Friday, 23 August 2013

கல்வியோடு காலை உணவு!

பள்ளிக்கு படிக்க வரும் ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு அளித்து வருகிறது சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி. அத்துடன் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியும் அளிக்கிறது.

சென்னையின் கடற்கரையோரப் பகுதியில் அமைந்திருக்கும் திருவல்லிக்கேணியில் எம்.ஓ.பி. வைணவ தொடக்கப்பள்ளி. காலை 8 மணி. பள்ளிக்கு சீருடையுடன் வந்த 50 ஏழை மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. முதலில் வயிற்றுக்குக் காலை உணவு. அதையடுத்து, காலை 8.15 முதல் 9.15 வரை ஆங்கில மொழிப்பயிற்சி. அந்தக் குழந்தைகள் அந்த வகுப்பில் ஆர்வத்துடன்  கலந்து கொள்கிறார்கள்.

பள்ளிக்கு வரும் ஏழைக் குழந்தைகளுக்காகத்தான் மதிய உணவுத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. காலையிலும் வீட்டில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்காக ‘ஆகார்’எனப்படும்  காலை உணவுத் திட்டம் கடந்த சில வாரங்களாக இப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எங்கள் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது. ஐந்து வகுப்புகளிலும் சேர்த்து மொத்தம் 244 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் என்னையும் சேர்த்து மொத்தம் பத்து ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் பயிலும் 80 சதவீதம் மாணவர்களின் பெற்றோர் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பங்களின் குழந்தைகள், அப்பா, அம்மா இல்லாத குழந்தைகள் எல்லாம் இங்கே படிக்கின்றனர். இம்மாணவர்கள் பெரும்பாலும் காலை உணவை சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள். பசியோடுதான் பள்ளிக்கு வந்து படிப்பார்கள். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு மட்டுமே இவர்களுக்கு பகலில் உணவாக இருக்கும். மாணவர்களிடம் சுகாதாரம் பற்றி சொல்லிக் கொடுக்கும்போது, காலையில் நீ பல் தேச்சியா? குளிச்சியா? கை கழுவிட்டு சாப்டியா என்று நாங்கள் கேட்கும்போது, சாப்பிடவில்லை டீச்சர் என்பார்கள். அதைக் கேட்கும் போது மனதிற்கு என்னவோ போல் இருக்கும். இதற்காகவே, ஆசிரியர்களின் குடும்ப விழாக்கள், பிறந்த நாள்கள், திருமண நாள்கள் போன்ற நாட்களில் இம்மாணவர்களுக்கு எங்களுடைய செலவில் உணவு வாங்கித் தருவோம். இதைக் கவனித்த எங்கள் பள்ளியின் நிர்வாகியான பார்த்தசாரதி (வயது 92) அவர்கள், இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போது எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத் அவர்கள், ‘காலை உணவு சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு, எங்கள் கல்லூரியின் செலவிலேயே உணவு வழங்குகிறோம். ஆனால், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் யாரேனும் அதைப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்’ என்றார். ‘நாங்கள் பத்து பேரும் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம்’ என்றோம். அதையடுத்து, கடந்த ஜூலை 11-ஆம் தேதி இப்பள்ளியில் ஆகார் திட்டத்தைத் தொடங்கி வைத்து விட்டார். காலை உணவுத் திட்டம் மட்டுமின்றி, அப்பள்ளி மாணவர்களுக்கு அக்கல்லூரியில் பயிலும் மாணவிகளைக் கொண்டே ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பும் எடுக்கச் சொல்லியிருக்கிறார்" என்கிறார், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பங்கஜம்.

உணவுத் திட்டத்தால் மாணவர்கள் விடுப்பு ஏதும் எடுக்காமல், பள்ளிக்கு நேரத்திற்கு வந்து விடுகிறார்கள். இஸ்மாயில் என்ற ஐந்தாம் வகுப்பு மாணவனின் தாயான பாத்திமா ‘டீச்சர்! எம்பையன் இங்கிலீஷ் படிக்கணும். அவன் இங்கிலீஷ்ல பேசறத நான் கேட்டு சந்தோஷப்படணும் டீச்சர். அதுக்காகவே நான் சீக்கிரம் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்று இங்குள்ள ஆசிரியையான தமிழ்ச் செல்வியிடம் கூறியிருக்கிறார்.

இப்பள்ளியில் காலை உணவு சாப்பிட இயலாத அளவிற்கு வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ள மாணவர்கள் யார் யாரென்று கணக்கெடுத்து, தற்போதைக்கு 50 மாணவர்களுக்கு காலையில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. திங்கள் அன்று  இட்லி, சாம்பார். செவ்வாய் அன்று பொங்கல், சாம்பார். புதன் அன்று இடியாப்பம், வடைகறி. வியாழன் அன்று பூரி, குருமா. வெள்ளி அன்று கிச்சடி அல்லது பிரட் சான்ட்விஜ் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவினை எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி மாணவிகளே பரிமாறுவார்கள். குழந்தைகள் சாப்பிட்டு முடித்தபின், அவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுப்பார்கள். இங்குள்ள பத்து ஆசிரியர்களில் ஒரு நாளைக்கு ஓர் ஆசிரியர் என்ற முறையில், எங்களில் ஒருவர் காலை 7.50 மணிக்கு பள்ளிக்கு வந்து விடுவோம்" என்றார் இந்தப் பள்ளியின் ஆசிரியரான சாந்தகுமார்.

இங்குள்ள ஒவ்வொரு குழந்தையும் ஆர்வமான குழந்தைகள். புதிதாய் கற்றுக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு. கல்வி பயில வறுமை ஒரு காரணமாய் அவர்களுக்கு அமைந்ததுதான் வருத்தமாய் இருக்கிறது. காலை உணவு கூட இல்லாமல் படிக்க வருவதை நினைத்தால் பகீரென்று இருக்கிறது. அக்குழந்தைகளின் பசியை எங்கள் கையால் பரிமாறி, பசியாற்றினோம் என நினைக்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. படிக்கும் போதே, எங்களாலும் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என நினைத்து பெருமையாக இருக்கிறது" என்று,  இந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வந்த எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி மாணவிகள் தர்ஷிணி, ராஜலட்சுமி, அனு ஆகியோர் ஒரு சேர கூறினர்.

எல்லாக் குழந்தைகளும் சமம். அப்பள்ளியில் பயிலும் மாணவனின் தந்தை மீனவராக இருப்பார். அவர் அதிகாலையிலேயே மீன்பிடிக்க கடலுக்குள் போய்விடுவார். குடும்ப வறுமை காரணமாக, அம்மாணவனின் அம்மாவும் வீட்டுவேலை செய்யப் போய்விடுவார். அக்குழந்தைகள் காலை உணவின்றி பள்ளிக்கு வந்து படிக்கின்றன. இப்படி உணவருந்தாமல் பயிலும் குழந்தைகளுக்கு மூளைச் சோர்வு ஏற்படும். அப்படி மூளைச் சோர்வோடு படிக்கும் குழந்தைகளுக்குப் பாடங்கள் படிக்க வருமா? குழந்தைகளுக்கு காமராஜர் மதிய உணவு தந்தார். பிள்ளைகள் படிக்க வந்தனர். இதன் அடிப்படையில்தான் காலை உணவுத் திட்டத்தை இப்பள்ளியில் செயல்படுத்தினோம். தரமான உணவு வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். உணவு மட்டுமின்றி, அவர்களுக்கு ஆங்கிலக் கல்வியையும் எங்களது மாணவிகளைக் கொண்டு பயிற்றுவிக்கிறோம். இத்தகைய சேவையால் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் சமூகம் பற்றிய விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்" என்கிறார் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் முதல்வர் நிர்மலா பிரசாத்.

No comments:

Post a Comment