Friday 25 October 2013

புத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்

புத்தகம் வாசிக்கும் பழக்கம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா தெரிவித்தார்.
   திண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 2 ஆவது புத்தகத் திருவிழா, திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார், புத்தக விற்பனையை துவக்கி வைத்தார். அதனை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி பெற்றுக்கொண்டார்.
   விழாவில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா பேசியது: மனிதனின் மிகப்பெரிய சொத்தாக புத்தகம் உள்ளது. அந்தப் புத்தகத்தினை வாசிக்கும் பழக்கம் குழந்தைகள் முதல் தொடங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை வீடுகளிலில் ஆரம்பிக்க வேண்டும்.
   நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கணினியில் வாசிக்கும் பழக்கம் வந்துவிட்டபோதிலும், அச்சு வடிவிலான புத்தகங்களே மனதில் நிலைத்து நிற்கின்றன.
  மனித மேம்பாட்டுக்கு திருக்குறளை விட ஒரு சிறந்த புத்தகம் உலகில் இல்லை.   தன்னம்பிக்கை இழந்து தவறான வழிகளில் செல்லும் இளைய சமுதாயம், உலகுக்கே வழிகாட்டியாக விளங்கும் திருக்குறளையும், பாரதியின் கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
  தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார்: சினிமா தவிர, பொழுதுபோக்கு இல்லாத திண்டுக்கல் நகர மக்களின் அறிவுப் பசிக்காக, புத்தகத் திருவிழா முதன்முதலில் தொடங்கப்பட்டது.
 பெற்றோர்கள் புத்தகத்தின் பெருமைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மனனம் செய்யும் குழந்தைகள், சினிமா, தொலைக்காட்சி பெட்டிகளோடு நின்றுவிடுகின்றனர்.
  உலக அறிஞர்களின் ஞானம், அனுபவம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமெனில், சிறு வயது முதல் புத்தகம் வாசிப்பில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். நாம் வாழும் வாழ்வு செம்மை பெற, சிறந்த புத்தகங்களை வழிகாட்டியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்தி தேவி: பள்ளிகளில் நூலகம் அமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாசிக்க மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கல்வியின் குறிக்கோள் வேலைவாய்ப்பினை பெறுவதாக மட்டுமே உள்ளது.
அதன்மூலம், மாணவர்களின் எதிர்காலத்தை சிறிய வட்டத்தில் குறுக்கி விடுகிறோம்.   மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஆசிரியர்களின் வீடுகளில் அனைத்து நவீன பொருள்களும் இருக்கும். ஆனால், புத்தகங்களை பார்ப்பது அரிது. கேள்வி கேட்காத குழந்தைகள் அறிவில் சிறந்தவர்களாக முடியாது என்றார் அவர்.
  விழாவில், திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ரா. லிங்கம், திண்டுக்கல் இலக்கியக் கள அமைப்பின் தலைவர் மு. குருவம்மாள், செயலர் எஸ். ராமமூர்த்தி, பொருளாளர் கே. மணிவண்ணன் உள்ளிட்டோரும் பேசினர்.

No comments:

Post a Comment