Wednesday 7 August 2013

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.
வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜல்லடியன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்தப் பள்ளிகளில் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறதா என்பதையும், கற்றல், கற்பித்தல் பணிகளையும் அவர் ஆய்வு நடத்தினார். பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆசிரியர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
வழிபாட்டுக் கூட்டம், செயல்வழிக் கற்றல் வகுப்புகள், உடற்பயிற்சி வகுப்புகள், நூலகங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அதோடு சத்துணவுக் கூடத்தைப் பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்களை அவர் சோதனையிட்டார்.
தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசினார். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment