Saturday 3 August 2013

சென்னை கம்பன் கழகத்தின் 39-ஆவது ஆண்டு விழா

சென்னை கம்பன் கழகத்தின் 39-ஆவது ஆண்டு விழா ஆகஸ்ட் 9 முதல் 11-ஆம் தேதி வரை மயிலாப்பூர் ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் ஆர்.எம். வீரப்பன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
சென்னை கம்பன் கழகத்தின் 39-ஆவது ஆண்டு விழா ஆகஸ்ட் 9 முதல் 11-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு மயிலாப்பூர் ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு கம்பனில் வாழ்வியல் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. விருது வழங்குதல், தமிழறிஞர்களின் பெயரில் நினைவுப் பரிசுகள் வழங்குதல், நூல் வெளியீட்டு விழா, ஆய்வரங்கம், சொல்லரங்கம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தொடக்க விழாவுக்கு (ஆகஸ்ட் 9) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் தலைமை வகிக்கிறார். ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் "போர் ஒடுங்கும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
விருதுகள், நினைவுப் பரிசுகள்: ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி சிவத்துக்கு கம்பர் விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ. சுந்தரமூர்த்திக்கு கே. சுவாமிநாதன் நினைவுப் பரிசு, தமிழறிஞர் பள்ளத்தூர் பழ. பழனியப்பனுக்கு நீதியரசர் மு.மு. இஸ்மாயில் நினைவுப் பரிசு, தமிழறிஞர் அ.அ. ஞானசுந்தரத்தரசுவுக்கு கம்பன் பற்றிய சிறந்த நூலுக்கான அ.ச.ஞா. நினைவுப் பரிசு, கவிதா பதிப்பகத்தின் சேது சொக்கலிங்கத்துக்கு மர்ரே எஸ். ராஜம் நினைவுப் பரிசு என 14 நபர்களுக்கு ரூ. 1 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளன.
நூல் வெளியீடு: இளம்பிறை மணிமாறன் எழுதிய கிழக்கும் மேற்கும் என்ற ஏவி.எம். அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலை மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தி வெளியிட, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி பெற்றுக் கொள்கிறார்.
"இன்றும் கம்பன்', "இதிகாச இரட்டையர்' ஆகிய ஒலிப்பேழைகளை அவ்வை நடராசன் வெளியிட, திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பெற்றுக் கொள்கிறார்.
2-ஆவது நாள் விழாவில் (ஆகஸ்ட் 10) "கம்பன் போற்றும் சகோதரத்துவம்' என்ற தலைப்பில் ஜி.எஸ். சிம்மாஞ்சனா, "உள்ளும் புறமும்' என்ற தலைப்பில் சிலம்பொலி செல்லப்பன், "எல்லை ஒன்றின்மை' என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் ஆகியோர் பேசுகின்றனர்.
அ. அறிவொளி தலைமையில் "கம்பனை வினவும் காப்பிய மாந்தர்' என்ற தலைப்பில் தெளிவுறு அரங்கம், பர்வீன் சுல்தானா தலைமையில் "காப்பிய அறத்திற்குப் பெரிதும் துணை நிற்பவர்' என்ற தலைப்பில் மாணவர் அரங்கமும், தெ.ஞானசுந்தரம் தலைமையில் "கம்ப நாடகத்தில் எவர் வாதம் பெரிதும் நம்மை ஈர்க்கிறது' என்ற தலைப்பில் சுழலும் சொல்லரங்கமும் நடைபெறவுள்ளது.
நிறைவு நாளில் (ஆகஸ்ட் 11) அப்துல் காதர் தலைமையில் "அரியணை அரசியல்' என்ற தலைப்பில் கவியரங்கம், மு. ராமச்சந்திரன் தலைமையில் சொல்லில் "ஒளிரும் சுடர்' என்ற தலைப்பில் தமிழ்ச் சோலை அரங்கம், இலங்கை ஜெயராஜ் தலைமையில் "கம்பன் வாழ்வியல் நெறிகளைப் பெரிதும் உணர்த்துவது நாட்டில் நிகழ்ந்தவையே', "காட்டில் நிகழ்ந்தவையே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஆகியவை நடைபெறவுள்ளய என்றார் ஆர்.எம். வீரப்பன்.
பேட்டியின்போது திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஆன்மிகச் சொற்பொழிவாளர் சாரதாநம்பி ஆரூரான், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment