பொறியியலாளர்களே தயங்காமல் தயாராகுங்கள்...அக்டோபர் 06,2013,17:53 IST
உருவாகும் அத்தனை பொறியியலாளர்களும் பணிச் சூழலுக்குத் தயாரானவர்களாக இருப்பதில்லை என்ற கருத்து கடந்த சில வருடங்களாக இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படும், தீர்வை கண்டுகொள்வதற்காக ஆலோசிக்கப்படும் கருத்தாகவும் இருந்து வருகிறது.
ஆனால், அதைக் கடந்து இந்திய பொறியியலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு இந்தியாவில் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், பரந்து விரிந்த உலகம் திறன் வாய்ந்த இந்திய பொறியியலாளர்களை இரு கரம் நீட்டி அழைக்க தயாராக இருக்கிறது என்பதுதான் உண்மை.
ஏனெனில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள மாணவர்கள் கணிதத்தையும், இயற்பியலையும் கடினமான பாடங்களாக கருதுவதால் பொறியியலை தேர்தெடுத்து படிப்பதில் ஆர்வமின்றி உள்ளனர். அதனால் அந்த நாடுகள் பொறியியலாளர்களின் தேவைப்பாட்டை, தங்கள் நாடுகளில் உள்ள மனித வளத்தைக் கொண்டு தீர்க்க முடியாமல் உள்ளனர்.
எனவே நடைமுறை பணிக்கேற்ற திறனுடன், படிப்பை முடித்து தயாராக வரும் மாணவர்களுக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பணி வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் உலக அளவில் இந்திய பொறியியலாளர்களுக்கு கிடைக்கும் பணி வாய்ப்பினை தட்டி பறிப்பவர்களாக சீனப் பொறியியல் மாணவர்கள் உள்ளனர். தனித் திறன்களில் இந்தியர்களை விட அதிகம் திறமையுள்ளவர்களாக அவர்கள் இருந்தாலும், எத்தைகைய சூழ்நிலையிலும் பணியாற்றுவதிலும், மொழித் திறனிலும் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள மாணவர்களிடையே தகவல் தொழில்நுட்பத் துறை தான் சிறந்தது என்ற மனோபாவம் அதிகமாக உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், சிஸ்டம்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது.
பொறியியல் மாணவர்கள், பொறியாளர்கள் தங்களை மெருகேற்றிக்கொள்வதற்காக "தி இன்ஸ்டிடீயூஷன் ஆஃப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி" போன்ற அமைப்புகளும் உள்ளது. மாணவர்களின் லட்சியம், லட்சியத்திற்காக மேற்கொண்ட பயணம் மிகச் சரியானதாக இருந்தால் தங்களுக்கான இடத்தை உலகின் எந்த மூலையிலிருந்தும் பெறலாம். தயங்காமல் தயாராகுங்கள் பொறியியலாளர்களே...
No comments:
Post a Comment