Sunday 18 August 2013

சிறப்பான நகரம் சென்னை: பிற மாநில மாணவர்கள் மகிழ்ச்சி

பொறியியல் மற்றும் மருத்துவ கல்வி பயில, தமிழகத்திற்கு, வடமாநில மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை. அதுவும், சென்னையில் உள்ள பிரபல கல்லூரி களில் படிப்பதற்கு, அவர்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது.
தனியார் கல்லூரிகளில், லட்சக்கணக்கில் பணம் செலுத்தி எம்.பி.பி.எஸ்., படிக்க வரும், வடமாநில மாணவர்கள், சென்னையில் வசிப்பதில் பெரிய சிக்கல்கள் ஏற்படுவதில்லை. ஆனால், அதற்கு அடுத்த நிலையில், வடமாநில மாணவர்கள் பலரையும் கவரும் படிப்பாக உள்ள, பாரா மெடிக்கல் படிப்பதற்காக வரும் மாணவர்கள், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக கூறுகின்றனர்.
சென்னை முகப்பேரில் உள்ள, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் கல்லூரியில், பாரா மெடிக்கல் படிப்பதற்காக சென்னை வந்திருந்த வடமாநில மாணவர்களிடம் உரையாடியதில் இருந்து...
கல்லூரியில் சேர்ந்த புதிதில், கடைக்கு சென்று, குளிர்பானம் எவ்வளவு என்று சைகையில் கேட்டோம். அம்பத்தி மூணு ரூபாய் என்றார். நான் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசியது அவருக்கு புரியவில்லை. அதனால், 100 ரூபாயை தந்துவிட்டு, சில்லரை வாங்காமல் வந்தோம். மொழி பிரச்னை பெரிதாக உள்‌ளது என்றனர் ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் முகமது ஷபி மற்றும் முடசிர் நாசர்.
ஆனால், கேரள மாணவியர் அஞ்சு ஜான் மற்றும் நிகிலா நாயர் கூறுகையில், தமிழ் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பதிலுக்கு பேசுவதில் தான் சிக்கல். ஒருமுறை ஓட்டலில் ஒருவரை, "ஏய் இங்க வா" என்றேன். அவர் எங்களை திட்டினார். தமிழில் மரியாதை விகுதியை சேர்த்து பேச கற்று கொள்வது கடினமாக உள்ளது என்றனர்.
சென்னையில் பலரும் தெலுங்கு மொழியை சகஜமாக பேசுவதாக ஆந்திர மாணவியர் கூறுகின்றனர். ஆந்திராவை சேர்ந்த நீலிமா தேவி மற்றும் நவ்யா கூறுகையில், இங்கே சென்னையில் பலருக்கும் தெலுங்கு தெரிந்து இருக்கிறது. சாதாரணமாக கடைக்கு சென்று பொருள் வாங்குவதிலோ, வெளியே சென்று வருவதிலோ பெரிய பிரச்னை இல்லை என்றனர். சென்னையின் எளிமையும், பண்பாடும், சிலருக்கு புதிதாகவும், சிலருக்கு ஆச்சர்யமாகவும் உள்ளன.
மத்திய பிரதேச மாணவர் புஷ்பேந்திர வியாஸ் கூறியதாவது: சென்னையில், பெரிய மனிதர்கள் பலர், சர்வ சாதாரணமாக வேஷ்டி சட்டையுடன் சாலையில் செல்கின்றனர். இந்த ஆடம்பரமின்மை, தன்னடக்கத்தை மற்ற நகரங்களில் காண முடியாது. ஆனால், எங்கள் ஊரில் இறந்தால் சவ ஊர்வலம் அமைதியாக தான் நடக்கும். ஆனால், இங்கே சவ ஊர்வலத்தில், எல்லாரும் முன்னால் நடனமாடியபடி செல்கின்றனர். அது ஏன் என்பது எனக்கு புரிந்ததே இல்லை. இவ்வாறு வியாஸ் கூறினார்.
ஆனால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி ரூக்சர் கூறுகையில், சென்னையில் விசித்திரமாக உள்ள ஒரு விஷயம், பேருந்தை தட்டி மாணவர்கள் பாட்டு பாடுவது. அது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை, என்றார். இது தவிர, சென்னை மாணவர்கள் அவ்வளவு தைரியமாக இல்லையென்று பிற மாநில மாணவியரும், சென்னை மாணவியர் ஓடோடி வந்து உதவி செய்வதாக பிற மாநில மாணவர்களும் கூறுகின்றனர்.
அஞ்சு ஜான் கூறுகையில், பையன்கள் தூரமாக இருக்கும் போது ஏதாவது சொல்கின்றனர். கிட்ட போய் என்னவென்று கேட்டால், எதுவுமில்லை என்பார்கள். நாங்களாகவே போய் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், கேரளாவில் பையன்கள் கொஞ்சம் தைரியமாக பேசுவார்கள், என்றார்.
நிகிலா கூறுகையில், பெண்களை வெறித்து பார்க்கின்றனரே தவிர வேறு எதுவும் பேசுவது இல்லை, என்றார். ஆனால், முடசிர் நாசர் கூறுகையில், எங்களிடம் பெண்கள் தாங்களாகவே முன் வந்து பேசினார்கள். நிறைய உதவிகளையும் செய்கின்றனர். இங்கே பெண்கள் ரொம்ப நல்லவர்கள், என்றார்அரசியல் பற்றி பேச்சு வந்த போது அவர்கள் தமிழக கட்சிகளை புகழ்ந்து தள்ளி விட்டனர். ஆனால், காஷ்மீர், கேரளா மாதிரியான மாநிலங்களில் நிலைமை வேறு என்கின்றனர்.
முகமது ஷபி கூறுகையில், அரசியல் பிரச்னைகள் இங்கே சாதாரண மக்களின் தினசரி வாழ்க்கையை பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஆனால், காஷ்மீரில் நிலைமை அப்படியே மாறாக உள்ளது, என்றார்.
அஞ்சு ஜான் கூறுகையில், கேரளாவில் பொதுமக்கள் எல்லாருமே அரசியல் கட்சியினர் தான். பள்ளி மாணவர்கள் கூட அரசியல் பேசுவார்கள். எந்த கட்சி பந்த் அறிவித்தாலும் மொத்த மாநிலமே முடங்கிவிடும். ஆனால் இங்கே அப்படியில்லை, என்றார்.
சென்னையின் சிறப்பு என்ன என்ற கேள்விக்கு, வேறுபாடு இல்லாமல் பழகும் சென்னை மக்களின் இயல்பு என்ற பதிலை அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
இறுதியாக புஷ்பேந்திர வியாஸ் கூறுகையில், ஒன்று இங்கு எல்லோரும் இந்தி கற்க வேண்டும் அல்லது எங்களுக்கு தமிழ் சொல்லி தர வேண்டும். சென்னையில் வெறுமனே இருக்க எனக்கு விருப்பமில்லை. நான் இங்கே வாழவே விரும்புகிறேன், என்றார்.

No comments:

Post a Comment