மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக மாவட்டந்தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மாநிலம் முழுவதும் 128 பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றை இணையதளம் மூலம் இணைக்கும் திட்டத்தை தொடக்க கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் புது முயற்சியாக அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தி, அனைத்து வகுப்புகளையும் அதில் ஒருங்கிணைத்து பயிலும் திட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மாவட்டந் தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மொத்தம் 128 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு இணையதளம் மூலம் இணைக்கப்பட உள்ளது. அவ்வாறு இணைக்கப்படும் பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்டந்தோறும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக் குழுவில் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ., மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், தலா இரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆர்வமுடைய பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இடம்பெறுவர்.
குழுவில் இடம்பெறும் ஆசிரியர்களுக்கு கணினி, விடியோ கான்பரன்சிங் மேற்கொள்வது போன்ற தொழில்நுட்பம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இணையதள வசதி இருக்க வேண்டும். போதிய இட வசதி, மின் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு மாநில தொடக்க கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
தவிர, அந்தந்த மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பள்ளியின் பெயர், முகவரி, கைப்பேசி விவரம் குறித்து வரும் அக்டோபர் 5-ம் தேதிக்குள் மாநில தொடக்கக் கல்வி இணை இயக்குநருக்கு (நிர்வாகம்) மின்னஞ்சல் (இ-மெயில்) செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் ராமராசு கூறியது:
தனியார் பள்ளிகளுக்கு நிகராக தொடக்கக் கல்வித் துறை முதன்முறையாக அரசு நடுநிலைப் பள்ளிகளை இணையதளம் மூலம் இணைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல், புதிய படைப்பாற்றல், குழுப் பணி (குரூப் டிஸ்கசன்) வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கம்.
அதே வேளையில் ஆசிரியர்கள் கலந்தாலோசித்து கற்பிக்கும் பணியை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமையும். அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் கணினி வழங்கி இணையதளம் மூலம் இணைத்தால் பள்ளி மாணவர்கள் தொடக்க கல்வி முதலே கணினி அறிவு பெற வாய்ப்பாக அமையும் என்றார்.