ஆசிரியர் படிப்பு மாணவ – மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
விண்ணப்பங்கள் வினியோகம்
தமிழ்நாட்டில் தற்போது ஆசிரியர் பட்டப்படிப்புகான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி, சைதாப்பேட்டை ஐ.ஏ.எஸ்.சி. கல்வியியல் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்க வருகிற 13–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
அதன்பிறகு ஒன்றைச் சாளர முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பு அரசு ஒப்புதல் கொடுத்தவுடன் வெளியிடப்படும்.
புதிய கல்லூரிகள்
தமிழ்நாட்டில் புதிதாக கல்லூரிகள் தொடங்க 150 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. தேசிய தொழில் நுட்ப கல்வி மையம் ஒப்புதல் கிடைத்தவுடன் அனுமதி வழங்கப்படும்.
கல்வியியல் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. “நாக்“ கமிட்டி (தேசிய தரக்கட்டுப்பாடு சான்று) அனுமதி பெற்ற கல்லூரிகளுக்கு பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கு கல்வி கட்டணமாக ரூ.41 ஆயிரத்து 500 எனவும், எம்.எட். பட்டப்படிப்புக்கு ரூ.47 ஆயிரத்து 500 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
‘நாக்’ அனுமதி இல்லாத கல்லூரிகளுக்கு ரூ.46 ஆயிரத்து 500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு மேல் கல்வி கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்காணிப்பு குழு
இதை கண்காணிக்க பல்கலைக்கழகம் சார்பில் ஒரு குழுவும், அரசு சார்பில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கல்லூரிகளுக்கு சென்று திடீரென்று சோதனை செய்வார்கள், இவ்வாறு இந்த குழு பல கல்லூரிகளில் ஆய்வு செய்து உள்ளனர். இதனையடுத்து பல கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தெரிய வந்தால், அந்த கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மாணவர்களிடம் கல்வி கட்டணம் கூடுதலாக வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
புதிய நடைமுறை
பி.எட். கல்லூரிகளில் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியமனத்தில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது நியமனம் செய்யப்படும் முதல்வர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகத்தில் நேரில் ஆஜராகி ஒரிஜினல் சான்றிதழை காட்ட வேண்டும். இதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.
பல்கலைக்கழக சுற்றறிக்கைகள், வழிகாட்டு நடைமுறைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
பாடத்திட்டம் மாற்றம்
இந்த ஆண்டு முதல் பி.எட், எம்.எட்., எம்.பில்., பி.எச்.டி ஆகிய படிப்புக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் எளிதாக வெற்றி பெறும் அளவுக்கு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது. இதனால் மாணவர்கள் ஆசிரியர் படிப்பில் ஆர்வமாக சேருகிறார்கள்.
பி.எட். கல்லூரி வேலை நாள் 180–ல் இருந்து 200– ஆக உயர்ந்தப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தில் புதிதாக 6 துறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விசுவநாதன் கூறினார்.
கல்லூரி முதல்வர்கள் கூட்டம்
முன்னதாக நேற்று காலை ஜான்ஸ் கல்வியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர்கள் கூட்டமும், கல்லூரி நிர்வாகிகள் கூட்டமும் நடந்தது. கல்லூரி முதல்வர் எஸ்.சந்திர சேகரன் வரவேற்று பேசினார். ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.ஏ.ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார்.
கல்லூரி செயலாளர் எம்.கே.ரவீந்திரன் சார்லஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விசுவநாதன் கூட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment