Tuesday, 19 November 2013

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எஸ்.அருளப்பன் உள்பட 129 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நாங்கள் பணிபுரிகிறோம். உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த 1988-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி உறுதி செய்தது. இதன்படி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும், அனைத்து பலன்களையும் எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணை நடந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி இடைநிலை ஆசிரியர்கள் கோரும் ஊதியம் வழங்க முடியாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் அனைவரும் பள்ளி கல்வி இயக்ககத்தின் உயர்கல்வி விதிகளின் கீழ் வருகின்றனர். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் வருகின்றனர்.
மனுதாரர்களை தொடக்கக் கல்வி இயக்ககத்தின் விதிகளுடன் ஒப்பிட முடியாது. உயர்நீதிமன்ற அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகள் வேறுபட்டவை. அவை மனுதாரர்களுக்குப் பொருந்தாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment