Sunday, 27 October 2013

ஒரு தந்தையின் கடிதம்


அன்புள்ள மகனுக்கு,
அப்பா எழுதுவது
நான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கான காரணங்கள் மூன்று.
  1. வாழ்க்கை, வாய்ப்புகள்,துரதிர்ஷ்டம் முதலானவற்றை யாராலும் முன்கூட்டியே அறியமுடியாது.வாழ்க்கை கால அளவு எவ்வளவு என்பதும் நமக்கு தெரியாது.சில விஷயங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்திலேயே சொல்லி விடுவது நல்லது
  2. நான் உனக்கு அப்பதானே! நான் சொல்லிக் கொடுக்காமல் வேறு யார் சொல்லிக் கொடுப்பார்கள்?
  3. நான் சொல்லி இருக்கும் விஷயங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டவை. இவற்றை நீ அனுபவித்து தெரிந்து கொள்வதை விட எனது அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்வது கால,பொருள் விரயங்களை தவிர்க்கும் அல்லவா?
நான் சொல்லப் போகும் விஷயங்களை உன் மனதில் பதிய வைத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் உன் கையில்தான் இருக்கிறது.

  • எல்லோரும் உன்னிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்க வேண்டாம். மரியாதை இன்றி நடந்து கொள்பவர்களைப் பற்றி புலம்புவதில் பயனில்லை. உண்மையில் உன்னை மரியாதையாக நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கும் உனது அம்மாவுக்கு மட்டுமே தவிர வேறு யாருக்கும் இல்லை  உன்னிடம் நல்லவிதத்தில் நடந்து கொள்பவர்களிடம் நீ நல்ல உறவு வைத்துக் கொள்ளவேண்டும்.அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்.அதே நேரத்தில் எச்சரிக்கையும் தேவை.ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். உன்னிடம் நல்லவிதமாக நடந்து கொள்பவர்கள் எல்லாம்  உன்னை நேசிப்பவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த மனிதர்தான் வேண்டும். இந்தப் பொருள்தான் வேண்டும். இவை இல்லை என்றால் வாழ்க்கையே முழுகிப் போய்விடும் என்றெல்லாம் இந்த உலகத்தில் ஒன்றும் கிடையாது.நீ நேசிக்கும் நபரோ அல்லது பொருளோ உன்னை விட்டுப் போய்விட்டாலும் உண்மையில் எந்த பாதிப்பும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் எந்த இழப்பையும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும்.
  • மனித வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம் போன்றது. நிகழ்காலத்தில் வாழ்கையை வீணடித்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை உன்னை விட்டு விலகி சென்றிருக்கும்.
  • அன்பு என்பது உண்மையில் நல்ல விஷயம்தான்.ஆனால் அது நிலையானது  அல்ல. சூழ்நிலயைப் பொறுத்து அது அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும்.காதல் புனிதமானது இனிமையானது,அழகானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசித் திரியாதே! இதெல்லாம் எல்லா பெற்றோரும் சொல்வதுதானே என்று நீ நினைக்கலாம். ஆனால் இவற்றால் என்றாவது நீ மனமுடைந்து போக நேரக் கூடிய சூழல் வந்தால் அந்த சோகத்தை தவிர்க்கவே இதைக் கூறுகிறேன். அதனால்தான் அவற்றை மிகைப் படுத்த வேண்டிய அவசியம்இல்லை என்றும் வலியுறுத்துகிறேன்.
  • வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களில் பலர் அதிகம் படிக்காதவர்கள்.கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம் என்பது இதற்கு அர்த்தம் அல்ல.வாழ்க்கைக்கு முக்கியமானது கல்வி. அதே நேரத்தில் படிப்பறிவு மட்டுமே வாழ்க்கைக்கு போதாது என்பதை புரிந்து கொள் 
  • கந்தை உடுத்துபவன் பணக்காரன் ஆக முடியாதா என்ன? நிச்சயம் முடியும் ஆனால் கந்தைத் துணியுடன்தான் தனது பயணத்தை தொடங்க வேண்டும் வேறு வழியில்லை.
  • என்னை வயதான காலத்தில் நீ தாங்குவாய் என்று நான் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை.அது போலவே உன்னையும் வாழ்நாள் முழுதும் என்னால் தாங்கிக் கொண்டே இருக்க முடியாது என்பதை நீ உணர வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் வரையே உன்னை பராமரிக்க  முடியம். உனது உழைப்பும் முயற்சியுமே உன் எதிர் காலத்தை நிர்ணயம் செய்யும்
  • மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை ஒரு போதும் மீறாதே. அதே நேரத்தில் மற்றவர்கள் உனக்கு கொடுத்த வாக்கை கடைபிடித்தே தீர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்வது உன்னை மட்டுமே பொறுத்த விஷயம். நீ நிச்சயம் அவ்வாறு நடந்து கொள்ள முடியும்.
  • அதிர்ஷ்டத்தை நம்பாதே இந்த உலகில் இலவசம் என்று ஒன்று கிடையாது.அதற்கான விலையை கொடுத்துத்தான்  வேண்டும்.
  • புற  விசை ஒன்று தாக்காதவரை ஒரு பொருள் அதே நிலையில் இருக்கும். இது நியூட்டனின் விதி. வாழ்க்கையும் அப்படித்தான் ஏதோ ஒரு புற நிகழ்வு வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்து விடுகிறது. அந்தப் புறநிகழ்வு நடக்கும்போது அதை பயன்படுத்திக் கொள். இல்லையெனில் சாதாரண மனிதனைப் போல பயணமோ நிலைப்போ அப்படியே இருக்கும்.
  • நான் உன்னுடன் செலவிடும் நேரம் போதுமானதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது எவ்வளவு நேரமாக இருந்தாலும் நம் இருவருக்கும் அது மிகமுக்கியமானது. நாம் அடுத்த முறை சேர்ந்து இருப்போம் என்று சொல்ல முடியாது காரணம் வாழ்க்கை அவ்வளவு தூரம் நிலை இல்லாதது. அதை கவனத்தில் கொள்வாய் என் கண்மணி!
                                                             இப்படிக்கு 
                                                         உன் அன்பு அப்பா 

1 comment:

  1. உன் அன்பு அப்பா இராஜகோபால் என்று எழுதி இருந்தால் சரியாக இருந்திருக்கும்.

    ReplyDelete