தவறான கொள்கைகளாலும், முறையான கண்காணிப்பு இல்லாததாலும், கட்டுப்பாடுகளைச் சரிவர, சரியான நேரத்தில் மேற்கொள்ளாமல் போனதாலும் பொருளாதாரத்தை மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளி இருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். குறிப்பாக, நிதியமைச்சகத்தின் பல தவறான முடிவுகள்தான் இன்று ரூபாயின் மதிப்பு கணிசமாகக் குறைந்திருப்பதற்கும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கும் காரணம். இப்போது மீண்டும் ஒரு தவறான முடிவை நிதியமைச்சகம் எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.
ப்ரிட்ஜ், ஏர்கண்டிஷனர், டெலிவிஷன், மோட்டார் சைக்கிள் போன்ற மத்திய தர வகுப்பினர் பரவலாக வாங்க ஆசைப்படும் பொருள்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் முன்வர வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். இதன் மூலம் அதுபோன்ற நுகர்வோர் பொருள்களின் விற்பனையை அதிகரிப்பதும், உற்பத்தியைப் பெருக்குவதும்தான் நிதியமைச்சகத்தின் நோக்கம். அதனால், பொருளாதாரம் சுறுசுறுப்படைந்து புதிய வேகத்துடன் இயங்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
இது ஏதோ கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பதுபோல இருக்கிறது. இதனால் ஏற்றுமதி அதிகரிக்கப் போவதும் இல்லை. இறக்குமதி குறையப் போவதும் இல்லை.
சற்று யோசித்துப் பார்த்தால், இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கக் கூடும் என்பதும் அதனால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரே மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.
நமது இன்றைய உடனடித் தேவை நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பது. அதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை, இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் அத்தியாவசியப் பொருள்கள் அல்லாதவை எவை என்பதைப் பட்டியலிட்டு அவற்றிற்கான சுங்க வரியை அதிகப்படுத்துவது. இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது. அடுத்தாற்போல, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் அதே வேளையில் அன்றாட வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கவும் வழிகோலுவது.
இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு அதிகக் கடனுதவி வழங்குவதன் மூலம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. குறைந்த வட்டியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் கடனுதவி வழங்குவதன் மூலம், அந்த வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்குமே தவிர குறையாது. அது மட்டுமா? ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களை மேலும் கடனாளிகளாக்குவதன் மூலம், அவர்களது அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சியாகவும் இது முடியும்.
குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்று பொருள்களை வாங்குவோரும் நாளையே வட்டி விகிதம் உயர்த்தப்படுமானால் கடனைத் திரும்பி அடைக்க மாட்டார்கள். முறையான கட்டுப்பாடுகளோ, தேவையை உத்தேசித்த கடன் விநியோகமோ இல்லாமல் போனால் 2008 இல் அமெரிக்காவில் நடந்தேறிய வங்கி திவால் நிலைக்கு நமது அரசுடமை வங்கிகளும் தள்ளப்படும்.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி கூறியிருப்பதுபோல, இப்போதே அரசு வங்கிகளிடம் இருக்கும் வைப்பு நிதியின் 78 விழுக்காடு கடனாக வழங்கப்பட்டுவிட்ட நிலைமை. இதற்கு மேலும் கடன் வழங்கி அவை வாராக் கடனாகப் போனால், வங்கிகள் தடுமாறத் தொடங்கிவிடும். அரசு நிதியுதவி அளிக்கும் என்றாலும் எந்த அளவுக்கு உதவி செய்துவிட முடியும் அல்லது பங்களிப்பு நல்க முடியும்? அந்த அளவுக்கு அரசிடம் அதிகப்படியான நிதியாதாரம் இருந்தால் பொருளாதாரம் இப்படி தள்ளாட வேண்டிய அவசியமே இல்லையே.
இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. எல்லாவற்றிலும் தனியார்மயம், தனியார் பங்களிப்பு என்று பேசும் அரசு, இதுபோன்ற சிறுகடன்களையும், நுகர்வோர் கடன்களையும் குறைந்த வட்டியில் வழங்கும்படி தனியார் பன்னாட்டு வங்கிகளுக்கு அறிவுரை வழங்குவதுதானே? வாராக்கடனாகும் வாய்ப்புள்ள கடன் விநியோகம் என்றால் அது அரசு வங்கிகளுக்கு என்று ஒதுக்கீடு செய்வது என்ன நியாயம்?
நிதியமைச்சகத்தின் இந்தத் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதுதான் அரசுடமையாக்கப்பட்ட வங்கித் தலைவர்களின் கடமை. ரிசர்வ் வங்கியும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை பலவீனப்படுத்தும் அரசின் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
நிதியமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். இந்தியாவின் பலமே நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு மனப்பான்மைதான். தயவுசெய்து, அதை உருக்குலைத்து, மக்களைக் கடனாளியாக்கி நடுத்தெருவில் நிறுத்தத் திட்டம் தீட்டாதீர்கள்!
No comments:
Post a Comment