Monday 15 July 2013

ஏன் இந்த இழிநிலை?

மத்திய தேர்வாணையத்தில் வெற்றிபெற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகப் பணி நியமனம் பெறுவோர்,
வங்கித் தேர்வுகளில் பணியில் சேருவோர், ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களில் மேலாண்மைக் கல்வி பயிலச் சேருவோர் யார்யார் என்று கணக்கெடுத்தால், இவர்களில் பெரும்பாலோர் பொறியியல் பட்டதாரிகளாக இருப்பதைக் காண முடியும்.
பொறியியல் பட்டதாரிகள் இந்த வேலைகளில் சேரக்கூடாது என்பது நமக்கு எண்ணம் அல்ல. அவர்கள் மேலாண்மைக் கல்லூரிகளில் இடம்பெறுவதும் ஆட்சபணைக்குரியது அல்ல. ஆனால் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களால் ஏன் இதனைச் சாதிக்க முடியவில்லை என்பதுதான் கேள்வி.
தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கு கலை, அறிவியல் பட்டங்கள் பெறும் மாணவர் எண்ணிக்கை பொறியியல் பட்டம் பெறுவோரைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களின் மொழிப்புலமை கவலை தருவதாக இருந்தாலும், இவர்கள் பல்வேறு பொதுவேலை வாய்ப்புகளில், அல்லது வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாமல் போவதற்கு அடிப்படைக் காரணம் பகுப்பாய்வுச் சிந்தனை (அனலடிக்கல் திங்கிங்) இல்லை என்பதால்தான் என்று கூறப்படுகிறது.
இன்றைய பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ள கலை, அறிவியல் இளநிலைப்படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மிகவும் வறட்டுத்தனமாகவும், மாணவர்களின் பகுப்பாய்வுச் சிந்தனைக்கு வழியேற்படுத்த இயலாதவையாகவும் இருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் உறுப்பினர் பதவி முதல், துணை வேந்தர் பதவி வரை அரசியல் தலையீடு அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், கல்வியைக் குறித்து யாரும் கவலைப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை.
பல்கலைக்கழகங்களில் விதிமுறைக்கு மாறாக பணி நியமனங்கள் செய்வது, மத்திய, மாநில அரசு தரும் நிதியில் முறைகேடு செய்வது என்று பல வகையிலும், தாங்கள் இப்பதவிக்கு கொடுத்த விலையைக் காட்டிலும் பல மடங்கு மீட்டெடுக்கும் நடவடிக்கைக்குத்தான் இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று பரலவாகப் பேசத் தொடங்கிவிட்ட நிலைமை. இன்றைய நவீன உலகில் மாணவர்களின் திறன் எத்தகையது, அவர்களுக்குத் தேவையான உயர்கல்வி எத்தகையதாக, என்ன பாடத்திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று சரியாக மதிப்பீடு செய்ய துணை வேந்தர்கள் மற்றும் சிண்டிகேட், அல்லது பாடதிட்டக் குழு உறுப்பினர்களுக்கு நேரமும் இல்லை, ஆர்வமும் இல்லை. பேராசிரியர்களுக்கானால் அவர்களது உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தவே நேரம் போதவில்லை!
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 400-க்கும் மேலாக இருக்கின்றன. தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போல, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளும் மேலதிகமாக இருக்கின்றன. ஆனால் பொறியியல் கல்லூரிகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளில் பலவும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இல்லை.
தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் பல்கலைக்கழகத்துக்கு புதிய பட்டப்படிப்பு தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்தால், அந்த பட்டப்படிப்பு தேவைதானா, சரியான பாடத்திட்டமா, பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யாமலேயே புதிய படிப்புக்கு அனுமதி அளிக்கப்படும் நிலைமை தமிழ்நாட்டில் உள்ளது. புதிய படிப்பை ரூ.3 லட்சம் செலவிட்டுத் தொடங்கி, மூன்றாண்டுகளில் ரூ.30 லட்சம் சம்பாதித்துவிடுகிறார்கள் கல்லூரி நிர்வாகத்தார். ஆனால் அந்த பட்டத்தால் அந்த மாணவர் அடைந்த பலன் என்ன என்பது பற்றி, பல்கலைக்கழகம் ஆய்வுசெய்வதாகத் தெரியவில்லை.
அத்துடன், பி.காம்., பி.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பைத் தனியார் கல்லூரிகள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளைப் போன்று நிர்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு சமபங்கு உண்டு. ஆனால், வரவேற்பு அதிகமுள்ள கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகள் அதிகக் கட்டணங்கள் வசூலிப்பதுடன் மாணவர் சேர்க்கையில் முறைகேடுகளும் அரங்கேறுகின்றன. பல்கலைக்கழகங்கள் இதைக் கண்டுகொள்வதே இல்லை.
பொறியியல் படிப்புக்கு "கட்-ஆஃப்' மதிப்பெண்படி கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு ஒதுக்கீட்டில், குறைந்த கட்டணத்தில் சேர வாய்ப்பிருக்கிறது. அதற்கு வழியில்லாதவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் படிக்கின்றார்கள். ஆனால் கலை, அறிவியல் படிப்புகளில், அதிக வரவேற்பு காணப்படும் படிப்புகளில் சேர, மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் பல கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்து அலையும் நிலை உள்ளது.
தமிழ் இலக்கியம், வரலாறு போன்ற படிப்புகளுக்கு வரவேற்பு இல்லாத நிலை இருக்கலாம். ஆனால் சில படிப்புகளில் சேர்வதற்குப் பெரும் போட்டி நடந்துகொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய படிப்புகளுக்காகிலும் ஒரு பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஒரேயொரு விண்ணப்பம் மூலம், தான் பெற்ற மதிப்பெண், மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், தான் விரும்பிய கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வு தேவை.
பல்கலைக்கழகங்களின் நடைமுறையிலும், மாணவர் சேர்க்கையிலும், பாடத்திட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டுவராமல், தமிழகத்தில் கலை, அறிவியல் சார்ந்த உயர் கல்வியில் நல்ல மாற்றம் ஏற்படாது. இக்கல்வியைப் பெறும் மாணவர்கள் பட்டம் மட்டுமே பெறுவர். தரமில்லாத கல்வியால் கிடைக்கும் பட்டம், தம்பட்டம் அடித்துக்கொள்ள மட்டுமே உதவும்!

No comments:

Post a Comment