மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமையாசிரியர்கள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
பள்ளி மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும்போது உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதும், ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் மாணவர்கள் பயணம் செய்யும் நிலையும் உள்ளது. மாணவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இத்தகைய செயல்கள் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பதை இறைவணக்கக் கூட்டம் மற்றும் மாணவர் மன்றக் கூட்டங்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் அறுவுறுத்த வேண்டும்.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிவறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதிலும் தலைமை ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் டெங்கு போன்ற காய்ச்சல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் போதிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பழைய கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள், இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்கள் ஆகியவை இருந்தால், அவற்றை உடனே அகற்ற வேண்டும்.
பெற்றோர்-ஆசிரியர் கழகம் வாயிலாக தலைமையாசிரியர்கள் அவ்வப்போது மாணவர்களின் பெற்றோரை அழைத்துக் கூட்டம் நடத்த வேண்டும். அதில் பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை பள்ளித் தலைமையாசிரியர்கள் பின்பற்றுவதை மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும்.
மாணவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு அலுவலர்கள் தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment