மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!
நமது சமூகத்தை ஒரு மோகம் ஆட்டிப் படைக்கிறது.
அது, இன்ஜினியரிங் தொழில்நுட்ப மோகம். இன்றைய காலத்தில், பிறக்கும்
குழந்தைகள் எல்லாம், தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மூளையுடனேயே பிறக்கின்றன
என்பது பெற்றோர் உள்ளிட்ட பலரின் நினைப்பு.
இன்றைய மாணவர்களிடம், நீங்கள் மேற்படிப்பில்
என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால், பெரும்பாலானோர், பொறியியல்,
தொழில்நுட்ப படிப்புகளையே கூறுவார்கள். அதற்கடுத்து, ஆங்கில மருத்துவம்
சார்ந்த படிப்புகளைக் கூறுவார்கள். ஆனாலும், மருத்துவம் சார்
படிப்புகளைவிட, பொறியியல் படிப்பு என்பது, பல காரணங்களுக்காக, பலரையும்
கவரும் ஒன்றாக இருக்கிறது.எதிர்பார்ப்புகள்
படிப்பை முடித்தவுடன் நல்ல வேலை கிடைக்க வேண்டும், சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்க வேண்டும் மற்றும் சுகமான வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள், இந்தியாவைப் பொறுத்தவரை வழக்கமானவையே. பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகள்தான் இத்தகைய ஒரு வாழ்க்கை நிலையை அமைத்துத் தரும் மற்றும் இதர கலை, அறிவியல் படிப்புகளால் பெரிதாக பயன் ஒன்றும் கிடையாது என்ற ஒரு பொது மனோநிலை, பள்ளி மாணவர்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
இதனால், பலிகடா ஆக்கப்படுவது மாணவர்கள்தான். மனித மூளையானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சில மூளைகள், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியதாக இருக்கலாம். சில மூளைகள் கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் சமூக நெருக்கடிகளுக்காகவும், போலியான மாயைகளுக்காகவும் பல மூளைத்திறன்கள், நமது இன்றைய சமூகத்தில் வீணடிக்கப்படுகின்றன என்பதே உண்மை.
பொருளாதார தாராளமய சுரண்டலால், மனித சமூகத்தின் பல கலை மற்றும் பண்பாட்டு அமைப்புகள், இந்தியாவைப் பொறுத்தவரை அமுக்கப்பட்டு மற்றும் அழிக்கப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் மட்டுமே, சமூக வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் உகந்தவை என்ற கருத்தாக்கத்தால், பல எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.
பன்முகப் படிப்புகள்
இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு சார்ந்த படிப்புகள், வரலாற்றுப் படிப்புகள், இயற்பியல், கணிதம் போன்ற அடிப்படை அறிவியல் படிப்புகள், பொருளாதாரம், வணிகம் மற்றும் நிதி சார்ந்த படிப்புகள், அலங்காரம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த படிப்புகள், மீடியா மற்றும் திரைப்படம் சார்ந்த படிப்புகள், சுற்றுலா மற்றும் உணவகம் சார்ந்த படிப்புகள், சுற்றுச்சூழல் மற்றும் தாவர-விலங்கினம் சார்ந்த படிப்புகள் மற்றும் வேளாண்மை படிப்புகள் என்று பல்வேறான படிப்புகள் இருக்கின்றன. இப்படிப்புகள், தங்களுக்குள் ஏராளமான வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ளன என்பதை கவனிக்க வேண்டும்.
வாழ்க்கைத் திறன்கள்
புதிய விஷயங்களைக் கற்றுகொள்ளும் ஆர்வம், படைப்பாக்க திறன், சவாலை எதிர்கொள்ளும் மன தைரியம், விடா முயற்சி, கடின உழைப்பு, சாமர்த்தியம், நேர்மை, எளிதில் புரிந்துகொள்ளும் திறன், சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பக்குவம், நிதானம், சரியான முடிவெடுக்கும் திறன், குழுவாக இணைந்து செயல்படும் திறன், தலைமைத்துவ பண்பு மற்றும் நல்ல உடல் ஆரோக்கியம் போன்ற தகுதிகளில் பெரும்பாலானவற்றை பெற்ற ஒரு மாணவர், வாழ்க்கையில் அடையும் வெற்றிகளுக்கு அளவேயில்லை. இவற்றில் பாதி தகுதிகளைப் பெற்றிருந்தாலும்கூட, நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
நம்மை சுற்றி...
நம்மை சுற்றி என்ன இருக்கிறது மற்றும் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே, மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். குறைந்தபட்சம், நாள்தோறும் பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் என்ன நடக்கிறது, எந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது என்பதை தெரிந்துகொண்டால், தனக்கான படிப்பு எது என்பதை ஒரு மாணவர் முடிவுசெய்வது எளிதாக இருக்கும்.
தனது விருப்பத்திற்கு ஏற்ற படிப்பிற்கு எதுபோன்ற வேலைவாய்ப்புகள் இருக்கின்றன மற்றும் நேரடி படிப்பாக இல்லாமல், அது தொடர்புடைய படிப்புகளுக்கு எதுமாதிரியான வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். தொழில்நுட்ப படிப்புகள் என்ற மாயைக்குள், தேவையின்றி சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மறந்துவிடாதீர்கள்
மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம் மாணவர்களே!...
உங்களின் மூளை பன்முக பரிமாணத்தைக் கொண்டது. அதன் அற்புதங்களையும், சிறப்புகளையும் எளிதில் விளக்கிவிட முடியாது. எனவே, இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி சார்ந்த படிப்புகளில்தான் நீங்கள் சாதிக்கப் பிறந்துள்ளதாய் அவசரப்பட்டு முடிவுசெய்து விடாதீர்கள்.
நிதானமாக, நன்கு யோசித்து முடிவெடுங்கள்...வாழ்வில் சாதித்து மகிழுங்கள்...வாழ்த்துக்கள்!
Thanks for sharing this with us it is a worth read.
ReplyDeletedigital marketing chennai, digital marketing courses chennai, digital media marketing chennai, digital marketing expert chennai, digital marketing jobs in chennai for freshers