Tuesday, 13 August 2013

மொழி வல்லுநர்களுக்கான உலகம் பெரியது!ஆகஸ்ட் 13,2013,18:03 IST

பல வெளிநாட்டு மொழிகளைக் கற்றவர் பலவிதமான வேலை வாய்ப்புகளைப் பெற்று, அதிகமான அளவில் சம்பாதிக்கிறார்கள். எழுத்துவழி மற்றும் வாய்வழி மொழிபெயர்ப்பு, கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிவாய்ப்புகளில், வெளிநாட்டு மொழி நிபுணர்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள்.
இவர்களின் தொழில் பெரும்பாலும் பகுதி நேரம் அடிப்படையிலானது. அதில், முழுநேர வேலையின் சம்பாத்தியத்தைவிட, அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
மொழி நிபுணர்களை நாடும் வணிகம்
பல்வேறான காரணங்களுக்காக மொழி படிப்புகளில் மாணவர்கள் சேர்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும், குறிப்பிட்ட நாடுகளுக்கு நீண்ட சுற்றுலா செல்வதற்கும், பல நாடுகளின் கலாச்சார பாரம்பரியங்களை அறிந்துகொள்ளவும், குறிப்பிட்ட நாட்டில் பணிவாய்ப்புகளை பெறவும் மற்றும் ஆர்வத்தின் பொருட்டும், வெளிநாட்டு மொழிகளை கற்போர் எண்ணிக்கை அதிகம்.
இந்தியாவில் back - end offices வைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள், மொழி நிபுணர்களை பணிக்கு அமர்த்திக்கொண்டு, தங்களின் வணிகத்திற்கு ஏற்படும் மொழிரீதியான தடைகளை தீர்த்துக் கொள்கின்றன. இன்றைய நிலையில், பிரெஞ்சு, ஜெர்மனி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. மேலும், பள்ளிகள், பல்கலைகள் மற்றும் மொழி கற்பித்தல் மையங்கள் ஆகியவற்றில், மொழி ஆசிரியர்களுக்கு அதிக பற்றாக்குறை நிலவுகிறது.
எனவே, புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, ஒருவரின் ஆசையை நிறைவு செய்வதோடு அல்லாமல், அவருக்கு அதிக வருமானத்தையும் ஈட்டித் தருகிறது.
இன்றைய நிலை
லத்தீன் அமெரிக்க நாடுகளுடன், பலவிதமான வணிக மற்றும் பொருளாதார உறவுகளை இந்தியா பலப்படுத்தி வருவதால், ஸ்பானிஷ் மொழி கற்றவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளைப் பொறுத்தளவில், ஏற்கனவே அவை பிரபலமானவை என்பதால், பலர் அவற்றை விரும்பி தேர்வுசெய்து கற்றுக்கொள்கிறார்கள். Bosch, Deutsche Bank போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மொழி நிபுணர்களை, பலவிதமான பணி நிலைகளில் பணிக்கு அமர்த்துகின்றன.
சுற்றுலா பிரதேசங்களில், பன்மொழி நிபுணர்களுக்கு பணி வாய்ப்புகள் அதிகம். உலகளாவிய வர்த்தகத்தில், பல நாடுகளும் ஈடுபடுவதால், அவற்றில் எழும் மொழிப் பிரச்சினைகளை களைய, பன்மொழி நிபுணர்களின் தேவைகளை யாரும் தவிர்க்க முடியாது.
மொழிப் படிப்பு
வெளிநாட்டு மொழிகளைக் கற்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. பள்ளி நிலையிலிருந்தே விருப்ப மொழித்தேர்வு(optional) படிப்பை ஒருவர் மேற்கொள்ள முடியும். கல்லூரி நிலையில், இளநிலை, டிப்ளமோ, சான்றிதழ் அல்லது add on பாடங்களை படிக்கலாம். பல டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் குறுகிய கால அளவுக்குள் முடிக்கக் கூடியதாய் உள்ளன.
டெல்லி பல்கலை, ஜவஹர்லால் நேரு பல்கலை, ஜாமியா மிலியா பல்கலை மற்றும் இ.எப்.எல்.யூ., போன்றவை பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், கொரியன், சீனம், பெர்ஷியன் மற்றும் அராபிக் ஆகிய மொழிகளில், பி.ஏ., படிப்புகளை வழங்குகின்றன. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் வேறுபடும்.
ஜவஹர்லால் நேரு பல்கலையில், ஒரு மொழி படிப்பு மாணவர், ஆண்டுக்கு 500 - 550 வரையான தொகையையே செலுத்துகிறார். அதேசமயம், Alliance francaise (French), Instituto Hispania (Spanish) and Max Mueller Bhavan (German) போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள், அதேகாலகட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலிக்கின்றன.
வெளிநாட்டவரோடு பேசுதல் மற்றும் வித்தியாசங்களை கற்றுக்கொள்ளல்
சில கல்வி நிறுவனங்களில் exchange கல்வித் திட்டங்கள் இருப்பதால், அங்கே படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டிற்கு சென்று, அந்நாட்டு மாணவர்களுடன் பேசும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இதன்மூலம் அந்த மொழியின் தெளிவான உச்சரிப்பு மற்றும் லாவகத்தை மாணவர்கள் தெளிவாக கற்றுக்கொள்ள முடியும்.
ஒரு மொழியின் நுட்பமான வேறுபாட்டை கற்றுக்கொள்வதன் மூலம், மாணவர்கள் அதிக பயனடைகிறார்கள். சில கல்வி நிறுவனங்களில், மொழிப்பெயர்ப்பு பாடல்கள், நாடகங்கள் போன்றவற்றில் நடித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட மொழிகளின் திரைப்படங்களை பார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இதன்மூலம், சம்பந்தப்பட்ட மொழியைப் படிக்கும் மாணவர்களின் பேசும், எழுதும் மற்றும் படிக்கும் திறன்கள் மேம்படுகின்றன. மொழிப் படிப்பிற்காக, ஒரு புகழ்பெற்ற பல்கலையில் சேர வேண்டுமெனில், நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வில், பொதுஅறிவு, ரீசனிங், இலக்கணம் மற்றும் comprehension போன்ற அம்சங்கள் உள்ளடங்கியிருக்கும்.
பணி வாய்ப்புகள்
ஒருவருக்கு சிறந்த மொழித்திறன் இருந்தால், அவர், மொழிப்பெயர்ப்பாளர், ஆசிரியர் உள்ளிட்ட பலவிதமான வேலை வாய்ப்புகளைப் பெறலாம். மொழி வல்லுநர்கள், பள்ளிகள், பல்கலைகள், இந்திய பாதுகாப்புத் துறை, இந்திய உளவுத்துறை, துணை ராணுவப் படை, தூதரகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கால் சென்டர்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத்துறை, இந்திய வெளியுறவுத்துறை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
சம்பளம்
Interpreter பணியில் இருப்பவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 முதல் ஒரு நாளைக்கு ரூ.25,000 வரையும், translator பணியில் இருப்பவர், ஒரு வார்த்தைக்கு இவ்வளவு என்ற கணக்கிலும் சம்பாதிக்கலாம்.
கே.பி.ஓ.,க்களில்(KPO), ஆண்டிற்கு, ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
பயிற்சியே மூலாதாரம்
எந்தவொரு மொழியிலும் நிபுணராக இருக்க வேண்டுமெனில், இடைவிடாத, கடின பயிற்சி இருக்க வேண்டியது அவசியம். மொழிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், வகுப்புக்கு தொடர்ந்து வர வேண்டும். தான் படிக்கும் மொழி சார்ந்த நாட்டின் கலாச்சாரத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு உணர்வம்சத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment