Wednesday 11 September 2013

வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை: செப்டம்பர் 11,2013,17:47 IST

சென்னை : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி ப்ளஸ் 2 மற்றும் ப்ளஸ் 1 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும், திருவள்ளூரில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழை நீடிக்கும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இடியுடன் கனமழை பெய்து வருவதால் தி.நகர், சேப்பாக்கம், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் சுற்று வட்டாரங்கள் மட்டுமின்றி திருச்சி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், அரணி, சேய்யாறு சுற்றுப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழை நாளை வரை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக லண்டனில் இருந்து சென்னை வரும் விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment