Saturday, 17 August 2013

கடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான கதவுகள் திறக்கும் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு

உயர்ந்த லட்சியத்துடன் கடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான கதவுகள் திறக்கும் என்று போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
சொற்பொழிவு நிகழ்ச்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் நல இயக்ககம் சார்பில், ‘குறிக்கோளோடு இரு’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:–
ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளுக்காக தங்களையே அர்ப்பணித்து கொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்கிறார்கள். தாம் பெறாத அனைத்தையும் தம் குழந்தைகள் பெற வேண்டும் என்று பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள். இதை ஒவ்வொரு மாணவரும் தங்களின் மனதில் கொண்டு, பெற்றோர் மகிழும் வகையிலும், அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் வாழ்க்கையில் உயர வேண்டும்.
ஏழ்மை ஒரு தடையல்ல
இன்று மாணவர்களுக்கு இந்திய குடிமைப்பணி, ராணுவப்பணி, கப்பற்படை, கடற்படை என பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கான தேர்வுகளை எழுதி வேலைவாய்ப்பு பெறுவதன் மூலம் இளம் வயதில், மிகப்பெரிய பதவிகளை வகிக்க முடியும். நாம் எந்த பணிக்கு செல்ல வேண்டும் என்பதை மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே தீர்மானிக்க வேண்டும்.ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பலர், பின்னாளில் மிகச்சிறந்த சாதனையாளர்களாக உருவாகி உள்ளனர். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய ஏழ்மை ஒரு தடையல்ல. சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி இருந்தால், வாழ்க்கையில் எந்த தடையாக இருந்தாலும், அதை உடைத்தெறிந்து சாதிக்க முடியும்.
உயர்ந்த லட்சியம்
மாணவர்கள் கல்லூரி படிப்புடன், மற்ற பாடங்களிலும் கவனம் செலுத்தி படித்தால் உலக அறிவை வளர்த்து கொள்ள முடியும். உயர்ந்த லட்சியத்துடன் கடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான கதவுகள் திறக்கும். இல்லாததை நினைத்து, வருந்துவதை விட, இருப்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பதிவாளர் ரபீந்திரன், மாணவர் நல இயக்குனர் ரகுபதி, வேளாண்மைத்துறை டீன் மகிமைராஜா மற்றும் 400–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment