Monday 24 June 2013

பாடவேளையில்தான் மாற்றம்; பள்ளி நேரத்தில் அல்ல

பள்ளிகளின் வேலை நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு யோகா, தியானம், நீதி போதனைகள், உடல் நலம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கற்றுத்தரும் வகையில் பாடவேளை நேரத்தில் மட்டுமே மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பள்ளி வேலை நேரம் தொடர்பாக கடந்த 2 நாள்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
பள்ளிகளில் பாடவேளை நேரம் 45 நிமிஷங்களிலிருந்து 40 நிமிஷங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளி வேலை நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள், பாடவேளை நேரங்களில் மாற்றம், காலை வழிபாட்டு முறை, உறுதிமொழிகள் ஏற்பு போன்றவை தொடர்பாக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்க பள்ளி நாட்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்காட்டி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இரண்டு நாள்களுக்கு முன்பாக அனுப்பப்பட்டது.
இதில் பள்ளிகளின் கால அட்டவணை என்ற பெயரில் பள்ளி தொடங்கும் நேரம், ஒவ்வொரு பாடவேளைக்கும் ஒதுக்க வேண்டிய நேரம், யோகா, சுகாதார கல்வி உள்ளிட்ட பாட இணைச் செயல்பாடுகள், மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அட்டவணையில் பள்ளி தொடங்கும் நேரம் காலை 9.30 மணி என்பதற்குப் பதிலாக காலை 9 மணி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளி வேலை நேரம் மாறுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது மாதிரி கால அட்டவணை மட்டுமே. பள்ளிகளின் நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பள்ளி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். நீதிபோதனை, உடல் நலக் கல்வி, கலைக் கல்வி, வாழ்க்கைக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத்தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
யோகா, தியானப் பயிற்சிகள், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் நீதிபோதனை, மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள் போன்றவற்றுக்காக பாடவேளைகளில் 5 நிமிஷங்கள் குறைக்கப்பட்டன.
மதிய இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகளாக வாய்ப்பாடு சொல்லுதல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதைக் கேட்டு எழுதுதல், வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை இறுதி வகுப்பில் மாணவர்களின் படைப்பாற்றல் செயல்பாடுகளில் ஈடுபட மாணவர்களுக்கு ஊக்கம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் கடந்த மாதத்தில் மாணவர் தயாரித்த தனித்திறன், படைப்பாற்றல்கள், வகுப்பு மாதிரித் தேர்வுகளின் மதிப்பெண்களை பெற்றோரை வரவழைத்து கலந்தாய்வு செய்தல் போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனை செயல்படுத்த பாடவேளை நேரங்களில் மாற்றம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கூறினர். அதனால், அவர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து பாடவேளைகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதற்காக மாதிரி பாட காலஅட்டவணையும் தயார் செய்யப்பட்டது.
இதேபோன்று பாடவேளை நேரங்களை பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்குட்பட்டு மாற்றியமைத்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பாடவேளை கால அட்டவணையில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன.
எனவே தற்பொழுது வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தியாகும். பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகள் வழக்கமாக தற்பொழுது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும் என கே.தேவராஜன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்கள்
* வரும் கல்வியாண்டில் (2013-14) பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள செயல்பாடுகள்:
* பாடவேளை 45 நிமிஷங்களிலிருந்து 40 நிமிஷங்களாகக் குறைப்பு.
* இறைவணக்கம் முடிந்த பிறகு 5 நிமிஷங்கள் தியானம்.
* மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிஷங்களுக்கு முன்னதாக 15 நிமிஷங்கள் எளிய யோகா பயிற்சி.
* அடுத்த 15 நிமிஷங்களில் நீதிபோதனை, நன்னெறி கதைகள், மதச்சார்பின்மை, சமத்துவ சமுதாயம், உடல் நலம் மற்றும் சுகாதாரக் கல்வி, நாட்டுப்புறக்கலைகளைப் பற்றி அறிய கலைக் கல்வி, பொம்மை செய்தல், பூ வேலைப்பாடு, மணி வேலைப்பாடு, வாழ்க்கைக் கல்வி, மன அழுத்தத்தைத் தவிர்த்தல், சுற்றுச்சூழல் கல்வி, முதலுதவி, தற்காப்புப் பயிற்சிகள்.
* மதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்கு 15 நிமிஷங்கள் (வாய்ப்பாட்டைச் சொல்லுதல், தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் செய்யுதல், 6 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைத்தல், 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நிமிஷங்கள் பொது அறிவு சம்பந்தமாகப் பேசுதல், குழு உரையாடல் போன்றவை).
* வார இறுதிநாளான வெள்ளிக்கிழமையின் இறுதி ஒரு மணி நேரம் பேசுதல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழிகள் கூறுதல், பழமொழி கூறுதல், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகள்.
* ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமையில் மாணவர்களின் படைப்பாற்றல்கள் மற்றும் வகுப்பு மாதிரித் தேர்வுகளின் மதிப்பெண்களை பெற்றோருடன் ஆலோசனை செய்தல்.
* வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 20 நிமிஷங்கள் இறைவணக்கக்
கூட்டம்.

No comments:

Post a Comment