செப்டம்பர் 14 சர்வதேச முதலுதவி தினம்
உடுக்கை இழந்தவன் கைபோல்...
உடுக்கை இழந்தவன் கைபோல்...
நட்புக்கு இலக்கணமாக திருவள்ளுவர் கூறுவது விபத்தில் மாட்டிக்கொள்பவர்களுக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, தீ விபத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்கும் பொருந்தும். இடுப்பு வேட்டி நழுவும் போது படக்கென்று கைகள் அதனைப்பிடித்து சரி செய்வது போல் முதல் உதவி அமைய வேண்டும். ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அல்லது காயம் அடைந்தால், அல்லது விபத்தில் சிக்கிக் கொண்டால் அவருக்கு விரைவாகவும் சரியானதாகவும் முதலுதவி அளிக்கப்படவேண்டும்.
எந்தவொரு அவசரச் சூழலிலும்முதல் சில நிமிடங்கள் மிக முக்கியமானதாகும்.உதாரணமாக மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமானதாகும். அதை மருத்துவர்கள் பொன்னான நேரம் (ழுடீடுனுநுசூ ழடீருசு ) என்று கூறுவார்கள். ஒரு அவசரத்தில் எதையெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்ற புரிதல் ஒரு உயிரைக் காப்பதற்கு அவசியமான, அடிப்படையான தேவைகளாகும். ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ உதவியாளர் வரும் வரை ஒருவரின் உயிரை பாதுகாப்பதுதான் முதலுதவி செய்பவரின் பணியாக இருக்க முடியும்.ஓவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு வாகனத்திலும் முதலுதவி பெட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும். நமது நாட்டில் இது போன்ற பெட்டிகளை வீடுகளில் காணமுடியாது. பல வாகனங்களில் உள்ள முதலுதவி பெட்டிகள் ஒன்று காலியாக இருக்கும் அல்லது அதில் உள்ள மருந்துகள் காலாவதியானவையாக இருக்கும். அரசு பேருந்துகள், ரயில் பெட்டிகள் போன்றவற்றில் இவற்றை மோப்பநாய் கொண்டுதான் தேட வேண்டும் .
முதலுதவி பெட்டிகள் அனைவரும் எளிதில் பார்க்கக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும்.சிறுபிள்ளைகள் இருக்கும் இடத்தில் இவை அவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டும்.ஆபத்தான சூழலில் பதற்றமின்றி செயல்பட வேண்டியது அவசியமாகும். நாம் பதற்றம் அடைவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களும் பதட்டம் அடையக்கூடும். அது அபாயத்தை அதிகரிக்கவே செய்யும். பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதை துரிதப்படுத்த வேண்டும். இதில் மருத்துவர்களுக்கும் பங்குண்டு. மருத்துவர்கள் விடுமுறை நாட்களில் ஆபத்து நிலையில் இருக்கும் வியாதியஸ்தர்களை கவனிக்க வருவதில்லை. அண்மையில் ரயிலார் நகரில் ஒரு சிறுவன் வீட்டின் காம்பவுண்டு சுவரில் இருந்து விழுந்து வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அந்த சிறுவன் குடியிருக்கும் பகுதியில் ஒரு மருத்துவரும் அவனுக்கு வைத்தியம் பார்க்க முன்வரவில்லை. பெற்றோர்கள் அவனை எடுத்துக்கொண்டு தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு காரில் விரைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். காயம் அடைந்தவரை அவரால் நகர முடியாவிட்டால் அவரை இழுத்துக்கொண்டு செல்லக்கூடாது. பாதிக்கப்பட்டவருக்கு காற்றோட்டம் கிடைக்கும்படி அவரை சுற்றி கூட்டம் கூடக்கூடாது.
சிறிய தீக்காயங்களுக்கு களிம்புகளை உடனடியாக தடவலாம்,பின்னர் மருத்துவரிடம் காட்டுவது நலம். பெரிய தீக்காயங்களுக்கு பாதிக்கப்பட்டவரை மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியமாகும். நீரில் மூழ்கியவர்களை கரை ஏற்றியவுடன் அவரை தலைகீழாக பிடித்துக்கொண்டு சுற்றுவதன் மூலம் அவர் குடித்துள்ள நீரை வெளியேற்ற முடியும். அவரைப் படுக்கவைத்து வயிற்றுப்பகுதியில் அமுக்குவதன் மூலம் நீரை வெளியேற்ற முடியும். ஒரு பெண்ணைக் காப்பாற்றும் ஆடவரின் நிலைமை கடினமானதுதான். அவர் மருத்துவரை அழைப்பதுதான் சரியாக இருக்கும். முதலுதவி முறைகளை அனைவருக்கும் கற்றுத்தர வேண்டியது அவசியமாகும்.
பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் அதற்கான ஏற்பாடுகளை அரசும் கல்வி நிறுவனங்களும் செய்ய வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு முதலுதவி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.மருத்துவ நிறுவனங்களும் முதலுதவி முகாம்களை அவை இருக்கும் பகுதிகளில் நடத்திட முன்வர வேண்டும்.முதலுதவிப் பெட்டிகளில் ரத்தத்தை துடைக்க உதவும் பஞ்சு, ஒட்டும் நாடாக்கள், ஆண்டி செப்டிக் திரவ மருந்து, கட்டுவதற்கு உதவும் பல வடிவ பேண்டேஜ்கள், தீக்காயத்துக்கு தடவும் களிம்பு, டிங்ச்சர் அயோடின், ஒரு கத்திரிக்கோல், ஒரு வெப்பமானி, ஒரு பென்சில், ஒரு சிறிய குறிப்பேடு போன்றவை இருக்க வேண்டும்.முதலுதவிப்பெட்டிக்குள் உங்கள் குடும்பவைத்தியரின் பெயர் முகவரி, தொலைபேசி எண், அலைபேசி எண், அவர் பணி புரியும் மருத்துவமனை எண் ஆகியவை இருக்க வேண்டும். இதை வாங்கி வைத்து விட்டு மறந்து விடக்கூடாது. முதலுதவிப்பெட்டியை பூட்டி வைக்கக் கூடாது என்பதுடன் பூட்டப்பட்ட இடத்திலும் வைக்கக்கூடாது. ஒவ்வொரு மாதமும் முதலுதவி பெட்டியை சோதனையிட்டு அனைத்தும் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
காலாவதியானவைகளை தூக்கி எறிந்து விட்டு புதியதை வாங்கி வைக்க வேண்டும். தீர்ந்து போனவைக்கு புதியவை வாங்கி வைக்க வேண்டும். இதை மறந்து விடக்கூடாது. வீடுகளில் தாங்கள் எப்போதும் செல்லும் மருத்துவமனைகளின் தொலை பேசி எண், அவசர மருத்துவ ஊர்தியை அழைக்க உதவும் தொலைபேசி எண் ஆகியவற்றை அனைவரும் உடனடியாக பார்க்கும் வண்ணம் குறித்து வைத்திருக்க வேண்டும் முதலுதவி என்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். அதுவே எல்லாமுமாகி விடாது. முதலுதவிக்குப் பின் மருத்துவரின் சிகிச்சை பல விஷயங்களில் அவசியமானதும், அவசரமானதும் ஆகும் என்பதை மறந்து விடக்கூடாது. செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு 2000ம் ஆண்டு முதல் இதை கடைப்பிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. அதன்படி சர்வதேச முதலுதவி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு சர்வதேச முதலுதவி தினம் செப்டம்பர் 14 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது
No comments:
Post a Comment