Wednesday, 25 December 2013

மழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்- நன்றி trs trichy


"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இன்றைய பரபரப்பான உலகில், நடமாடும் இயந்திரங்களாக மனிதர்கள் மாறிவிட்டார்கள். குடும்ப வரையறைக்குள் நுழையும், கணவன், மனைவிக்கு குழந்தைகளை அக்கறையாக பார்த்துக் கொள்ள போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால், மூன்று வயது கூட ஆகாத குழந்தைக்காக, பலமணி நேரம் காத்திருந்து "அட்மிஷன் வாங்கி பள்ளியில் சேர்க்க, பெரும்பாலான பெற்றோர்கள் முன்வருகின்றனர். கூட்டுக்குடும்பம் உடைந்து தனிக்குடும்பம் உருவான பிறகு, கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தையை பார்த்துக் கொள்ள ஆட்கள் இன்றி, "பிளே ஸ்கூல்' எனும் அறிமுகமில்லாத இடத்துக்கு, குழந்தைகளை படிக்க அனுப்புகின்றனர். மழலை மனம் மாறாத வயதில், இதுவரை அறிமுகமில்லா நபர்களின் பாதுகாப்பில், குழந்தைகளை விட்டு செல்வதால், பெற்றோர்களின் அரவணைப்புக்கும், அன்புக்கும் வாய்ப்பு கிடைக்காமல், தனிமையில் ஏங்க வாய்ப்புள்ளது. 

இப்படி, சிறிய வயதிலே அதிக நேரம் பெற்றோர்களை விட்டு பிரியும் குழந்தைகளுக்கு, எதையும் வெளிப்படையாக பேசத்தெரியாத மனநிலை உருவாக வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், பெற்றோர்களை விட்டு பிரியும் குழந்தைகள், மனதளவில் வெறுமையையும், வன்முறை குணாதிசயங்களோடும் இருப்பதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர். தனிமை, வெறுப்பு போன்ற குணநலன்கள் அதிகம் வளருவதால், குறிப்பிட்ட வயதை அடையும் போது, சுயமாக முடிவெடுத்தல்,பெற்றோரின் ஆதரவை நாடாமல் இருத்தல், மழலையாக பேச வேண்டிய வயதில், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு வாய்ப்புள்ளதாக, குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.மேலும், "பிளே ஸ்கூலில்', நாகரிகம், படிப்பு, விளையாட்டு என பல நல்ல விஷயங்கள் கற்று கொடுக்கின்றனர். ஆனால், அதை புரிந்துகொள்ளும் பக்குவம், நான்கு வயதிற்கு மேல்தான் வருகிறது. அந்த வயதிற்கு முன்னால் கற்றுகொடுக்கப்படும் விஷயங்களால் குழந்தைகளின் மனதில், பள்ளியில் இருக்கும் நேரம் பெற்றோரை பிரிந்திருக்கிறோம் என்னும் எண்ணமே ஆழமாக பதிந்திருக்கும் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.


கோவை மனநல நிபுணர் மணி கூறுகையில், ""குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் பதியும் எண்ணங்களே, பிற்காலத்தில் வேர் விட்டு படர்கின்றன. இந்த பருவத்தில் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் குறிப்பாக தாய்மார்களின் கண்காணிப்பும், அன்பும் அரவணைப்பும் அவசியம். குழந்தைகள் பெற்றோர்களை சார்ந்தேஉள்ளனர். அவர்களாகவே எதையும் கேட்டுப் பெறாத நிலையில் உள்ளதால், புதிதாக ஒரு இடத்துக்கு அனுப்பப்படும்போது பயம், வெறுப்பு, பிரிவுக்கு ஆளாகின்றனர். இதனால், ஐந்து வயதுக்கு மேல்தான், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். கல்வியை காட்டிலும், சுற்றுப்புற அறிவே, குழந்தைகளை அறிவுள்ளவராக மாற்றும். கல்வியில் சிறந்த மாணவராக குழந்தைகளை உருவாக்குவதை காட்டிலும், சிறந்த மனிதராக குழந்தையை ஆளாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. இதை புரிந்து கொண்டு, குழந்தைகளின் மழலை உலகத்துக்கு சென்று, அவர்களோடு மனம் விட்டு பேசவும் நேரம் ஒதுக்குவது அவசியம்,'' என்றார்.

No comments:

Post a Comment