Friday 23 August 2013

வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி

தினமும் ஒரு குறள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இப்போதைய என்னுடைய அரசு அலுவலகத்தின் மாவட்டத் தலைமையகத்தில் பணியாற்றினேன். அந்தத் தலைமையகத்தில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பணி புரியும் நிலையில் இருந்தேன். தலைமை இடம் என்பதால் மாவட்டத்தின் கிளை அலுவலகங்கள் பலரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிடும். சென்னை அலுவலகத்தில் இருந்து புள்ளி விவரங்களை உடனுக்குடன் தரும்படி கேட்பேன். அதற்கான விவரங்களைச் சேகரித்து, ‘தொலை அச்சு’ மூலம் தரவேண்டியிருக்கும்.

இவ்வாறு அந்த அரசு அலுவலகத்தில் நானும் என்னைப் போன்ற அலுவலர்களும் மூச்சுவிட நேரமில்லாமல் பணி புரிந்தோம். அந்நிலையில்தான் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. வேலை பரபரப்பை நிதானத்திற்குக் கொண்டுவர வேண்டும்; ஒரு பயனுள்ள விஷயத்தை செய்யவேண்டும் என்ற சிந்தனையில்தான் ‘அது உதித்தது. ஆமாம், தினமும் ஒரு குறளும் அதன் பொருளையும் ‘நோட்டீஸ் போர்டில்’ எழுத வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம். அதோடு பெரியவர்களின் (நேரத்திற்குத் தகுந்தாற்போல) பொன்மொழியையும் எழுத வேண்டும் என்றும் எண்ணினேன். நண்பர்கள் யோசனையை ஆமோதித்தனர். பிறகென்ன, ‘எண்ணம்’ நடைமுறைக்கு வந்தது.

இந்தக் குறளைப் பற்றி அனைவரும் ‘டிஸ்கஸ்’ செய்வோம். பரபரப்பான வேலைகளில் இந்தப் பணி மனநிறைவைத் தந்தது. உடன் பணிபுரிபவர்கள் திடீரென்று, ‘என்ன 2 நாளா லீவா?’ என்பார்கள். எப்படித் தெரியும் என்றால், ‘2 நாளா குறளைக் காணவில்லையே? ‘என்பார்கள். அந்த அலுவலகத்தில் இப்போது நான் இல்லையென்றாலும் அங்குள்ளவர்களால், ‘குறள் பணி’  தொடர்ந்து நடைபெற்றுவருவது அறிந்து பெருமகிழ்வு கொள்கிறேன்.

-எஸ். சாந்தி,காட்பாடி


No comments:

Post a Comment