Thursday, 1 August 2013

நல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

 "மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

மதுரையில் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார். இயக்குனர் பேசியதாவது: மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதில் இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சி.இ.ஓ., தலைமையில் டி.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை ஆசிரியர்கள் கொண்ட "தேர்வுக் குழு" அமைக்கப்படும். விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் குறித்து, அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று, அவரது விவரம், மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக ஆற்றிய சேவை, செயல்படுத்திய திட்டங்கள், அவரது பணிக்கால பதிவேடுகள் விசாரிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படும்.

இணை இயக்குனர் அளவிலான நேர்காணலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும். இதன்பின், தேர்வுக் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், விருதுகளுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நடப்பாண்டில் பள்ளிகளில் விளையாட்டிற்காக மட்டும் ரூ.10 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். அறிவியல் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களுடன் ஆசிரியர்கள் நல்லுறவை வளர்க்க வேண்டும், பாடம் தவிர்த்து மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்கள் செயல்பாடு அமைய வேண்டும், என்றார்.

அரசு நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தினர். "கல்வி அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என இயக்குனர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment