Tuesday, 19 November 2013

சீரமைக்க வேண்டும்!

அனைவருக்கும் கல்வி தரமாய் சமமாய் தர வேண்டுமென்று நம் அரசியல் சாசனம் சொல்கிறது. உலகிற்கே வழிகாட்டிய நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்த இந்தியா இன்று உலகத் தரவரிசைப் பட்டியலில் நூறில் கூட இடம் பிடிக்காதது வேதனை கலந்த கசப்பான உண்மை. வரலாற்றுச் சறுக்கலும் கூட.

இந்திய மக்கள் தொகையில் சுமார் 40% எழுத்தறிவில்லாதவர்கள் எணும் போது எங்கோ தொடர் தவறு நிகழ்கிறது என்ற நிதர்சனம் ஆய்வுக்குரியது. பள்ளியிறுதி வாய்ப்பும் உயர்நிலைக் கல்வி பயிலும் சதவீதமும் மிகச் சொற்பமாக இருப்பதும் கவலைக்கும் - கவனத்திற்கும் உரிய செய்திகளே.
இந்திய மாணவர்கள் அயல் நாடுகள் சென்று பயில்வதால் அன்னியச் செலாவணி பல கோடி இழப்பு எனும் போது மனசு ஆற்றாமையால் பொங்கி ஆதங்கப் படுகிறது.
தரமான உயர்கல்வி நிறுவனங்கள் - தொழில் துறை பங்களிப்பு - கல்வி முதலீடு பற்றாக்குறை - அரசின் கட்டுப்பாடு என்றெல்லாம் இடர்பாடுகள் இருப்பது சிந்தனைக்கும் விவாதத்திற்கும் ஏற்புடைய காரணிகள்.
தேர்ந்த உயர்கல்வி ஆசிரியர்கள் இல்லாதது அல்லது பற்றாக்குறை என்பது நீடிக்கத்தான் செய்கிறது. கல்வித்தரம் என்பது வகுப்பறை போதனைகளைத் தாண்டியது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். அடிப்படை ஆரம்பக் கல்வியே அர்த்தமுள்ளதாக, திறனை வளர்த்தெடுப்பதாக அமைக்கப்படவில்லையே? மேலும் பள்ளிக் கல்வியும் இமாலய மாற்றம் அடையவேண்டியது மிகவும் அவசியம். மனனம் செய்து எழுதித் துப்பும் தேர்வு முறையில் ஒரு மாணவர்ன் அறிவை - ஆளுமையை - ஆற்றலை - மதிப்பீடு செய்வது எங்ஙனம் சரியான வழிமுறையாக இருக்கும். தட்டித் தடுமாறி உயர்கல்விக்கு காலடி எடுத்து வைத்தாலும் பயிற்றுமொழி ஒரு பிரச்னை. இது போதாமல் ராகிங் கொடுமையை எல்லாம் தாண்டி அவன் மிளிரவேண்டும். அரசியல்வாதிகளின் ஆடுபுலி ஆட்டத்தில் எப்போதும் தோற்பவர் மிஸ்டர் பொதுஜனம்தானே.
ஆசிரியர் பணி மிகவும் புனிதமானது. அப்பணிகேற்ப தன்னை தகுதிபடுத்திக் கொண்டு தன்னை நம்பிவரும் மழலைகளை - விடலைகளை மேதைகளாகக்கா விட்டாலும் மேன்மையானவர்களாக சமுதாயத்தில் நல்ல மாணவர்களாக மாற்றி அனுப்பி வைக்கிறார்களா என்று கவனித்தால் அதுவும் கேள்விக்குறியே? ஆசிரியர்கள் தம்மை தாமே ஆத்ம பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய சூழலில் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.
ஆசிரிய பெருமக்களுக்கு புத்தாக்கப்பயிற்சி, பணியிடைப்பயிற்சி என நவீன கல்வியறிவை பட்டைத்தீட்டிக் கொண்டு அதனைப் பயன்படுத்தி வருங்கால இந்திய இளைய சமுதாயத்தினரை சுடர்விடச் செய்ய துணைபுரியாமல் சுணக்கம் காட்டுகிறார்கள் என்பது வேதனை கலந்த செய்தி. நாம் கல்வியில் சிறந்து விளங்கி, ஒளி வீசிட கல்வி முறையில் கட்டாயம் மாற்றம் தேவை. அது இந்த நாட்டை நிர்மாணிக்கும் வல்லமைப் படைத்த இளைஞர்களை உருவாக்கும் தேசியப்பணி. அச்செவ்வியப் பணிகள் ஆசிரியர்களிடமிருந்தே தொடங்கப்பட வேண்டும்.
ஆசிரியரின் அறிவுசார் தேடல் சமூகநோக்குடன் பரந்து பண்பட்ட மனதோடு இருக்க வேண்டும். அப்படி நிகழந்தால் வெளிநாடு சென்று படிப்பது குறைந்து இந்திய நாடே உயர் கல்வியில் முன்னேற்றம் பெற்று அதில் தன்னிறைவு அடையும் நிலை வரும். மிகத் தரமானவர்கள் என்று கருதும் மாணவர்கள் மருத்துவம் - பொறியியல் - வணிக நிர்வாகவியல் - இந்திய ஆட்சிப்பணி - என்ற உயர்பதவிப் படிப்புகளில் காலூன்றவே பெரிதும் விழைகிறார்கள். கல்வித்துறையில் சீரமைப்பு இல்லாமல் உலகத் தரத்திற்கு விழைவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்

No comments:

Post a Comment