ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2010-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி 32 ஆயிரம் பட்டதாரிகள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் 12.5.2010 முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. பணி நியமன ஆணைக்காக காத்திருந்த அவர்கள் யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே இனி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று அரசு கூறிவிட்டது.
இதனை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்ளிட்ட 70 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி அவர்கள் 70 பேரும் உயர் நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல் என்.பரந்தாமன் உள்ளிட்ட வேறு 24 பேர் தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இதனை எதிர்த்து அவர்கள் அனைவரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
ஆக 70 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும், பின்னர் 24 பேர் தனியாக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பு விவரம்: 2010-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்புப் பணிக்கு மனுதாரர்களின் பெயர்களை வேலைவாய்ப்புத் துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய நிலவரப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் எழுதாமலேயே அவர்கள் ஆசிரியர் பணி நியமனத்துக்கான முழுத் தகுதியையும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு இனி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற அறிவிக்கையை 23.8.2010 அன்று ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. எனினும் அதில் ஒரு விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிக்கை வெளியாகும் முன்னரே ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றிருந்தால், அந்த பணி நியமனங்களை 2001-ஆம் ஆண்டின் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிமுறைகளின்படி மேற்கொள்ளலாம் என்ற அந்த விதிவிலக்கில் கூறப்பட்டிருந்தது.
ஆகவே, இந்த வழக்கில் தொடர்புடைய 94 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை. எனினும் தற்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட காலியிடங்கள் இல்லை என்று அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார். ஆகவே, எதிர்காலத்தில் காலியிடங்கள் உருவாகும்போது இவர்கள் அனைவரையும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர் பணியில் நியமித்திட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.By dn, சென்னை
First Published : 10 July 2013 02:24 AM IST
No comments:
Post a Comment