எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல், பதிவு உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
மத்திய அரசின், 100க்கும் மேற்பட்ட துறைகளில், மொபைல் மூலமான நிர்வாகத்தை அமலாக்கும், பரீட்சார்த்த திட்டம், நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதன்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், 241 அப்ளிகேஷன்ஸ் வசதி, நேற்று பரிசோதனை அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. இதன்படி, தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி, டைரக்டரி சர்வீஸ் ஆகியவற்றில், இத்திட்டம் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. "மொபைல் சேவா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து, மத்திய அரசின், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர், சத்ய நாராயணா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின், டிக்கெட் உறுதியானதும், மொபைல் போனுக்கு வரும், எஸ்.எம்.எஸ்., தகவல், முழு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதை பின்பற்றி, அரசு துறைகளில், எஸ்.எம்.எஸ்., தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. மொபைல் போன் மூலமான, இ கவர்னன்ஸ் நடைமுறை, படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது, டிஜிட்டல் முறையில் கையெப்பமிடப்பட்ட சான்றிதழ்கள், ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதே பாணியில், மொபைல் போன் மூலம் அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்., தகவல்களும், தகுந்த ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அனைத்து அரசு துறைகளிலும், டிஜிட்டல் கையெழுத்துகள் ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை, நாங்கள் துவக்கியுள்ளோம். இது நடைமுறைக்கு வந்ததும், பொதுமக்களுக்கு, இந்த சேவையின் மூலம், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். விண்ணப்பம் பெறப்பட்டதற்கான தகவல், விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான தகவல் ஆகியவை, எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்பி வைக்கப்படும். இதன் பயனாக, அரசு அலுவலகங்களில், பேப்பர் பயன்பாட்டை குறைக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்
No comments:
Post a Comment