Friday 23 August 2013

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதிமொழிப் படிவம்

வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்காக மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தொடங்கியுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்களில் தவறுகளைக் குறைப்பதற்காக மாணவரின் பெயர், பிறந்த தேதி, ஜாதி உள்ளிட்ட விவரங்களைக் கோரும் உறுதிமொழிப்படிவத்தை மாணவர்களிடம் வழங்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் கே.தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
பூர்த்திசெய்யப்பட்ட உறுதிமொழிப் படிவங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7 வரை பெற்றோர் நேரில் ஒப்படைக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான உறுதிமொழிப் படிவங்களை வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை, ஆதார் அட்டை எண்: இந்த ஆண்டு முதல் முறையாக ரேஷன் அட்டை எண், ஆதார் கார்டு அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் கோரப்படுகின்றன. மாணவர்களின் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்யும்போது மீண்டும் அவர்களிடம் எந்த ஆவணங்களையும் கோர வேண்டியிருக்காது. பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது சில பெற்றோர்கள் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைத் தவறாக வழங்கி விடுகின்றனர். எனவே, மதிப்பெண் சான்றிதழிலும் இந்த விவரங்கள் தவறாக அச்சிடப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள விவரங்கள் மாணவர்களின் பெயர், பிறந்ததேதிக்கு முக்கிய ஆவணமாக உள்ளது. கல்லூரிகளில் சேரவும், வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும்போதும் இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றை சரிசெய்ய காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, பிழைகளில்லா மதிப்பெண் சான்றிதழை அச்சிடுவதற்காக சரியான விவரங்கள் அடங்கிய உறுதிமொழிப் படிவத்தைப் பெற்றோரிடம் இருந்து பெற வேண்டும் என தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் படிவத்தில் மாணவரின் பிறந்த தேதி மற்றும் ஜாதி உள்ளிட்ட விவரங்களை அந்தந்த சான்றிதழின்படி பூர்த்திசெய்து ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7 வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளித் தலைமையாசிரியர்களிடம் நேரில் வழங்க வேண்டும்.
இந்தச் சான்றிதழ்களைப் பெற இயலாத பெற்றோர் அவர்கள் அளிக்கும் உறுதிமொழி ஆவணத்தின் அடிப்படையில் மகன் அல்லது மகள் பிறந்த தேதி மற்றும் ஜாதி விவரங்கள் பதிவு செய்யப்படும் என தேவராஜன் தெரிவித்துள்ளார்.
விவரங்கள் ஆன்-லைனில் பதிவு: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் பதிவுசெய்யப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே பாஸ்வேர்டு வழங்கப்பட உள்ளது.
இந்த விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய பள்ளிகளுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் சரிபார்ப்புக்காக பள்ளிகளுக்கு அக்டோபர் மாதத்தில் அனுப்பப்பட உள்ளது.
 

No comments:

Post a Comment