Friday 28 June 2013

தில்லி கல்லூரிகளில் சேர்வதற்கு கடும் போட்டி!

தில்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள நான்காண்டு பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு பல்வேறு கல்லூரிகள் அறிவித்துள்ள கட் ஆஃப் மதிப்பெண் 100 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
இதனால், விரும்பிய பாடங்களை எளிதில் மாணவர்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட் ஆஃப் மதிப்பெண்களை தில்லி பல்கலைக்கழக ஆளுகைக்கு உள்பட்ட பல கல்லூரிகள் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ளன.
ஹிந்து கல்லூரியில் பயன்பாட்டு அறிவியல் பட்டப் படிப்புக்கான "கட் ஆஃப்' 96.75-99.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. வணிகவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான "கட் ஆஃப்' மதிப்பெண்கள் 97-99.75 சதவீதமாக இருந்தது.
பாஷ்கராச்சார்யா கல்லூரியிலும் "கட் ஆஃப்' மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் வணிகவியல் கல்விக்கு புகழ் பெற்ற ஸ்ரீராம் கல்லூரியில் இடம் பிடிப்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் வணிகவியலுக்கு முதல் "கட் ஆஃப்' 97 சதவீதமாகவும், பொருளியல் படிப்புக்கு 97.5 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், வணிகவியல், பொருளாதாரம் படிக்க விரும்பும் மாணவர்கள் கடுமையான போட்டிகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் வணிகவியல் பட்டப் படிப்புக்கான "கட் ஆஃப்' 90 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. 
ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் 96.75-98.75 சதவீதம், லேடி ஸ்ரீராம் கல்லூரியில் 97.75-98.75 சதவீதம், ஷாகீத் பகத் சிங் கல்லூரியில் 96-99 சதவீதம், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் 96.75 சதவீதம் என "கட் ஆஃப்' மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரம் படிப்புக்கும் இதே நிலை உள்ளது. ஹிந்து கல்லூரி 97.5 சதவீதம், எல்.எஸ்.ஆர். கல்லூரி 97.75 சதவீதம், ஹன்ஸ்ராஜ் 97.25, மிராண்டா ஹவுஸ் 96.5-97, கிரோரிமால் 95.5-98.5, ராம்ஜாஸ் 94.5-97.5 என "கட் ஆஃப்' மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹிந்து கல்லூரியில் ஆங்கிலம் படிக்க 98.5 சதவீதம் "கட் ஆஃப்' இருக்க வேண்டும்.  இதழியல் கல்வி வழங்கும் தில்லியின் ஆறு கல்லூரிகளிலும் "கட் ஆஃப்' 90 சதவீதத்துக்கு அதிகமாக
உள்ளது.அதிக கட் ஆஃப் மதிப்பெண்களுடன் முதல் பட்டியல் வெளியிடப்பட்டதால், கிடைத்த பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல மாணவர்கள் தெரிவித்தனர்.
"மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்க விரும்பினேன். கட் ஆஃப் மிக அதிகமாக இருப்பதால் அதே கல்லூரியில் தத்துவவியல் பட்டப்படிப்பு சேர எண்ணியிருக்கிறேன்' என்று மீரட்டில் இருந்து 95 சதவீத மதிப்பெண்களுடன் தில்லியில் படிக்க வந்துள்ள தன்யா மானிக்.
"தில்லி வெங்கடேஸ்வரா கல்லூரியில் படிக்க கேரளத்தில் இருந்து விண்ணப்பித்தேன்.  வரலாற்றுப் பாடத்துக்கும் அதிக கட் ஆஃப் இருக்கிறது' என்று சொல்கிறார் தர்ஷன் ஸ்வாமி.
85 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ள தனது மகனுக்கு வணிகவியல் பாடம் படிக்க வாய்ப்புக் கிடைக்காது என்று அவரது தந்தை பிரமோத் பாரதி கவலை தெரி
வித்தார்.
"தில்லியில் 60, 70 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்களுக்கு இடமே கிடைக்காது போலிருக்கிறது.
நன்றாகப் படித்த மற்றும் பணக்கார மாணவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்பது போல கட் ஆஃப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன' என்றார் அவர்.


No comments:

Post a Comment