக்கிற பொறுப்பை அந்தந்த வீட்டுப் பொடிப் பசங்கட்ட விட்டுருக்கோம். கரையானாட்டம் குடும்பங்களை அரிச்சுக்கிட்டு இருந்த குடியை இனிமே யாரும் தொடமாட்டோம்” என்கிறார் உறுதியான குரலில்.

தங்கவேலின் சித்தப்பா மாதப்பன் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பேபினமருதஅள்ளி பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்பதற்காக தனது சித்தப்பாவை இங்கே பணிக்கு வரவைத்திருக்கிறார் தங்கவேல். இவருக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து 1500 ரூபாய் சம்பளம் தருகிறார்கள்.

குறைவான பணம்தான். ஆனாலும், அந்த குழந்தைகளுக்காக கிராமத்திலேயே தங்கியிருந்து சேவை செய்கிறார் மாதப்பன்.

கிராமத்தினர் கொண்டாடும் தர்மபுரி மாவட்ட மழலையர் பள்ளிகளின் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தங்கவேலை சந்தித்தோம்.

“நான் பெருசா எதையும் சாதிச்சிடலைங்க... அவங்க மனசு வைச்சாங்க; மாத்திக்கிட்டாங்க. முதல்முறையா அந்த கிராமத்துக்கு நான் போயிருந்தப்ப, அந்த மக்களின் பாவப்பட்ட வாழ்க்கையை பார்க்கவே சகிக்கல. குடியின் கொடுமையை எப்படியாச்சும் அவங்களுக்கு புரிய வைக்கணும்னு நெனச்சேன். அதுக்கான ஆயுதமா பிள்ளைங்கள பயன்படுத்தினேன். நல்லாவே பலன் கிடைச்சிருச்சு. ‘குடிக்கவே மாட்டோம்’னு அந்த ஊரு ஆண்கள் உறுதிமொழி எடுத்துருக்காங்களே.. அதுக்காகத்தான் இத்தனை பாடும். இன்னும் அஞ்சு வருஷத்துல அந்த கிராமத்துல வீட்டுக்கு ஒரு காரு நிக்கணும். இதுதான் என் ஆசை” அடக்கமாய் சொன்னார் தங்கவேல்.