Sunday, 18 August 2013

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: கல்வியாளர்கள்

பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவியேற்பு தாமதமாவதால், அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரி நிர்வாகப் பணி முடங்கியுள்ளதால், பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மிகவும் பிரபலமானது, பச்சையப்பன் அறக்கட்டளை. பள்ளிகள், கல்லூரிகள் என, அறக்கட்டளையின் கீழ், 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவை, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், சொத்து மதிப்பு கொண்டவை.
பச்சையப்பன் அறக்கட்டளையை, ஒன்பது பேர் கொண்ட குழு நிர்வகித்து வந்தது. அறங்காவலர் பொறுப்பில் இருந்த ஒன்பது பேருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர், அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கல்லூரிகளில், வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடங்கின.
இதையடுத்து, சிறப்பு அதிகாரியாக, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.என்.சேஷனை, ஐகோர்ட் நியமித்தது. "இவர், பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தலை நடத்துவார். ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் காலி பணியிடங்களை நிரப்புவார்" என, ஐகோர்ட் தெரிவித்தது.
இதையடுத்து, டி.என்.சேஷன் தலைமையில், அறக்கட்டளை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, மே 26ம் தேதி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. இதில், பச்சையப்பன் கல்லூரி, ஓய்வு பெற்ற விலங்கியல் துறை பேராசிரியர் ராமநாதன், ஜெ.என்.என்., கல்வி குழும தலைவர் ஜெயச்சந்திரன், அ.தி.மு.க., கவுன்சிலர் பிரதாப்குமார், அ.தி.மு.க., அண்ணா நகர் வட்ட செயலர் கோதண்டராமன் மகனும் வர்த்தகருமான ஹேம்நாத், பச்சையப்பன் அறக்கட்டளை முன்னாள் தலைவர் பிரபாகரன் ஆகியோர், அறங்காவலராக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் நடந்து மூன்று மாதங்களாகியும், இதுவரை அறக்கட்டளை பொறுப்பை, ஐவரும் ஏற்கவில்லை. இதனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள், 200க்கும் மேற்பட்டவை, நிரப்பப்படாமல் உள்ளன. சென்னை, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, பச்சையப்பன் கல்லூரிக்கு, மெட்ரோ நிறுவனம் கொடுத்த, 20 கோடி ரூபாய், கல்லூரியின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது.
"தானே" புயலால் பாதிக்கப்பட்ட, கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரியில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. நடப்பாண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் சேர்க்கையில் குளறுபடி உள்ளிட்ட, பல்வேறு சிக்கல்களையும், அறக்கட்டளை நிர்வாகம் சந்தித்து வருகிறது. அறங்காவலர் தேர்வு முடிந்து, மூன்று மாதங்களாகியும், இதுவரை, நிர்வாக பணிகள் எதுவும் நடக்கவில்லை; குழு கூட்டங்களும் நடத்தப்படவில்லை.
எனவே, "பச்சையப்பன் அறக்கட்டளையை, அரசே ஏற்று நடத்த வேண்டும்; அப்போது தான், அறக்கட்டளை சொத்துகளை பாதுகாக்க முடியும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தேர்வு செய்யப்பட்ட அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான, அ.தி.மு.க., கவுன்சிலர் பிரதாப் குமார் கூறுகையில், "பணிகளை துவக்க, முதல்வரின் அனுமதி கேட்டு காத்திருக்கிறோம்," என்றார்.

No comments:

Post a Comment