மனிதனின் வாழ்க்கையில் விளையாட்டுப் பருவம், கல்வி கற்கும் பருவம், திருமணப் பருவம், குழந்தைகள் பெறுகின்ற பருவம், செல்வம் சேர்க்கும் பருவம், உலகம் சுற்றிப் பார்த்து, வாழ்க்கையை அனுபவிக்கும் பருவம், ஓய்வெடுக்கும் பருவம், இறுதி காலம் என்றவாறு பிரிக்கலாம்.
இவற்றில், இன்று மிகப் பெரிய போராட்டமாக இருப்பது கல்வி கற்கும் கால கட்டம். ஆம். ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, அக்குழந்தைக்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்கு கியூவில் நின்று, விண்ணப்பம் வாங்கி, முன்பதிவு செய்து கொள்ளும் அவசர போட்டி உலகத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சுருங்கச் சொன்னால், ப்ரீ ஸ்கூல் அட்மிஷன் முதல் போஸ்ட் கிராஜூவேட் அட்மிஷன் வரை இதே நிலை தான்.
கல்வியில் முன்னேறியவர்களுக்கு வேலை, செல்வம், திருமணம் இதெல்லாம் தானாகவே கிடைத்து விடுவதைக் காண்கின்றோம். மனிதர்களின் வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருப்பதே கல்வி தான். இத்தனை சக்தி வாய்ந்த கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, மக்கள் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
பொதுவாக, கல்வி கற்கின்ற காலகட்டங்களை கீழ்க்காணுமாறு பிரித்துக் கொள்ளலாம்.
1. எல்.கே.ஜி, யு.கே.ஜி
2. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை
3. +1, +2
4. பட்டப்படிப்பு
5. உயர் பட்டப்படிப்பு
6. ஆராய்ச்சிப் படிப்பு
இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்களின் படிப்பு, அவர்களின் வேலை அல்லது தொழில், வேலை நேரம், மாத வருமானம் இப்படி ஏகப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தான் ஒரு குழந்தைக்கு நல்ல பள்ளியில் எல்.கே.ஜி அட்மிஷன் கிடைக்கிறது. அதிலும் பெற்றோருக்கும், குழந்தைக்கும் தனித்தனியாக இன்டர்வியூ வேறு நடக்கிறது.
குழந்தைகளின் எல்.கே.ஜி அட்மிஷனுக்கே மூச்சு வாங்கும் பெற்றோர்கள், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள், அவர்கள் வளர்ந்து 10-ம் வகுப்புக்கு வந்து நிற்கிறார்கள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், அடுத்த வீட்டுப் பையன்/பெண்ணை விட, அதிக மார்க் எடுக்க வைக்க பெரிய யாகமே செய்ய வேண்டியிருக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு, +1, +2-வில் எந்த குரூப் எடுப்பது என்ற குழப்பம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று பலரது ஆலோசனைகள் தந்த பெரிய குழப்பத்தில், தன் குழந்தையின் ஆர்வம் அடிபட்டுப் போக, +1, +2 அட்மிஷனும் அமோகமாக நடந்தேறுகிறது.
இதனைத் தொடர்ந்து, கல்லூரியில் சேர்க்க மதிப்பெண்கள், காத்திருப்புகள், கவுன்சிலிங்குகள் என்று அடுத்தகட்டப் போராட்டம். எந்த குரூப் கிடைத்தால், காம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலை கிடைக்கும்? ஐந்திலக்க சம்பளம் கொடுக்கின்ற, எந்த மாதிரி அயல்நாட்டு நிறுவனங்கள் சார்ந்த ஐ.டி நிறுவனங்கள் காம்பஸ் இன்டர்வியூவிற்கு வருகிறார்கள்? எப்படி ஒரே வருடத்தில் வீடு, கார், வசதிகள் என்று வாழ்க்கையில் செட்டில் ஆகலாம்? இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஒரு வழியாக கல்லூரி அட்மிஷனும் நடந்தேறுகிறது.
இனிமையாக கழிய வேண்டிய, மாணவ மாணவிகளின் கல்லூரிக் காலங்கள், காம்பஸ் இன்டர்வியூ டென்ஷனிலேயே கழிகிறது. காம்பஸ் இன்டர்வியூவில் பாஸ் செய்வதற்கு ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி, சாஃப்ட்வேர் லாஜிகல் பயிற்சி, சரளமாக உரையாடப் பயிற்சி, இன்டர்வியூ செய்பவர்கள் கேட்கின்ற எரிச்சலடைய வைக்கின்ற கேள்விகளுக்குக் கோபப்படாமல் சிரிப்பதற்குக் கற்றுக் கொடுக்கும் சகிப்புத் தன்மைப் பயிற்சி...என்று ஏராளமான பயிற்சி வகுப்புகளுடன் இன்றைய இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கை களைகட்டுகிறது.
காம்பஸ் இன்டர்வியூ, அதைத் தொடர்ந்து ஐந்திலக்க சம்பளம் என்று பலவிதமான கனவுகள், கற்பனைகள். மேலும், பெற்றோர், உற்றோரின் ஆசைகள், எதிர்பார்ப்புகள். இதோடு கூடவே, காம்பஸ் இன்டர்வியூவில் ஜெயிக்கா விட்டால் என்ன செய்வது? அற்பமாய் பார்க்கும் சக மாணவ மாணவிகள் கண்களில் இருந்து எப்படி தப்பிப்பது? இதுபோன்ற மன அழுத்தங்களுடன், இன்றைய இளைஞர்களுக்கு கலகலப்பாகக் கழிய வேண்டிய கல்லூரி வாழ்க்கை, போராட்ட வாழ்க்கையாகவே இருக்கிறது.
இதில் ஏதேனும் ஓரிடத்தில் சற்றே சருக்கினாலும், பெற்றோர் மற்றும் குழந்தைகள் என இருபாலருக்குமே கோபம், ஆத்திரம், மன அழுத்தம் தான்.