டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
புதிய பாடத்திட்டம்
தமிழக அரசில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி முதல் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிகள் வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வுசெய்து வருகிறது.
கடும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் அரசுப் பணிகளுக்கு திறமையான ஊழியர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. அண்மையில் மாற்றியமைத்தது. பழைய பாடத்திட்டங்கள் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டதுடன் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் ரீசனிங் என்று அழைக்கப்படும் நுண்ணறிவுத்திறன் தொடர்பான புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டது.
நுண்ணறிவுத்திறன் பகுதி
வழக்கமாக, வங்கித் தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில்தான் ரீசனிங் பகுதி இருக்கும். படங்கள், அறிவாற்றலை சோதிக்கும் இந்த பகுதி என்றாலே பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு சற்று நடுக்கம்தான். இந்த பகுதிக்கு பயந்தே வங்கி, ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வுகளை தவிர்க்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் அதிகம். இத்தகையோர் பெரிதும் நம்பியிருப்பது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைத்தான்.
அரசு பள்ளிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த, கடினமாக உழைக்கக் கூடிய, பெரிய பயிற்சி நிறுவனங்களில் அதிக பணம் செலவழித்து படிக்க இயலாத நிலையில் உள்ள பல கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தமிழக அரசுப் பணிகளில் சேர்ந்தனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு
இந்தச் சூழ்நிலையில், குருப்-1, குருப்-2, குருப்-4, கிராம நிர்வாக அதிகாரி தேர்வு என அனைத்து தேர்வுகளிலும் நுண்ணறிவுத்திறன் என்ற பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. சேர்த்தது. வெறும் எழுத்துத்தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பணிக்கு தேர்வு செய்யப்படும் குருப்-4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் இந்த பகுதியில் இருந்து 25 வினாக்கள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 37.5 மதிப்பெண் கிடைக்கும். எனவே, தேர்வில் தேர்ச்சியை நிர்ணயிப்பதில் இந்த பகுதிக்கு முக்கிய பங்கு உண்டு.
இதேபோல், முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு கொண்ட குருப்-2, குருப்-1 தேர்வுகளிலும் ரீசனிங் பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கணிசமான மதிப்பெண் ஒதுக்கப்பட்டு இருப்பதால் இந்த பகுதியில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு செல்ல முடியாது. ரீசனிங் பகுதியை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தின்படி, 5,566 காலி பணி இடங்களை நிரப்ப கடந்த மாதம் குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள், தமிழ் தாள், பொது அறிவு பகுதிகளில் நல்ல முறையில் விடை அளி்த்ததாகவும் ரீசனிங் பகுதி வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க இயலவில்லை என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
அரசுக்கு கோரிக்கை
துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், தலைமைச் செயலக பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த தேர்வும், புதிய பாடத்திட்டத்துடன் நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளின் முடிவு வெளியாகும்போது பாதிப்பின் உண்மை நிலவரம் தெரியும்.
கிராமப்புற மாணவர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு ரீசனிங் பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம். அல்லது ரீசனிங் பாடத்திட்டத்தை எதிர்கொள்ள கிராமப்புற மாணவர்கள் தயாராக வேண்டும். இதில் எது நடந்தாலும் விரைவாக நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.