வாழ்வின் சில உன்னதங்கள்
பழைய புத்தகக் கடைகளுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது, எந்த ஊருக்குப் போனாலும் அங்கே பழைய புத்தகக் கடை இருக்கிறதா எனத் தேடுவது எனது வழக்கம், அப்படித் தேடி நிறையப் பொக்கிஷங்களை வாங்கியிருக்கிறேன்,
பழைய புத்தகங்களை விற்பவர்கள் தனிரகத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் மனப்போக்கினை நாம் முடிவு செய்யவே முடியாது, சில வேளைகளில் ஐம்பது பக்க அளவுள்ள புத்தகத்திற்கு இருநூறு கேட்பார்கள், சில நேரம் ஆயிரம் பக்க நூலை பத்து ரூபாய்க்குத் தந்துவிடுவார்கள், நன்றாக சிரித்துப் பேசுவார்கள், சட்டென எரிந்து விழுவதும் உண்டு,
புத்தகங்களில் அழகிய ஒவியங்கள் இருந்துவிட்டால் கட்டாயம் விலை அதிகமாகிவிடும், படமில்லாத நாவல்கள் என்றால் ஐந்தோ பத்தோ போதும் என வாங்கிக் கொள்வார்கள்,
நான் ஒரு முறை The Thief’s Journal என்ற ஜெனேயின் நூலை பிளாட்பாரக் கடையில் பார்த்தேன், கடைக்காரர் ஐந்து ரூபாய் சொன்னார், அது அச்சில் இல்லாத ஒன்று, ஆனால் அதன் முக்கியத்துவத்தை கடைக்காரர் அறியவேயில்லை, நானாக அதற்கு 25 ரூபாய் தந்தேன், இது முக்கியமான புத்தகம் என்றும் கூறினேன்,
கடைக்காரர் சிரித்தபடியே அதுக்காக ஜாஸ்தி பணம் குடுக்கிறயா, என வாங்கிக் கொண்டார், இந்த ஒரு செய்கை அதன் பிறகு எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் நீயே விலை போட்டுக்குடு என கடைக்காரரைச் சொல்ல வைத்தது,
மழைக்காலம் தான் பழைய புத்தக்கடைக்காரர்களுக்கு சிரமமான மாதம், ஒருமுறை பழைய புத்தக கடைக்காரர் ஒருவர் மழைநாளில் எனது அறையை தேடிவந்து தம்பி ஒரு ஆயிர ரூபா கடனா வேணும், புத்தகம் வாங்கி கழிச்சிக்கோங்க என்றார்,
எனக்கு அவரது கஷ்டம் தெரியும் என்பதால் உடனே தந்து அனுப்பினேன், அடுத்தவாரம் அவர் கடைக்குப் போன போது, அவர் கடையை விற்றுவிட்டு போய்விட்டது தெரியவந்த்து,
என்னை ஏமாற்றிவிட்டரே என நினைத்துக் கொண்டு அவரைத்தேடினேன், ஆளே கண்ணில் படவில்லை, பின்பு அவரை மறந்து போனேன், நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு மதியம் என் அறைக்கு வந்து அவர் கதவைத் தட்டினார், கோபத்துடன் என்ன வேணும் என்று கேட்டேன்,
கடை நடத்தமுடியலை, வித்துட்டேன், அதான் உனக்குப் பணத்தைக் குடுக்க முடியலை, ஒரு வக்கீல் வீட்ல கொஞ்சம் பழைய புத்தகம் கிடைத்தது, உனக்காக கொண்டுவந்தேன் என்று இரண்டு கட்டுப் புத்தகங்க்ளை நீட்டினார், அதில் ஷேக்ஸ்பியர் முழுதொகுதி, மில்டன், கதே, டிக்கன்ஸ், வேர்ட்ஸ்வெர்த் என நாற்பது புத்தகங்களுக்கும் மேல் இருந்தன,
என் கையைப் பற்றியபடியே உன் கடனுக்கு இதை வட்டியா நினைச்சிக்கோ, கடனை திரும்ப குடுத்துருவேன் என்றார், நான் கலங்கிப்போனவனாக பரவாயில்லை, நான் தான் இந்த புத்தகத்துக்கு மிச்சப் பணம் தரணும் என 300 ரூபாய் கொடுத்தேன்,
வேணாம் தம்பி, ஒரு சாப்பாடு மட்டும் வாங்கிகுடு போதும் என்றார், இருவரும் சரவணபவனில் போய் சாப்பிட்டோம், திரும்பி போகும்போது சொன்னார்,
படிக்கிறவனை ஏமாற்றினா நாம உருப்பட முடியாது தம்பி, இப்போ தான் மனசு குளிர்ந்து இருக்கு, பில்லர் கிட்டே தள்ளுவண்டியில சூப் கடை வச்சி நடத்தப்போறேன், எப்பவும் போல வந்து போங்க என்றார்,
சில வாரங்களுக்கு பின்பு பில்லர் பக்கம் போன போது அவரைத்தேடினேன், அப்படி கடை எதையும் காணவில்லை, நகர நெருக்கடிகளுக்குள் எங்கே போனார் என்றே தெரியவில்லை, ஆனால் மனது அவரை இன்றும் தேடிக்கொண்டுதானிருக்கிறது,
பழைய புத்தக கடைகளில் உங்களுக்கு அதிர்ஷடமிருந்தால் தான் நல்ல புத்தகங்கள் கிடைக்ககூடும், பழைய புத்தகங்களைத் தேடி அலைந்து நான் சுவாச ஒவ்வாமையை தேடிக் கொண்டேன், மருத்துவர், நீங்கள் பழைய புத்தகக் கடைப்பக்கமே போக கூடாது, அந்த தூசி உங்களுக்கு அலர்ஜி என்று கறாராகக் கூறிவிட்டார்,
ஆறு மாதங்களுக்கு பழைய புத்தகக் கடை பக்கம் போய் ஆசையோடு தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன், அது போல கொடுமையான அனுபவம் வேறு கிடையாது, எனது தவிப்பை அறிந்த பழைய புத்தக கடைக்காரர் அறையை தேடி வந்து தானே தேர்வு செய்த பத்து இருபது புத்தகங்களை கொடுத்து போவதை வழக்கமாக கொண்டார், அந்த நன்றி மறக்கமுடியாதது, பின்பு மருத்துவ அறிவுரையை காற்றில் பறக்கவிட்டு வழக்கம் போல பழைய புத்தகக் கடைகளில் தேடி அலைய ஆரம்பித்தேன், ஒவ்வாமையை பழகிப்போய்விட்டது,
பழைய புத்தகங்களுடன் உள்ள உறவு புதிய புத்தகங்களுடன் ஏற்படுவதில்லை, பலநேரம் அந்த புத்தகங்களை வாங்கியவர் யார், படித்தவர்கள் எத்தனை பேர் என்று யோசித்துக் கொண்டிருப்பேன், ஆஸ்கார் ஒயில்ட் பற்றிய பழைய புத்தகம் ஒன்றில் இரண்டாக மடிக்கபட்ட ஒரு கடிதம் ஒன்றினைக் கண்டு எடுத்தேன்,
அது வக்கீல் பாஷ்யம் என்பவருக்கு அவரது தந்தை எழுதிய ஆங்கில கடிதம், கல்கத்தா என முகவரி எழுதப்பட்டிருந்தது, அந்தக் கடிதத்தில் பிழைக்கப் போன இடத்தில் நல்ல சாப்பாடு, பேச்சுத்துணை , மான அவமானங்களைப் பற்றி யோசிக்க கூடாது, நீ ஜெயிக்க வேண்டும், அந்த ஒன்று எல்லாவற்றையும் தானே தேடி தந்துவிடும் என்று எழுதப்பட்டிருந்தது,
யாரோ, யாருக்கோ எழுதிய கடிதம் எனக்கு மிகுந்த உத்வேகம் தருவதாக அமைந்த்து, ஒருமுறை பழைய புத்தகம் ஒன்றுக்குள் பத்து ரூபாய் ஒன்று ஒளித்து வைக்கபட்டிருந்தது, அது எனது ஒரு நாளைக் காப்பாற்றியது, பி. ஜி. வுட்ஹவுஸ் புத்தகத்தில் அதை வாசித்தவர் ஆங்காங்கே எழுதிய அடிக்குறிப்புகள் புத்தகத்தை விட சுவாரஸ்யமாக இருந்தது.
பழைய புத்தகங்களைத் தேடி வாசிக்கின்றவன் என்ற காரணமே விட்டல்ராவின் வாழ்வின் சில உன்னதங்கள் புத்தகத்தை தேடிப்படிக்க முக்கிய காரணமாக இருந்தது, கடந்த பத்து ஆண்டுகளில் நான் படித்த கட்டுரை புத்தகங்களில் மிக முக்கியமானது என்று இந்த நூலைக் கூறுவேன்,
விட்டல்ராவ், சிறந்த எழுத்தாளர், ஒவியர், கட்டுரையாளர், அவரை திருவல்லிகேணி, அண்ணாசாலை பழைய புத்தக கடைகளில் நானே பலமுறை பார்த்திருக்கிறேன், நுண்கலைகள் பற்றி தேர்ந்த அனுபவமும் தெளிந்த ஞானமும் கொண்டவர்,
தான் பழைய புத்தகங்களை எப்படிச் சேகரித்தேன் என்பதையும் பழைய புத்தக கடைகாரர்களின் குணாதிசயங்களையும், இலக்கிய இதழ்களின் முக்கியத்துவம் பற்றியும் அற்புதமாக எழுதியிருக்கிறார், இது ஒரு அரிய ஆவணப்படுத்துதல்,
விட்டல்ராவின் அனுபவத்தில் பெரும்பான்மை எனக்கும் நேர்ந்திருக்கிறது என்பதால் படிக்கையில் மிகுந்த நெகிழ்ச்சி அடைய நேர்ந்தது, குறிப்பாக மூர்மார்க்கெட் எரிக்கபட்டது பற்றிய கட்டுரை மிக முக்கியமானது.
நான் சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்த கல்லூரி நாட்களில் ரயிலை விட்டு இறங்கியதுமே நேராக மூர்மார்க்கெட்டிற்குப் போய்விடுவேன், அங்கே ஒரு பை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு தான் நண்பர்களைக் காணச்செல்வேன், 1952ல் ஹெமிங்வே அட்டையுடன் வெளியான LIFE இதழில் The Old Man and the Sea வெளியாகி இருந்த்து, அந்த இதழை மூர்மார்க்கெட்டில் தான் வாங்கினேன்,
இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, இம்ப்ரிண்ட், எஸ்கொயர், Paris Review. Chimera. Horizon. என நிறைய இதழ்களை அங்கே வாங்கியிருக்கிறேன், 1985 ல் மூர்மார்க்கெட் எரிக்கபட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு போய் நின்ற போது மனது கலங்கிப்போய்விட்டது, உடலின் ஒரு பகுதி துண்டிக்கபட்டது போலவே உணர்ந்தேன், புகைபடிந்த கற்களை வெறித்துப் பார்த்தபடியே நின்றபோது தொண்டை அடைத்தது, திட்டமிட்டு உருவாக்கபட்ட விபத்து என்று சொன்னார்கள், நிஜம் என்றால் அது போல ஒரு அநியாயம் வேறு ஒன்றுமேயில்லை, அந்த மூர்மார்க்கெட்டுடன் தனக்குள்ள உறவைப் பற்றி விட்டல்ராவ் அற்புதமாக எழுதியிருக்கிறார், அவை முற்றிலும் உண்மை என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்,
விட்டல்ராவின் இந்த நூல் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய கலை இலக்கிய இதழ்களையும், அரிய இலக்கியத் தகவல்களையும், ஒவியங்களையும் உள்ளடக்கியது, ஒவியர் என்பதால் விட்டல்ராவ் ஆங்கில இதழ்களின் கோட்டுப்படங்கள், புகைப்படங்கள் குறித்து நுட்பமாக சிலாகித்து எழுதியிருக்கிறார், இந்த நூலை வாசித்தபிறகு அவர் சொன்ன சில இதழ்களை எடுத்துப்புரட்டி அந்த ஒவியங்களின் அருமையை புரிந்து கொண்டேன்,
விட்டல்ராவின் தந்தைக்கும், பழைய புத்தக கடைக்காரர் ஒருவருக்குமான நட்பு பற்றிய கட்டுரை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது, அக்கட்டுரை குறும்படமாக உருவாக்க வேண்டிய ஒன்று,
அது போலவே பைண்டிங் செய்கின்றவரை பற்றியும், மூர்மார்கெட் ஐயர் பற்றிய கட்டுரையும் ஒளிரும் சித்திரங்களாக உள்ளன , இலக்கியம், ஓவியம், சிற்பம், வரலாறு எனப் பல துறைகளில் வெளிவந்த தொடர்களை விட்டல் ராவ் தேடித்தேடி சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கிறார், இந்த ரசனையும் ஈடுபாடும் தான் அவரை மிகச்சிறந்த எழுத்தாளராக உருமாற்றியிருக்கின்றன
தமிழில் இது போன்று பழைய புத்தக உலகம் குறித்து எவரும் இத்தனை விரிவாக, நுட்பமாக எழுதியதில்லை, அவ்வகையில் விட்டல்ராவின் புத்தகம் ஒரு கொடை என்றே சொல்வேன்,
வாழ்வின் சில உன்னதங்கள் விட்டல்ராவின் வாழ்க்கையாக மட்டுமில்லை, புத்தகங்களை தேடித் திரியும் எல்லோரது வாழ்க்கையின் பகுதியாகவுமிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு
அமெரிக்கன் சென்டர், மேக்ஸ்முல்லர் பவன், அலியான்சே பிரான்சே, அடையார் நூலகம் என்று வெளிநாட்டு இதழ்களை வாசிப்பதற்குத் தேடி அலைந்த நாட்களை நினைவூட்டும் இக்கட்டுரைகள் இணைய யுகத்தில் வாழும் இளைஞர்களுக்கு வெறும் அனுபவமாக மட்டுமே தோன்றக்கூடும், ஆனால் இது அனுபவம் மட்டுமில்லை, ஒரு வாழ்க்கை முறை, வாழ்த்துபார்த்தவர்கள் தான் அதன் உன்னதத்தை அறிய முடியும், விட்டல்ராவ் அப்படியான ஒருவர்.
No comments:
Post a Comment