Monday, 5 August 2013

கல்விமுறையில் மாற்றம் தேவை

கல்வி என்பது மக்களின் அறியாமையை உணர்வதற்கான கருவி. அது தற்போது வேலைக்கான படிப்பு என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. இது சமூக மாற்றத்துக்கான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
கல்விதான் விஞ்ஞான உலகத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. கல்வி அறிவினை முழுமையாகப் பெற்ற நாடுகளே வல்லரசு நாடுகளாக மாறின. இன்று இந்தியாவின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் கல்வி அறிவு என்றால் மிகையில்லை. ஆனால் அது அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகச் சென்றுவிட்டதா என்றால் இல்லையென்பதுதான் பதில்.
ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறும்வரை அதன் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் போன்று இருமடங்கு கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும் என்பது உலகப் பொருளாதார வல்லுனர்களின் கூற்று.
1964-ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தபோது 6 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும் என கோத்தாரி குழு பரிந்துரைத்துள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்போது நாட்டின் வளர்ச்சி 8 சதவீதம் என்றால் 16 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கல்வியை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியும். கல்வியில் பரிணாம வளர்ச்சியை அடைந்து கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் கல்வியைக் கொண்டு சென்றவை அரசுப் பள்ளிகள்தான். இந்தப் பள்ளிகள்தான் சேவையை மட்டுமே கொள்கையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அப்படிப்பட்ட அரசுப் பள்ளிகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.
அதற்குக் காரணம் தனியார் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கடுமையான போட்டியும், மக்களிடம் இருக்கும் ஆங்கில மோகமும்தான். அரசுப் பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
இதற்கிடையே அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியை போதிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்டு விட்டது.
தற்போதைய நிலையில் ஆங்கில அறிவு மாணவர்களுக்கு அவசியம்தான். ஆனால் தாய் மொழியில் கல்வியை முழுஅளவில் பெற்றுவிட்டோமா என்றால் இல்லை.
தாய்மொழியில் பயிற்றுவிக்கும் கல்வியில் புலமை பெற்றால்தான் பிறமொழிகளை பயிலமுடியும். ஆனால், அதற்கான முயற்சிகள் எடுக்காமல் நேரடியாக ஆங்கில வழி கல்விக்குச் சென்றால் பாதிக்கப்படப் போவது மாணவர்கள்தான். ஏற்கெனவே 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் கண்டிப்பான முறையில் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்ற விதிமுறையினை பள்ளி கல்வித்துறை வகுத்துள்ளது.
இந்த விதிமுறையால் தேர்ச்சி சதவீதத்தை வேண்டுமானால் உயர்த்திக் காட்டலாம். மாணவர்களின் அறிவுத்திறன், ஆளுமைத்திறன் போன்றவற்றில் முறையான தேர்வுமுறை இல்லாமல் உயர் வகுப்புகளுக்கு அனுப்பப்படுவதால் அவர்கள் இன்றைய உலகில் போட்டியிடும் சூழலை எதிர்கொள்ள முடியாத இளைய சமூகமாக உருவாகி வருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
மாணவர்கள் 10-ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றால் தேர்ச்சியடைந்துவிடலாம் என எண்ணத் தொடங்கிவிட்டனர். கிராமங்களில் உள்ள மாணவர்களில் தமிழில்கூட சரியாக எழுதத் தெரியாதவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் மேல் வகுப்புக்கு வந்த பின்புதான் தமிழைக் கற்கத் தொடங்கியுள்ளனர். இப்படி தாய்மொழியில் படிப்பதிலேயே சிரமங்கள் ஏற்பட்டுள்ளபோது ஆங்கிலவழிக் கல்வியை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் எனத் தெரியவில்லை.
"பருவத்தே பயிர் செய்' என்பதற்கு ஏற்ப துடிப்புடன் காணும் மாணவர் சமுதாயம் போட்டி நிறைந்த உலகத்தில் போராடினால்தான் ஜெயிக்க முடியும். அந்த வாய்ப்புகளை தாய்மொழியுடன் கூடியதாக தொடக்கக் கல்வி நிலையங்களில் அளிக்க வேண்டும். அப்படி வாய்ப்புகள் வழங்கினால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.
நமது அண்டை நாடான சீனாவில் கல்வியும், சுகாதாரமும் இந்தியாவை விட பலமடங்கு மேம்பட்டிருப்பதற்கு அவர்களின் கொள்கை முடிவும் தாய்மொழி கல்வியும்தான் காரணம்.
இந்தியாவில் தனிநபர் வருமானமும், தேசிய வருமானமும் வேண்டுமானால் அதிகரித்திருக்கலாம். ஆனால் கல்வியறிவு இன்னும் முழுமையாகக் கிடைக்காமல் உள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே தாய்மொழிக் கல்வியை முறையாக மாற்றம் செய்து ஆங்கிலவழிக் கல்வியைத் தொடர்ந்தால் மட்டுமே நமது மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உறுதியாகும்.

No comments:

Post a Comment