Friday, 9 August 2013

தகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விடுப்பு: தனியார் பள்ளிகளில் கல்விப்பணி பாதிப்பு

சேலம்: ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தனியார் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் விடுப்பு எடுத்து, தேர்வுக்கு தயாராவதால், தனியார் பள்ளிகளில் கல்விப்பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
.தமிழகத்தில் கட்டாயக் கல்விச் சட்டம் அமல்படுத்திய பின், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே, அரசுப்பணிக்கு நியமிக்கப்படுகின்றனர். அதுவரை பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டு வந்த, இடைநிலை ஆசிரியர் பணி, பட்டதாரி ஆசிரியர் பணி ஆகிய பணியிடங்கள் அனைத்தும், ஆசிரியர் தகுதித்தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டது.
மொத்தம், 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர், கடந்த ஆண்டு நடந்த தேர்வில் கலந்து கொண்டாலும், 20,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் தேர்ச்சி பெற்றவர் அனைவருக்கும், அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
தற்போது இரண்டாம் ஆண்டாக ஆசிரியர் தகுதித்தேர்வு, ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள, 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி செய்து வருகின்றனர். இந்த தேர்வில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன், பலரும் பயிற்சி வகுப்பு உள்ளிட்டவைகளிலும் சேர்ந்து தீவிரமாக படித்து வருகின்றனர்.
தேர்வு நெருங்கிவிட்டதால், பலரும், 15 நாள் வரை பணியில் விடுப்பு எடுத்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இன்று பொதுவாக திறமையான ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த ஆண்டு, 20,000த்துக்கும் மேற்பட்டோர், தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர்.
தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களும், தகுதித்தேர்வில் வெற்றி பெறுவதை லட்சியமாக வைத்துள்ளனர். அப்படியிருக்கும் போது, அவர்கள் விடுப்பு எடுப்பதை தடுக்க முடியவில்லை. இதனால் ஆசிரியர் தகுதித்தேர்வு முடியும் வரை, ஒரு சில ஆசிரியர்களை வைத்து சமாளிக்கும் நிலை, பல பள்ளிகளில் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 blog

No comments:

Post a Comment