சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த 10
ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 284 மாநகராட்சிப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் 1995 முதல் 2000-ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள்.
ஆனால், பல ஆசிரியர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துள்ளனர் என்று புகார் எழுந்தது. இவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற்றதாக போலியான சான்றிதழ்கள் தயாரித்ததாகவும் கூறப்பட்டது. இந்தப் பிரச்னை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சில ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இப்போது இந்தப் பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலி சான்றிதழ் அளித்தவர்கள் மீது விசாரணை முடிவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியதாவது: போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏராளமான ஆசிரியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இப்போது சுமார் 10 பேர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் மோசடி செய்துள்ள மற்ற ஆசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment