Tuesday, 6 August 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க!

தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை எதிர்கொள்பவர்களுக்காக விளக்கப் பாடங்களையும் மாதிரி வினா-விடைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இத்தேர்வை எதிர்கொள்வதற்கு ஆசிரியர்கள் வழங்கும் வெற்றிக்கு வழிகாட்டும் யோசனைகள் இதோ...

குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

வெ. ஸ்ரீதரன், முதுநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, செம்பாக்கம், காஞ்சிபுரம்:


கற்றலில் தனியாள் வேறுபாடு என்பது தவிர்க்க முடியாதது போல் கல்வி உளவியல் பாடமும்  சற்று வேறுபாடு உடையதுதான். எனவே, உளவியல் தத்துவங்கள், கோட்பாடுகள், சோதனைகள் ஆகியவற்றை ஆழ்ந்த புரிதலோடு பயின்று அதற்கான குறிப்புகளை நீங்களே தயார் செய்வது நலம். அவற்றுள் முதன்மைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் என வகைப்படுத்தி பின்னர் அவற்றுள் அடங்கும் வரையறைகள், நுணுக்கங்கள், உளவியலாளர் பெயர்கள், அவர்கள்  சார்ந்த கோட்பாடுகள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றை அட்டவணைப்படுத்துதல் அவசியம்.

உளவியல் நூல்கள் மற்றும் நூலாசிரியர்களின் பட்டியல் தயாரித்து அடிக்கடி அவற்றை மீள்பார்வை செய்தல் வேண்டும்.

உளவியல் கோட்பாடுகள் வெவ்வேறு படிநிலைகளாக தரப்படுத்தி வரிசைப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளதால் அத்தகைய படிநிலைகளின் எண்ணிக்கை அவற்றின் வரிசை போன்றவற்றை தனித்தனியாகக் குறித்து வைத்து மனத்தில் இருத்தல் வேண்டும்.

கோட்பாடுகள், சோதனைகள், இவற்றைப்பயிலும்போது ஒற்றுமை - வேற்றுமை அடிப்படையில் நீங்களே ஆராய்ந்து எளிதாக நினைவுகூர முயல வேண்டும். ஓர் உளவியல் அறிஞர் மற்றவர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார் என்றும் அவர்களின் கோட்பாட்டின் அடிப்படை வேறுபாடு மற்றும் அதற்கான எடுத்துக்காட்டுகளை குறித்து வைத்துப் படித்தல் வேண்டும்.

நினைவு சூத்திரங்கள், சுருக்கக் குறிப்புகள் மற்றும் அவற்றின் விரிவாக்கம் (SQ3R, ABL, ZPD, LAD  போன்றவை), நுண்ணறிவு ஈவு, அடைவு ஈவு, மனத்திருத்தல்கெழு போன்ற வாப்பாடுகள்; அவை தொடர்பான கணக்கீடுகளை செய்து பார்க்கவேண்டும்.

தாள் ஒன்றைப் பொருத்தவரை  D.T.Ed. பாடத்திட்டத்திட்டத்தின் கருத்துக்களை அந்தந்த கற்பித்தல் முறைகளோடு இணைத்துக் கற்றல் நல்லது. கோத்தாரி குழு, யுனெஸ்கோவின் டெலார்ஸ் அறிக்கை, தேசிய கல்விக் கொள்கை, இந்திய அரசியலமைப்பின் கல்வி சார் கொள்கைகள், திருத்தங்கள், தேசிய கலைத்திட்டம் 2005 ஆகியவற்றின் கல்விப் பிரகடனங்களைத் தனித்தனியாக குறிப்பிட்ட வேறுபாடுகளை உணர்ந்து கற்க வேண்டும்.

தாள் இரண்டைப் பொருத்தவரை தமிழகத்தின் அனைத்து பல்கலைக் கழகங்களின் பி.எட். பாடத்திட்டம் தொடர்பான பாடக்குறிப்புகள் கையேடுகள் இவற்றை ஒப்பிட்டு புதிய பெயர்கள் மற்றும் வேறுபட்ட சொற்றொடர்கள் போன்றவற்றைக் கண்டறிந்து கற்றல் நலம்.

உங்களது கடின உழைப்பை முலதனமாக்கி ஆக்கத் திறனை முன்வைத்து நுண்ணறிவை கேடயமாக்கி மன எழுச்சிகளைத் தவிர்த்து நினைவை மேம்படுத்தினால் வெற்றி நிச்சயம்."

 தமிழ்

 த. தியாகராசன், முதுநிலை தமிழாசிரியர், வித்யா பார்த்தி மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்:

தமிழ் வினாத்தாளில் முப்பது மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமைந்திருக்கும். செய்யுள், உரைநடை, துணைப்பாடம் ஆகிய மூன்றிலிருந்தும்  15 மதிப்பெண்களுக்கு வினாக்கள் அமையலாம். இலக்கணத்திலிருந்து 15 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

செய்யுள் பகுதியில் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, எழுதிய நூல்கள், சிறப்புப் பெயர்கள் ஆகியவற்றை முழுவதுமாகப் படித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சாகித்ய அகாதெமி, மத்திய, மாநில அரசு சார்பில் பெற்ற விருதுகள், பட்டங்கள், தபால்தலை வெளியிட்ட ஆண்டுகள், நூற்றாண்டு விழா பற்றிய தகவல்களை தெரிந்திருக்க வேண்டும்.

உரைநடைப் பாடத்தில் வரிக்கு வரி ஏதேனும் வினாக்கள் அமையும். ஆதலால் குறிப்பு எழுதிவைத்துப் படிக்கவும்.

துணைப் பாடத்தில் இடம்பெறும் சிறப்புப் பெயர்கள், வேற்றுமொழிப் பெயர்கள், வேற்று நாட்டில் - மாநிலத்தில் நடந்த செய்திகளை முக்கியமாகப் படிக்க வேண்டும்.

இலக்கணப் பகுதியில் ஒவ்வொரு பகுதியுமே இன்றியமையாத பகுதியாக நினைத்துப் படிக்கவும்.

படிப்பதைப் புரிந்துகொண்டு மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள சில எளிய உத்திகளை  நீங்களே உருவாக்குங்கள்.

எ.கா: தமிழ் எண் உருக்களை நினைவில் கொள்ள
டலை உருண்டைய வ்விச் ப்பி ருசித்து சாப்பிட்டு டுத்து தை கூடையில் டாசு

வினாவிற்கு ஏற்ற விடையைத் தேர்வு செய்யும்போது தவறான விடைகள் இரண்டினைத் தேர்வு செய்து அதை மனத்திற்குள்ளே மறைத்து வைத்துவிட்டு மீதி இரண்டில் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்யவும். இவ்வாறு குறிக்கும்போது பெரும்பாலும் விடைகள் தவறாக இருக்காது.

இலக்கண வினாக்களைப் பொருத்தமட்டில் மரபுச்  சொல், வழூஉச் சொல், இளமைப் பெயர்கள் ஆகியவற்றிலிருந்து  50 எடுத்துக்காட்டுகளைப் படித்தால் சரியான விடையைத் தேர்வு செய்து எழுத முடியும்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தமிழ்ப் பாடநூல்களையும் விட்டுவிடாது படிக்கவும். சொல்லுக்கேற்ற பொருள் விளக்கம் கேட்பதால் செய்யுள் பகுதிகளில் அமைந்துள்ள இன்றியமையாத சொல்லைக் கொடுத்துப் பொருள் கேட்பார்கள்.

பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல் போன்ற வினாக்களில் புதிதாக அமைந்துள்ள சொல்லையும் பொருளையும் தேர்வு செய்து படிக்கவும்.

எ.டு: ஈருருளி (சைக்கிள்), ஈரிருவர் (நால்வர்)

குறிஞ்சி முதலாக உள்ள ஐந்திணைகளின் முதற்பொருள் (நிலமும், பொழுதும்), உரிப்பொருள்கள் (உணர்ச்சி), கருப்பொருள்கள் ஆகிய மூன்று பொருள்களையும் ஆழ்ந்து படிக்கவும். புறப்பொருள் திணைகளையும் நன்கு படித்துக்கொள்ள வேண்டும்."

ஆங்கிலம்

ம.பெத்த வண்ண அரசு, முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, அயலூர்:

ஆங்கிலத்தில் Paper I  மற்றும் Paper II  இரண்டிற்குரிய பாடங்களையும் சேர்த்தே ஓன்றாகப் படிக்க வேண்டும்.

இதற்கு முன்னால் கேட்கப்பட்ட Paper I தாளிற்குரிய கேள்விகளில் பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற வகுப்புகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதைப்போல Paper II தாளிற்குரிய கேள்விகளில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஆகையால் இரண்டையும் ஒன்றாகக் கருதி ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடங்களை வரி விடாமல் படித்து முடித்துவிடவும். Paper I எழுதுபவர்கள் தற்போதுD.T.Ed. பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் படிக்க வேண்டும். Paper II  எழுதுபவர்கள் B.Ed. பாடத்திலுள்ள அனைத்தையும் படிக்க வேண்டும். ஆங்கிலத்தில் 30 கேள்விகளில் 21 கேள்விகள் இலக்கணத்திலிருந்து கேட்கப்படுகின்றன. இரண்டு கேள்விகள் phonetics  என்ற பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. 5 கேள்விகள் –Methodology பகுதியிலிருந்தும் 1 அல்லது 2 கேள்விகள் பாடத்திலுள்ள பொது அறிவு சார்ந்த பகுதிகளிலிருந்தும் கேட்கப்படுகிறது. Direct and Indirect Speech, Active Voice and Passive Voice, Degrees of comparisons, Questions Tags, Singular and Plural, Idioms and Pharses, Phrasal verbs, Simple, Complex, Compound, Articles, Parts of speech, Tenses, Comprehension Passages, sentence patterns, Compound words, etc  போன்ற பகுதிகளிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. மற்ற பகுதிகளிலிருந்தும் கேள்விகள் வரும். இதற்கு சமச்சீர் கல்வி நூல்கள், பிரிட்டீஷ் ஆசிரியர்களால் எழுதப்பட்ட நல்ல ஆங்கில இலக்கண நூல்கள், Railway Exams, Bank Exams, TNPSC யில் இதுவரையிலும் வெளிவந்த ஆங்கில இலக்கணத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளை பயிற்சி செய்து பார்ப்பது நல்லது."

கணிதம்

எஸ்.வெங்கடேஷ், பட்டதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.


கணிதம் கற்பித்தல், இந்திய கணிதவியலார் மற்றும் அவர்களது புத்தகங்கள், வெளிநாட்டு கணிதவியலாரின் பங்குகள் மற்றும் அவர்களது  புத்தகங்கள், பாடக்குறிப்பு,  கற்பித்தல் துணைக்கருவிகள்,  நவீன உளவியல் அறிஞர்களின்  கூற்றுகள் மற்றும் தேற்றங்கள்- எடுத்துக்காட்டாக பியாஜே,  மாஸ்லோ, கேக்னி ஆகியோரது கூற்றுகள், தொடக்கநிலை மற்றும்  நடுநிலை வகுப்புகளில் கணிதம் கற்பித்தலின் குறிக்கோள்கள், கற்பிக்கும் முறைகள் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள், புதுவிதச்சோதனை முறைகள் ஆகியவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தாள் I  மற்றும் தாள் II  ஆசிரியர் தகுதித்தேர்விற்கு தயார் செய்பவர்கள் பத்தாம் வகுப்பு முடிய அனைத்து பாடப்பகுதிகளிலும் தெளிவான கருத்துக்கோள்களை தயார்செய்துகொள்ள வேண்டும். (கணவியல், அணிகள் நீங்கலாக) எண்ணியல், அடுக்குக்குறி விதிகள், BODMAS  விதிகள், மீ.பொ.வ. மற்றும் மீ.சி.ம., பின்னங்கள், வர்க்க மூலம் மற்றும் கணமூலம், இயற்கணிதம், விகிதம், விகித சமம், நேர்விகிதம், எதிர்விகிதம், மெட்ரிக் அளவைகள், வாழ்வியல் கணிதம், தனிவட்டி, கூட்டுவட்டி, அளவைகள், நாட்காட்டி, கடிகாரம், வடிவியல்,  மையப்போக்கு அளவைகள் -சராசரி, இடைநிலை, அளவு, முகடு மற்றும் வீச்சு, பரப்பளவு மற்றும் சுற்றளவில் ஏற்படும் மாற்ற சதவீதங்கள், ஆயத்தொலை வடிவியல்- இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு, வரைபடங்கள், நிகழ்தகவு ஆகிய பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

போட்டித்தேர்வு வினாக்கள் தொகுப்பு உள்ள QUANTITATIVE APTITUDE  புத்தகங்கள் மூலமாக மேற்கண்ட பாடப்பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்களை தயார்செய்து கொண்டால் கணிதப் பாடப் பகுதியில்  30 மதிப்பெண்களையும்  கண்டிப்பாக பெறமுடியும்,

மேலும் QUANTITATIVE APTITUDE  பகுதிக்கு தயாரிக்கப்பட்ட வினா வங்கிகளையும் பயன்படுத்தலாம். வினாத்தாள் வடிவமைப்பு வினா வகைகள் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான அறிவு, நாம் முழுமதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக அமையும்."

அறிவியல்

இரா. முருக மணிமாறன், உதவிப் பேராசிரியர், ஜே.கே. கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல்:

அறிவியல் தாள் I - க்கு 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வரை படித்தால் மட்டுமே முழு மதிப்பெண்களைப் பெற முடியும். சூழ்நிலை அறிவியல் என்பதனால் சூழ்நிலை பற்றிய வினாக்கள்  சற்று அதிகமாக கேட்கப்படும். இவை தவிர அடிப்படை அறிவியல் சம்பந்தமான அறிவைப் பெற்றிருப்பது அவசியம். உதாரணமாக, உயிரியலில் நமது சுற்றுச்சூழல், உடல் உறுப்பு மண்டலம், வேதியியலில் வேதிவினைகள், நிலக்கரி மற்றும் பெட்ரோலியம், இயற்பியலில் அளவீடுகள், அளவிடும் கருவிகள் போன்றவற்றைப் படித்திருக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி பாடப் புத்தகமான, இரண்டு வருடத்திலும் உள்ள அறிவியல் கற்பித்தல் என்ற புத்தகத்தை முழுவதுமாகப் படித்தல் வேண்டும். 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை மிக எளிமையான பாடப்பகுதி இருக்கும் இவை தேவையில்லை என்று ஒதுக்கவேண்டாம்.

அறிவியல் தாள் - II க்குப் படிக்க வேண்டிய பாடப் பகுதி, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு.

உதாரணமாக: தாவரவியலில் -  தாவர உலகம், செல் அமைப்பு
விலங்கியலில் - நுண்ணுயிரிகள் விலங்கு உலகம்
வேதியியலில் - வேதிவினைகள், கரிமச் சேர்மங்கள்

இயற்பியலில் - அளவீடுகள் ஒளியியல், ஒலியியல், மின்காந்தவியல் போன்றவற்றை மட்டும் நன்கு படித்தால் போதுமானது. 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு புத்தகம் முழுமைக்கும் படிக்க வேண்டியதில்லை. பி.எட். பட்ட வகுப்புகளை அறிவியல் கற்பித்தல் பாடப் புத்தகத்தை முழுமையாகப் படித்தல் வேண்டும். இவற்றிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும். இதன் மூலம் அறிவியல் கற்பித்தல் முறைகளை அறிய முடியும். IUPAC பெயரிடும் முறையை பயிற்சி செய்துகொள்ளுதல் அவசியமான ஒன்று.

முந்தைய போட்டித் தேர்வின் மாதிரி வினாத்தாள்களை பயிற்சி செய்தல் வேண்டும்."

சமூக அறிவியல்

கே. அசோக்குமார், பட்டதாரி ஆசிரியர், எஸ்.எம்.பி.எம். மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்:

வரலாறு
பண்டைக்கால வரலாறு- முதல் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை. வேத காலம், முற்பட்ட, பிற்பட்ட வேதகால மக்களின் சமூக மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகள் பற்றி படித்துக் கொள்ளவும். ஆறாம் நூற்றாண்டில் மதங்கள் - புத்த மதம், ஜைன மதம், ஜோராஸ்டிய மதம்,  கன்பூசியசிஸம் போன்ற மதங்கள், மதங்களைத் தோற்றுவித்தவர்கள், போதனைகள், வாழ்க்கை வரலாறு போன்றவற்றைப் படித்துக் கொள்ளவும். மகதப் பேரரசை ஆண்ட வம்சங்களைப் பற்றி படித்துக் கொள்ளவும். முக்கியமாக மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு பற்றி படித்துக் கொள்ளவேண்டும்.

இடைக்கால வரலாறு - எட்டாம் நூற்றாண்டிலிருந்து 18-ஆம் நூற்றாண்டு வரை. டெல்லியை ஆண்ட சுல்தான்களைப் பற்றி படித்துக்கொள்ளவும் (1206 -1526).

முகலாயர்களின் வரலாற்றில் பாபர், அக்பர், ஷாஜஹான், ஷெர்ஷா, ஔரங்கசீப் - போர் முறைகள், ஆட்சி முறைகள், சாதனைகள், வரலாறு பற்றி படித்துக் கொள்ளவும். மராத்தியர்கள் -  சிவாஜி மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சி முறைகளைப் பற்றி படித்துக் கொள்ளவும்.

மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களின் வரலாற்றைப் படித்துக் கொள்ளவும். ஐரோப்பியர்களின் வருகையைப் பற்றி படித்துக் கொள்ளவும். குறிப்பாக, ஆங்கிலேயர்களின் வருகையினால் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலைகளைப் பற்றி படித்துக் கொள்ளவும்.

நவீன கால வரலாறு - 18-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போருக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளைப் பற்றி படித்துக் கொள்ளவும். முதல் மற்றும் இரண்டாம் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், நாசிசம், பாசிசம் பற்றி படித்துக் கொள்ளவும். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான காரணங்கள், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை.

தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு, போராட்டத்தில் அவர்களின் பங்கு குறித்து படித்துக் கொள்ளவும்.

19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்களைப் பற்றி படித்துக் கொள்ளவும்.

பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, கிறிஸ்தவ சமய சீர்திருத்த இயக்கங்கள் பற்றியும், இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சியைப் பற்றியும் படித்துக் கொள்ளவும்.

குடிமையியல்

மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பங்கு, ஒரு கட்சி, இரு கட்சி, பல கட்சி ஆட்சி முறைகள், நீதி மன்றம், நாடாளுமன்றம், சட்ட மன்றம் அவை செயல்படும் விதங்கள் பற்றி படித்துக் கொள்ளவும்.

தேர்தல் ஆணையம், நீதி மன்றங்கள், அதனுடைய பணிகள் மற்றும் செயல்படும் விதங்களைப் பற்றி படித்துக் கொள்ளவும்.

தேசிய ஒருமைப்பாடு, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான  சட்டங்கள், நுகர்வோரின் உரிமைகள் பற்றி படித்துக் கொள்ளவும்.

புவியியல்

சூரியக் குடும்பம் பற்றி படித்துக் கொள்ளவும். கடல்கள், ஆறுகள், மலைகள், காற்றின் வகைகள், பனியாறுகள் - இவற்றினால் ஏற்படக்கூடிய நிலத்தோற்றங்களைப் பற்றி படித்துக் கொள்ளவும். இந்தியா மற்றும் தமிழகத்தில் காலநிலை, விவசாயம், தொழில்கள், பயிர்கள் பற்றி படித்துக் கொள்ளவும்.
இந்தியாவிலுள்ள முதன்மைத் தொழில்களிலிருந்து ஐந்தாம் நிலை தொழில்களின் வகைகளைப் பற்றி படித்துக் கொள்ளவும்.

பொருளியல்

தேசிய வருமானம், தேசிய வருமானத்தைக் கணக்கிடும் முறைகள், நுகர்வு, பொருளாதார உற்பத்திக் காரணிகள் பற்றி படித்துக் கொள்ளவும். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்கள் பற்றி படித்துக் கொள்ளவும். பணவீக்கம் குறித்து படித்துக் கொள்ளவும்."

சூழ்நிலையியல்

கே. அசோக்குமார், பட்டதாரி ஆசிரியர், எஸ்.எம்.பி.எம். மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்:

 அறிவியலைப் பொருத்தவரை எண்ணியல், அளவீட்டியல், ஒளியியல், காந்தவியல், நீர் நிலையியல், தனிமங்கள், சேர்மங்கள், கலவைகள், தூய பொருள்கள், தூய்மையற்ற பொருள்கள், நிலக்கரி, பெட்ரோலியம், அணு அமைப்பு, தனிம ஆவர்த்தன அட்டவணை, கரிம வேதியியல், நீர், நிலம், காற்று மாசுபடுதல், சுற்றுப்புறச் சூழ்நிலை குறித்த சர்வதேச நாட்கள், ஆண்டுகள், உடலியல், ஒளிச்சேர்க்கை, செல்லியல் பற்றிப் படித்துக் கொள்ளவும். இந்தியாவின் காலநிலைகள், மண் வகைகள், காடுகளின் வகைகள், தாதுக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு, வரலாற்றுச் சான்றுகள், அயல்நாட்டவரின் குறிப்புகள், உலகைச் சுற்றி வந்த பயணிகள் (மெகல்லன், வாஸ்கோடகாமா, கொலம்பஸ்.) பற்றி படித்துக் கொள்ளவும்.

மக்கள் ஆட்சி - நாடாளுமன்றம், சட்டமன்றம், தலசுய ஆட்சி முறை (கிராமப் பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி) பற்றியும், தமிழக வரலாற்றில் மூவேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்களின் வரலாறு பற்றியும் படித்துக் கொள்ளவும். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கு, இந்திய அரசியல் அமைப்பு, தமிழகத்தில் நாயக்கர்கள் மற்றும் மராத்தியர்களின் ஆட்சிமுறை குறித்து படித்துக்கொள்ளவும்."


No comments:

Post a Comment