மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய இணையதளப் பக்கத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான பயிற்சி மையம் (எம்.எஸ்.எம்.இ.) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இணையதளப் பக்கத்தின் வழியாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களிடம் இருந்து மாணவர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இது குறித்து எம்.எஸ்.எம்.இ. கூடுதல் தொழில் ஆலோசகர் சிவஞானம் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: இன்றைய சூழலில் பணி புரிவதற்குத் தேவையான திறன் மாணவர்களிடம் போதிய அளவு இல்லை என ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆன்-லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
"ப்ரோகடமியா' என அழைக்கப்படும் இந்த மாணவர்களுக்கான வழிகாட்டுதல் வலைப் பக்கத்தின் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்தி, தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.procademia.com என்ற வலைதளப் பக்கத்தினை தொடர்பு கொள்ளலாம். க்வாட்ரபிள் என்ற மென்பொருள் நிறுவனம் இந்த வலைதளப் பக்கத்தை மேம்படுத்தியுள்ளது. தற்போது பல்வேறு துறைகளைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள், மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க தங்கள் பெயர்களை வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார் அவர்.
இந்தச் சந்திப்பின்போது க்வாட்ரபிள் மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன்திலக் மற்றும் அமல்ராஜ் அகஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment