தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள், ஓராண்டாகக் காலியாக உள்ளதால், பணிகளில் தேக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பல்கலைக்கழகம், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதியளித்தல், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு பராமரித்தல், ஆசிரியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகளைக் கவனித்து வருகின்றன. இந்த பல்கலையில், பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள், கடந்தாண்டு, செப்., முதல் காலியாக இருந்தது. இதுகுறித்து, அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை, சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்த, விஸ்வலிங்கம் என்பவர், அயல் பணிக்காக, கடந்தாண்டு, அக்., முதல், பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி பணியிடங்களைக் கவனித்து வந்தார். நாமக்கல் அரசு கல்லூரியில் முதல்வர் பணி கிடைக்க, ஒரு மாதத்திற்கு முன், அவர் சென்று விட்டார்.
தற்போது, பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி உள்ளிட்ட பணிகளை, பேராசிரியர் ராஜேந்திரன், பொறுப்புப் பணியில் கவனித்து வருகிறார். இரு பணிகளை ஒருவரே கவனிப்பதால், கல்வியியல் கல்லூரிகள் சம்பந்தமாக வரும் புகார்களுக்கு உடனே தீர்வு காண முடியாத நிலை நிலவுகிறது.
சமீபத்தில், பி.எட்., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக இப்பணியில் நிரந்தரப் பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே, இப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில், "தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி தேர்வுப் பணி முடிந்து விட்டது. ஓரிரு வாரங்களில், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். பதிவாளர் தேர்வுப் பணி விரைவில் துவங்கும்," என்றார்.
No comments:
Post a Comment