By dn, சென்னை
First Published : 12 September 2013 03:30 AM IST
ஒரே மாதத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பில் 8,464 மதிப்பெண் சான்றிதழ்களும், பிளஸ் 2 வகுப்பில் 7,830 மதிப்பெண் சான்றிதழ்களும் அனுப்பப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில் 2,434, பிளஸ் 2 வகுப்பில் 2,867 சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
விண்ணப்பித்து பல ஆண்டுகளாகக் காத்திருந்தவர்களுக்கு இப்போது மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள் விரைந்து அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்று மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்காக 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால் வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இப்போது இந்தச் சான்றிதழ்களை விரைந்து வழங்க தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த 21 ஆயிரத்து 600 பேரில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஒரே மாதத்தில் மாற்றுச் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மிகச் சிக்கலான நடைமுறை: மாற்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடைமுறை மிக நீண்டதும், சிக்கல்களைக் கொண்டதும் என்பதால் மதிப்பெண் பட்டியல் மட்டும் தேர்வுத்துறை சார்பில் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும்.
மாற்று மதிப்பெண் சான்றிதழைக் கோரி விண்ணப்பிக்கும்போது காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை, தாசில்தாரின் சான்றிதழ், பள்ளித் தலைமையாசிரியரின் சான்றொப்பம், மதிப்பெண் சான்றிதழின் நகல்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
இவற்றுடன் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யவே இரண்டு மாதங்கள் வரை ஆகும். அதன்பிறகு, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் அல்லது ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூலமாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வுத் துறை பணியாளர்கள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து தொலைந்த அல்லது சேதமடைந்த மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக அரசிதழில் அறிவிக்கை செய்வார்கள். அதன்பிறகு, மதிப்பெண் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு மாற்று மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்து வழங்கப்படும்.
குறைந்த பணியாளர்கள், சரியான திட்டமிடல் இல்லாதது, தேசிய தகவல் மையத்தில் ஏற்படும் தாமதம் போன்ற காரணங்களால் இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஆறு மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை காலதாமதம் ஆகிவந்தது.
இந்த நிலையில், மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடுக்கிவிட்டுள்ளது.
தேர்வுத்துறை தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறுவதால், ஒரே மாதத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.
சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்தல்: மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவதற்காக ஆண்டுதோறும் 12 லட்சம் விண்ணப்பங்கள் வரை தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்படும். இந்தப் பணிகளும் அதிகளவில் தேக்கமடைந்து இருந்தன.
இதையடுத்து, உண்மைத் தன்மையை ஆராயும் பணிகளை ஆன்-லைன் மூலம் விரைவாக நடத்தலாம் என தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. இந்தப் பணிகள் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டால் லட்சக்கணக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் பணி ஒரு சில வாரங்களிலேயே முடிந்துவிடும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment