கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் தயாரித்து நேற்று வெளியிட்டனர்.
கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்" உதவியுடன், "டிஜிட்டல் ஸ்டோரி டெல்லிங்" முறையில் குறும்படங்கள் தயாரிக்க கோடை கால பயிற்சியளித்தது. மாணவர்களின்
படைப்புகள், கோவை மேயர், கமிஷனர் முன்னிலையில் நேற்று திரையிடப்பட்டன.
ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் "நோய்களை நோக்கி மனிதர்கள்" என்ற தலைப்பில், குறும்படம் தயாரித்துள்ளனர். ரோட்டோர கடைகளில் விற்கப்படும் சாயமேற்றப்பட்ட, ஈ மொய்க்கும் உணவு பொருட்களாலும், புகை பிடித்தலாலும் ஏற்படும் நோய்கள், பாதிப்புகள் குறித்து குறும்படம் எடுத்தனர்.
பீளமேடு பள்ளி மாணவர்கள், "நீரை வீணாக்காதீர்" என்ற தலைப்பில், பொதுக் குழாய்களில் தண்ணீர் வீணாவது, பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாததால் குழாய்கள் உடைக்கப்படுவது குறித்து குறும்படம் எடுத்துள்ளனர்.
செல்வபுரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள், "பாலித்தீன் தவிர்ப்பீர்" என்ற தலைப்பில், படம் எடுத்தனர். பாலித்தீனை நிலப்பரப்பில் வீசுவதால், நிலம் மாசுபடுகிறது, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாகிறது. பாலித்தீன் பயன்பாட்டை தவிர்த்து, புழக்கத்திலுள்ளதை அழித்தால் மட்டுமே ஆபத்தை தவிர்க்க முடியும் என, தத்ரூபமாக பதிவு செய்திருந்தனர்.
ஆர்.எஸ்.புரம் மேற்கு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் "வங்கிகளின் செயல்பாடு" என்ற குறும்படம் எடுத்தனர். வங்கியில் சலான்கள் நிரப்புதல், பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, வங்கியின் செயல்பாடுகள் பற்றி விளக்கியுள்ளனர்.
குப்பக்கோணாம்புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், "மது குடிப்பதன் விளைவு" என்ற தலைப்பில் குறும்படம் எடுத்தனர். இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது,ரோட்டில் விழுந்து கிடப்பது, குடும்பத்தினர் அவதிப்படுவது போன்ற காட்சிகளுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெறுவதை படம் எடுத்துள்ளனர்.
குறும்படங்கள் எடுக்க மாணவர்களுக்கு ஷூட்டிங், எடிட்டிங், வாய்ஸ் மிக்ஸிங், பின்னணி இசை கொடுப்பது போன்ற பயிற்சிகளை அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் கொடுத்தது.
பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸாண்டர் கூறுகையில், "ஒவ்வொரு டீமிலும் எட்டு மாணவர்கள் குழுவாக செயல்பட்டனர். பணிகளை அவர்கள் பகிர்ந்து கொண்டு சிறப்பாக செய்துள்ளனர். இதனால், மாணவர்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது," என்றார்.
குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சியில், ரங்கநாதபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவி வித்ய பிரியா பேசுகையில், "ரோட்டோரத்தில் விற்கப்படும் காளான் சில்லி, மைதா மாவு கொண்டு தயாரிக்கப்பட்டது. சாயப்பவுடர்களை கலப்பதால் சுகாதாரம் பாதிக்கிறது. காந்திபுரம், வ.உ.சி., பூங்கா போன்ற இடங்களில் கல்லூரி மாணவர்கள் கும்பலாக வந்த "பாஸ்ட் புட்" உணவு சாப்பிடுகின்றனர்.
வாகன புகையால் காற்று மாசுபடுவதால் போக்குவரத்து போலீசாரின் உடல் நலம் பாதிக்கிறது. இந்த காட்சிகளை வீடியோ எடுக்க ரொம்ப சிரமப்பட்டோம். பல இடங்களில் ஒத்துழைக்காமல் விரட்டி விட்டனர். இப்போது விழிப்புணர்வு பெற்று விட்டோம். "பாஸ்ட் புட்" உணவு, காளான் சில்லி போன்றவற்றை, பார்த்தாலே வெறுப்பு ஏற்படுகிறது," என்று அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
No comments:
Post a Comment