Wednesday, 10 July 2013

குழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரைவில் எட்டும்

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என்ற நிலையை தமிழகம் விரைவில் எட்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.கே.பச்சைமால் தெரிவித்தார்.
மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மேலும் பேசியது:
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றிட 2003-ஆம் ஆண்டு மாநில செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் விளைவாக இன்று தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.
கடந்த மே மாதம் சார்க் உறுப்பினர் நாடுகளால் நடத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் தொடர்பான பயிலரங்கம் புது தில்லியில் நடைபெற்றது.
இதில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து தற்போது மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரும், மென்பொருள் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவரும் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இது தெற்கு ஆசிய அளவில் இந்திய நாட்டின் குறிப்பாக தமிழகத்தின் பெருமையை தலைநிமிர்த்தியுள்ளது.
குழந்தைத் தொழிலாளர்களைப் பணியிலிருந்து விடுவித்து அவர்களுக்கு கல்வி வழங்கிட 15 மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் நடத்தப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்காக தமிழகத்தில் தற்போது 335 சிறப்புப் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 11 ஆயிரம் குழந்தைகள் படித்து வருகின்றனர்.
தொழிற்சாலைகள், கடைகள் மட்டுமன்றி, வீடுகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும் சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து அரசுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
மாநிலங்களவை உறுப்பினர் ந.பாலகங்கா, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் பியாரெ, தொழிலாளர் துறை ஆணையர் டாக்டர் பி.சந்திரமோகன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் க.அய்யனு, மாநகராட்சி உறுப்பினர் ம.முகமது இம்தியாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment