Thursday, 27 June 2013

பிளஸ் 1 புத்தகங்கள் வாங்க டி.பி.ஐ. வளாகத்தில் குவிந்த மாணவர்கள்

பிளஸ் 1 பாடப் புத்தகங்களை வாங்குவதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர் புதன்கிழமை குவிந்தனர். தங்களுக்கான புத்தகங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பெற்றுச் சென்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. புத்தகங்கள் வேண்டும் என முன்கூட்டியே தெரிவித்திருந்த தனியார் பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஆனால், பல தனியார் பள்ளிகள் மாணவர்களே நேரடியாகப் புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.
இதன் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பிளஸ் 1 புத்தகங்களைக் கேட்டு டி.பி.ஐ. வளாகத்துக்கு வந்தனர். எனவே, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் சார்பில் புத்தக விற்பனை டி.பி.ஐ. வளாகத்தில் புதன்கிழமை (ஜூன் 26) தொடங்கப்பட்டது.
புத்தகங்களை வாங்க வரிசையில் நின்றிருந்த தனியார் பள்ளி மாணவர் ஒருவர் கூறும்போது, பள்ளிக்கு புத்தகங்கள் கிடைக்க 15 நாள்கள் ஆகும் எனவும், டி.பி.ஐ. வளாகத்தில் புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் புதன்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகங்களை வாங்கினர்.
இது தொடர்பாக, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியது: பிளஸ் 1 மாணவர்களுக்காக ஒரு கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட நாளிலேயே புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன. தனியார் பள்ளிகளிடம் தேவையான புத்தகங்களின் அளவு தொடர்பாக கணக்குக் கோரப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் தங்களுக்குப் புத்தகங்கள் வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டன.
இப்போது, மாணவர்களையே புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுமாறு இந்தப் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன. இதனால், மாணவர்கள் வீணாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.
புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக மாணவர்களின் பள்ளி விவரங்கள் பதிவு செய்யப்பட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தனியார் பள்ளிகள் மொத்தமாக புத்தகங்களை எங்களிடம் இருந்து வாங்கி விநியோகித்திருந்தால் மாணவர்களின் அலைச்சல் தடுக்கப்பட்டிருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகநிறுவனத்திடம் புத்தகங்கள் வேண்டாம் என எழுதிக் கொடுத்த பள்ளி நிர்வாகங்கள், தங்களது மாணவர்களிடம் புத்தகங்கள் கிடைக்க இரண்டு வாரங்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளன.
பள்ளிகளே புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்
சென்னை மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளே தங்களது மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ஆஞ்சலோ இருதயசாமி கூறினார்.
இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது:
பிளஸ் 1 மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாட்டு பாடநூல் கழக கிடங்கில் விற்பனைக்குத் தயாராக உள்ளன. எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகப் பட்டியலுடன், புத்தகங்களுக்கான பணத்தை டி.டி.யாகக் கொண்டு வந்து புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் தாமதம் ஏதுமின்றி சென்னை மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றார் அவர்.news by dinamani

No comments:

Post a Comment