Friday, 16 August 2013

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

தமிழகம் முழுவதும் 6.78 லட்சம் பேர் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வை எழுதுவோரில் 73 சதவீதம் பேர் (4 லட்சத்து 94 ஆயிரத்து 651) பெண்கள். 27 சதவீதம் பேர் மட்டுமே (ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 941) ஆண்கள்.
இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 71 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகள் சனி (ஆகஸ்ட் 17), ஞாயிறு (ஆகஸ்ட் 18) ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெறும் முதல் தாள் தேர்வை 677 மையங்களில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 957 பேர் எழுதுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் தாள் தேர்வை 1,060 தேர்வு மையங்களில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் எழுதுகின்றனர்.
காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கான தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்காக தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோரில் 23,471 பேர் மாற்றுத்திறனாளிகள். 2,477 பேர் கண்பார்வைத் திறன் இல்லாதவர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்திலேயே அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான உதவியாளரும், கூடுதலாக 30 நிமிஷங்களும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் தேர்வுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான பறக்கும் படைகளை அமைத்தல், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை ஆட்சியர்கள் செய்துள்ளனர். தேர்வுப் பணிகளுக்காக 32 மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
14 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு: இந்தத் தேர்வுக்குப் பிறகு சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தனியே அறிவிப்பு வெளியிடப்படும். இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 0.34 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதன்பிறகு, நடைபெற்ற மறுதேர்வில் 3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
முக்கிய அம்சங்கள்
முதல் தாள் தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கை ---2,67,957
இரண்டாம் தாள் தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கை --4,11,635
மொத்த தேர்வு மையங்கள் ----- 1,737
பெண்களின் எண்ணிக்கை ---- 73%
ஆண்களின் எண்ணிக்கை ---- 27%
தேர்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் - 14,000

No comments:

Post a Comment