இதயத்தோடு உறவாடும் தமிழ் ஒளி"சீரற்ற சமுதாயம் எதற்கு?-வாழ்வின் / சிறுமைகளை நொறுக்குவதில் தயங்க வேண்டாம்" -என அறைகூவியவன் மட்டுமல்ல அவன் எழுத்துகள் முழுமையும் அதற்காகஅர்ப்பணிக்கப்பட்டவையே!
"அந்தி சிரித்திடும் போதிலே - உன்றன் / ஆசை பிறந்திடும் ஆயினும் / சந்தியில் வீதியின்ஓரத்தில் - ஒரு / சாக்கடையின் புழுப் போலவே / நொந்து நெளிந்திடும் ஏழைகள் - எனை /நோக்கி அழுதனர் காணடி!/எவ்விதம் இதைச் சொல்லுவேன் - அடி/ எவ்விதம் துன்பத்தைஆற்றுவேன் "இப்படி காதல் மயக்கும் வேளையிலும் ஏழை துயர் எண்ணிக் கதறிய தமிழ்ஒளி போல் கவிஞர் வேறுண்டோ?
"அந்தி சிரித்திடும் போதிலே - உன்றன் / ஆசை பிறந்திடும் ஆயினும் / சந்தியில் வீதியின்ஓரத்தில் - ஒரு / சாக்கடையின் புழுப் போலவே / நொந்து நெளிந்திடும் ஏழைகள் - எனை /நோக்கி அழுதனர் காணடி!/எவ்விதம் இதைச் சொல்லுவேன் - அடி/ எவ்விதம் துன்பத்தைஆற்றுவேன் "இப்படி காதல் மயக்கும் வேளையிலும் ஏழை துயர் எண்ணிக் கதறிய தமிழ்ஒளி போல் கவிஞர் வேறுண்டோ?
"இக்கணந் தொட்டு நம் ஆசையும் - காதல் / இன்பமும் மக்களின் தொண்டடி" எனஅக்கவிதையின் இறுதியில் வெற்றுப் பிரகடனம் செய்தவன் அல்லன் தமிழ் ஒளி. சொந்தவாழ்வில் காதலில் தோற்றான் - உளம் துடித்தான் ஆயினும் லட்சிய வாழ்வில் அவன்தோற்கவில்லை. அவனது கவிதைகள் இப்போதும் ரத்தமும் சதையுமாய் உயிர்த்துடிப்புடன்நம்மோடு உறவாடுவதே சாட்சி.
மூளையோடு உரையாடுவது கட்டுரை. இதயத்தோடு உறவாடுவது கவிதை.எக்காலத்திலும்இதுவே வரையப்படாத இலக்கணம்.தமிழ் ஒளி தனி வார்ப்பு. பாரதிதாசன் பரம்பரையில்வந்த தனி வார்ப்பு.அவன் கவிதைகள் இதயத்தோடு உறவாடுவதோடு நில்லாது. இரத்தத்தைசூடேற்றும். நரம்புகளை முறுக்கேறச் செய்யும்.எங்கும் புதுக் குரல் சங்கம் இசைக்கும்.சத்திய தேவதை நர்த்தனமிட சர்வதேசிய சங்கீதம் ஒலிக்கும்
"கந்தல் உடுத்திய கந்தன் மகிழ்கிறான் / கண்ணை உயர்த்தி இவ்விண்ணை அளக்கிறான் /வெந்திடும் வாழ்வில் ஊற்றப் புதுமழை / வேகமதாய் முகில் வந்து குவியுது"- அதுவே தமிழ்ஒளி கவிதை.
இவன் அரசியலை வெறுத்தவனில்லை. அரசியலில் ஜனித்தவன். சமூகம் விடுதலைபெறஅரசியலை சரியான திசையில் நகர்த்த முயன்றவன்.தடுமாற்றங்கள் எல்லோருக்கும்வரும். இவனுக்கும் வந்தது.ஆயினும், தடம்பதிக்கும் கவிதைகள் இவன் வர்க்க ஞானத்தின்சூரியதகிப்பை சொல்லிக்கொண்டே இருக்கும்.
“ புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளி கடிதம்!” என்ற கவிதை அதற்கோர்சான்று. போராட்ட களத்தில் //எங்கள் குடிசைகளில் எமன் கூத்து! சாக்காடு! / வெங்குருதி வெள்ளம்! மரண வெடியோசை! / சூழ்ந்த இருளில், தியாகச் சுடர் எடுத்தோம் / சூழ்ந்த இருள் தன்னைச் சுட்டெரித்தோம் தியாகத்தால்" - என பொங்குவார் தமிழ் ஒளி.
1930 ஜுலையில் பாட்டாளிகள் மீது பிரெஞ்சு ஆதிக்கம் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையில் 12 பேர் உயிரிழந்தனர். அதே சமயம் உதட்டில் சோஷலிசம் பேசிய சிலர் துரோகம் செய்தனர். அதையொட்டியே இந்தக் கவிதைக் கடிதம் எழுதினார் தமிழ் ஒளி. அதில் பாடுவார் " புதுவை பாட்டாளிவர்க்கமே!/ உன்னுடைய கைகளில் எஃகின் உரமுண்டு / மன்னர்களை ஓட்டும் மகத்தான சக்தி உண்டு / சோஷலிசம் பேசி சுரண்டலுக்குக் கால்பிடிப்போர் / வேஷம் கிழித்தெறியும் வீரமுண்டு ; வன்மையுண்டு! / அன்று புரிந்த சமர் ஆற்றல் உணர்ந்திடுக!/ இன்றைக்கே போர்முரசம் எண்டிசையும் கேட்கட்டும் " - இப்படி நம்பிக்கையும் தெம்பும் அளித்த கவிதைப் போராளி தமிழ் ஒளி.
மே தினமே வருக, மேதின ரோஜாக்கள் போன்ற கவிதைகள் எக்காலத்திலும் சாகாவரம் பெற்றவை. இந்தித் திணிப்பு போர்க்களத்தில் இவரது கவிதை முழக்கம் கூர்மையானது. உலகின்சொந்தக்காரன் எனினும் மொழியினைக் காப்பதில் முன்னிற்பது முரண்பாடல்ல. இயல்பானது. தேவையானது. ஆயினும் தனித்தமிழ் நாடு என்கிற கவிஞரின் அரசியலில் எமக்கு மாறுபாடு உண்டு. காலம்தான் கவிஞனையும் படைக்கிறது. காலத்தின் சுரபேதங்கள் கவிதையிலும் எதிரொலிக்கத்தான் செய்யும்.
" வாழையென உழைப்பென்னும் பலனையீந்து / மரணமெனும் சூறைவரும் வழியில் நின்றான் " விவசாயி அவன் படும் துயருக்கு பதில் எங்கே என கவிஞர் துடித்தெழுப்பிய கேள்விகளுக்கு இன்றுவரை சுதந்திர பாரதம் விடைகாண வில்லையே என்கிற பெரும் கவலை மேலிடுகிறது.
"ஊன்று கோல் கைவிட்டு நழுவி வீழ / உயிர் நரம்பைப் பசியின்வாள் அறுத்துப்போட / ஈன்ற தாய் தந்தையரும் தன் முன்னோரும் / இடர்பட்டு வீழ்ந்திட்ட இருளில் வீழ்ந்தான் "என்று கவிஞர் குமுறி உரைத்தது இன்றும் தொடர்கிறதே! விடிவுக்கு வழி யாது ?
" வேர்வையின் நன்மை விளைய உழைத்தவர் / வீறுடன் எழுவர்- ' வர்க்கப் / போர் இட' என்று புரட்சி முரசு / புவியில் ஒலிப்பது கேள் "- என திசைகாட்டும் கருவியாய் சுடர்கிறார் தமிழ் ஒளி.
கவிஞர்தம் பெருமை சொல்லிக் கொண்டே போகலாம். " ஞான ரதமேறி நாலுதிசை போற்ற வந்தாய்,/ ஊனமொடு நாங்களுனை ஓட்டினோம் தென்றிசைக்கு!/…../ வாசற் கதவடைத்து வாயடைத்துக் காதடைத்துத்/ தேசுடைய யாழைத் தெருவில் உடைத்தெறிந்தோம் " என பாரதிக்கு நாம் செய்த கேட்டை தமிழ் ஒளி வேதனை கொப்பளிக்கத் தீட்டினான். நாம் அதையே இப்போது தமிழ் ஒளிக்கு சொல்ல வேண்டியுள்ளதை காலத்தின் குற்றம் என்பதா? தமிழ் சமூகத்தின் அவலம் என்பதா ?
ஆயினும் " பாட உனதுபுகழ் பாவலர்கள் வந்துற்றோம்! / நாட உனதுநெறி நல்லவர்கள் வந்துற்றோம்! "- இப்படி பாரதிக்கு தமிழ் ஒளி கொடுத்த உறுதியை இப்போது நாமும் தமிழ் ஒளிக்குத் தருவோம்.
தமிழ் ஒளி ! உனது கவிதையின் உயிராற்றலும்,தோழர்கள் துணைவலிமையும் இருக்க உனக்கு மரணமில்லை ஒருபோதும்! காலமழையில் கரைந்து போகாத எரிமலையே உனது கவிதைகள்.
No comments:
Post a Comment