Wednesday, 26 June 2013

மாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள்.

1. பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய மேற்பார்வையாளர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / மாவட்ட கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் / இனை இயக்குனர், இயக்குனர் போன்ற பல உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே கல்வித் தகுதியுடன் ஒரே தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பானது நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணியிடமான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியுடன் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் நேரடியாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணியில் சேருபவர்களுக்கு அவர்கள் பணிக்காலம் முழுவதும் பதவி உயர்வு வாய்ப்பு என்பது இல்லவே இல்லை.

2. தற்பொழுது சுமார் 125 – 150 மாணவர்கள் இருந்தாலே உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் நிலையில் அந்த ஒரு பள்ளியை மட்டும் நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி நிலையவிட, சுமார் 75 - 100 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் கண்காணிப்பு, ஆய்வு மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் நிர்வாகப்பொருப்பை வகிக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பதவி நிலை கீழே வைக்கப்பட்டுள்ளது.
3. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 – 8 வகுப்புகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் வட்டார வள மையங்களின் மேற்பார்வையாளர் பதவிக்கு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டே நிரப்பப்படுகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ள நிலையில், மேற்பார்வையாளர் பதவிக்கு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வாய்ப்பளிக்கப் படாதது ஏன் ?.

4. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியானது தொடக்கக் கல்வித் துறைக்கு தொடர்பில்லாத உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கே அளிக்கப்படுகிறது. இப்பணி விதிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை ஒன்றாக இருந்தபொழுது வகுக்கப்பட்டது போல தோன்றுகிறது. தற்பொழுது தொடக்கக் கல்விக்கென தனி இயக்ககம் உள்ள நிலையில், தொடக்கக் கல்வித்துறையிலும் பள்ளிக்கல்விதுறைப்போன்று தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் / நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் என பலர் உள்ளனர். இந்த நிலையில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியினை தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கே ஒதுக்கீடு செய்து, மேற்பத்தி 2 – ன்படி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலைக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பத்தி 3 – ன்படி தொடக்கக் கல்வித் துறையிலிருந்து பதவியுயர்வுப் பெற்ற வட்டார வளமைய மேற்பார்வையாளர்களைக் கொண்டும் ஏன் நிரப்பக்கூடாது?.

5. பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை உதவி ஆசிரியர்களாக பணியில் சேருபவர்கள் B.Lit., & B.Ed. உயர்கல்வி தகுதி பெற்றதும் பணிமூப்பின் படி தமிழாசிரியர்களாகவும் பின்னர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். இவர்களது மொத்தப்பணிக் காலத்தில் B.Lit., B.Ed. & M.A., உயர்கல்வி தகுதிகளுக்கு இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் (4 ஊதிய உயர்வுகள்) பெற்றுவிடுகின்றனர். ஆனால், தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை உதவி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து தமிழாசிரியர் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Ed. தேர்ச்சிப் பெற்றால் ஊக்க ஊதியம் மறுக்கப்படுகிறது. இவர்களைவிட உயர் பதவியிலுள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Lit., B.Ed. & M.A., தேர்ச்சிக்கு 2 ஊக்க ஊதிய உயர்வுகளையும் பெற்றுவிடுகின்ற நிலையில் – கீழ் பதவி நிலையிலுள்ள நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இரண்டாவது ஊக்க ஊதியம் பெறுவதற்கு M.Ed. தகுதி பெற வேண்டியுள்ளது. இது எந்த வகையில் நியாயம் ?. இவை அனைத்திற்கும் காரணமாக, தொடக்கக் கல்வித் துறையில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நிர்வாகப் பொருப்பில் உள்ள உயரதிகாரிகள் அனைவரும் பள்ளிக் கல்வித்துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின் பாரபட்சமான நடவடிக்கை எனவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14 மற்றும் 16 ன்படி சம உரிமை மற்றும் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கருதப்படுகிறது. இக்குறைகளை களைய தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?....news----facebook...Asiriyar kural

No comments:

Post a Comment