தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம்
அளிக்காத 1,691 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் கட்டணம் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீதிபதி சிங்காரவேலு குழு, இதுவரை 10,580 தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. 2013-14 கல்வியாண்டு முதல் 2015-16 கல்வியாண்டு வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளில் புதியக் கட்டண நிர்ணயம் போதவில்லை என இதுவரை 110 பள்ளிகள் மட்டுமே குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ளதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளுக்கு புதிய கட்டணத்தை ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான குழு நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கின. முதல் கட்டமாக, கடந்த மாதம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அடுத்ததாக, ஜூலை 10-ஆம் தேதி 2 ஆயிரத்தும் மேற்பட்ட பள்ளிகளுக்கான புதிய கட்டணம் வெளியிடப்பட்டது.
இந்தக் கட்டண நிர்ணயம் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டது. அந்தந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், புதிய கட்டடங்கள் மற்றும் கற்பித்தல் தொடர்பான செலவினங்களை முழுவதும் ஆராய்ந்து அதற்கேற்றவாறு கட்டணங்களை நிர்ணயித்துள்ளதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறிய வகுப்புகளுக்கு குறைவான கட்டணமும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு சற்று கூடுதலாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் நிபந்தனை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்தப் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே இந்தக் கட்டண நிர்ணயம் பொருந்தும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அதிகக் கட்டண வசூல் தொடர்பாக கட்டண நிர்ணயக் குழுவிடம் இதுவரை 4 புகார்கள் மட்டுமே வந்துள்ளதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட 10,580 பள்ளிகளும் நீதிபதி குழுவின் முன்னிலையில் நேரில் ஆஜராகி தங்களுக்கான செலவினங்கள் தொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்தன. ஆவணங்களைச் சரி பார்த்த பிறகு இந்தப் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
கட்டண நிர்ணயத்துக்கான விசாரணைக்கு 1,691 பள்ளிகள் வரவில்லை. இந்தப் பள்ளிகளுக்கு இதுவரை இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் இந்தக் குழுவின் முன்னிலையில் ஆஜராகவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்க குழு முடிவு செய்துள்ளதுBy dn, சென்னை
First Published : 18 July 2013 04:24 AM.
No comments:
Post a Comment