Friday 23 August 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 புதிய ஆங்கில வார்த்தைகளாவது கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அரசுத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என இந்த ஆண்டு 3,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். அதோடு, ஏற்கெனவே ஆங்கில வழி வகுப்புகள் உள்ள 320 பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத்தர பல்வேறு புதிய திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வகுத்துள்ளது.
முதல் கட்டமாக, இந்த மாணவர்களுக்கு ஆங்கில வழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.24) பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களிடத்தில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்ப்பதற்கான எளிய முறைகள் இந்தப் பயிற்சியின்போது கற்றுத்தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கில வழி வகுப்புகளைப் பொருத்தவரை ஆங்கில எழுத்துகள், வார்த்தைகளோடு வார்த்தை உச்சரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெறும் கரும்பலகையின் மூலம் மட்டுமே ஆங்கிலத்தைக் கற்பிக்காமல், விடியோ, ஆடியோ சி.டி.க்கள் மூலமும் மாணவர்களின் உச்சரிப்புத் திறன் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
24/08/2013  CRC english subject

No comments:

Post a Comment