Wednesday, 10 July 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழைகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக வந்த விண்ணப்பங்களில் 1,672 விண்ணப்பங்கள் பல்வேறு பிழைகளுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பெயர், பிறந்த தேதி, தேர்வு மையம், தேர்வு எழுதும் பாடம் போன்ற அடிப்படைத் தகவல்களைக் கூட சரியாக நிரப்பாமல் நிறையபேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவருக்கும் நிபந்தனை அடிப்படையில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் பிழைகள் என்ன என்றும், அதை நிவர்த்தி செய்தால் மட்டுமே அவர்கள் பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்றும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த ஊரில் தேர்வு எழுத விரும்புகிறார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்காத 128 பேருக்கு திருச்சியில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வு விண்ணப்பங்களை கலர் ஜெராக்ஸ் எடுத்த இருவரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,881 பேரைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்காக கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1.67 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டன.
1.67 லட்சம் பேருக்கு மொத்தம் 422 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஏராளமான விண்ணப்பங்கள் பிழைகளுடன் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
எம்.ஏ., எம்.எஸ்சி. படிப்புகளுக்குப் பிறகு பி.எட். முடித்தவர்கள், போட்டித் தேர்வு விண்ணப்பங்களைக்கூட சரியாக பூர்த்திசெய்யத் தெரியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய பிறந்த தேதியை "டைப்' செய்ய வேண்டும். ஆனால், பல விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதியைக் கூட சரியாக பூர்த்தி செய்யாத நிலையில் அவர்களுக்கான விண்ணப்பங்களை எப்படி பதிவேற்றம் செய்வது என தேர்வு வாரிய அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அல்லது மாற்றுத்திறனாளிகளாக இல்லாத 28 பேர் ரூ.250 கட்டணம் செலுத்தியுள்ளனர். இவர்களிடம் மீதிக் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணப்பத்தில் திருத்தம் செய்தால் தேர்வு எழுத முடியாது: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த சில விண்ணப்பதாரர்கள் தங்களது பிழைகளை மறைக்கும் வகையில் விண்ணப்ப நகலைத் திருத்தியிருந்தனர். ஆனால், அசல் விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் விண்ணப்பதாரர்கள் தவறு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உதாரணத்துக்கு, தேர்வு மையங்கள் தொடர்பாக பூர்த்திசெய்யாத ஒரு விண்ணப்பதாரர், சென்னையில் தேர்வு மையத்தைக் கோரியிருந்தவாறு விண்ணப்ப நகலில் மாற்றம் செய்திருந்தார். அவரை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
பெயர், தேர்வு மையங்களை விண்ணப்ப நகலில் திருத்திய 4, 5 பேர் இந்த வகையில் சிக்கினர்.
ஆசிரியர் பணிக்கு வர விரும்புபவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடக் கூடாது. எனவே, விண்ணப்பங்களை திருத்தி எடுத்து வந்தவர்களுக்கு இந்த போட்டித் தேர்வில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
விண்ணப்பத்தில் பிழை செய்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறையிட்டால் அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். ஆனால், விண்ணப்பங்களைத் திருத்தியோ, மாற்றியோ கொண்டுவந்தால் அவர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.By ஆ.ரகுராமன், சென்னை
First Published : 10 July 2013 02:41 AM ISTBY DINAMANI

No comments:

Post a Comment