பொதுவாக நிதிப் பற்றாக்குறை என்றால் அது நடுத்தர குடும்பங்களுக்குத் தான் அதிகமாக ஏற்படும். ஏன் எனில், செல்வ செழிப்பான குடும்பங்களுக்கு மாத பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.
அதேப்போல, ஏழைக் குடும்பத்தினர், அவர்களுக்கு வரும் குறைந்தபட்ச தொகையை அவர்களது அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவே அவர்களுக்கு போதாத நிலையில், பட்ஜெட் என்பது கேள்விக்குறியாக இருக்கும்.
எனவே, நடுத்தர குடும்பத்தார் தங்களது செலவுகளை பட்டியல் போட்டு பட்ஜெட் தயார் செய்யுங்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வளவு செலவுகள் ஆகின்றன என்பதை தனியாக கணக்கெடுங்கள். நீங்கள் தயாரிக்கும் பட்ஜெட் இரண்டு வகையாக இருக்க வேண்டும். அதாவது, சில குறிப்பிட்ட செலவுகள் அதாவது மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், கல்விக் கட்டணம் போன்றவை கட்ட வேண்டிய மாதத்துக்கான ஒரு பட்ஜெட்டும், இவை இல்லாமல் இருக்கும் மாதங்களுக்கு ஒரு தனி பட்ஜெட்டும் உருவாக்குங்கள்.
இதில், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளையும் தனியாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். (எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை எவ்வாறு குறிப்பெடுப்பது?) அதாவது, திடீரென சுப, அசுப காரியங்களுக்குச் செல்லுதல், வீட்டில் பழுதாகி இருக்கும் ஒரு பொருளை மாற்ற வேண்டிய நிலை வருதல் போன்றவற்றை தனியாக எடுத்தெழுதிக் கொள்ளுங்கள்.
இப்போது, சாதாரண மாதத்துக்கான செலவின் மொத்தக் கணக்கையும், கூடுதல் செலவுகள் கொண்ட மாதத்துக்கான மொத்தக் கணக்கையும் கூட்டி எடுங்கள்.
இதில், உங்களது செலவு எந்த மாதத்துக்கான செலவுக்கு வசதியாக இருக்கிறது என்று பாருங்கள். அதாவது, குறைந்த செலவுள்ள மாதத்துக்கான தொகை தான் உங்களது மாத வருமானம் என்றால், ஒன்று, உங்களது வருமானத்தை உயர்த்த வேண்டும். அல்லது தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதனை குறைக்க வேண்டும்.
ஒரு வேளை அதிகப்படியான செலவு கொண்ட மாதத் தொகையை உங்களது வருமானத்தால் ஈடுகட்ட முடியும் என்றால், செலவு குறைந்த மாதத்தில் உங்கள் கையில் நிற்கும் கூடுதல் தொகையை முதலீடு செய்யவோ, சேமிக்கவோ திட்டமிடுங்கள்.
No comments:
Post a Comment